சுகாதார வழிகாட்டல்களை ஊதாசீனப்படுத்தினால் நாடு முடக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது | தினகரன் வாரமஞ்சரி

சுகாதார வழிகாட்டல்களை ஊதாசீனப்படுத்தினால் நாடு முடக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது

இலங்கையில் கொவிட் 19தொற்றுக்கு உள்ளானவர்களாக நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்றவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில்  பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் இத்தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமிருப்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறான நிலையில் இலங்கையில் இத்தொற்றின் தற்போதைய நிலைமை தொடர்பில் சுகாதார அமைச்சின் பேச்சாளரான சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத், 'தினகரன் வாரமஞ்சரி'க்கு விஷேட பேட்டியொன்றை அளித்திருக்கின்றார். அப்பேட்டி விரிவாக.....

கேள்வி: நாட்டில் முன்னெடுக்கப்பட்ட கடும் அர்ப்பணிப்பு மிக்க நடவடிக்கைகளின் ஊடாக கொவிட் 19தொற்றின் மூன்றாவது கட்டுப்பாடடுக்கு கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் கடந்த சில தினங்களாக இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவது தொடர்பில் சுருக்கமாக விபரிக்க முடியுமா?

பதில்: ஆம். நாட்டில் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் எதிர்பார்த்த அளவுக்கு இத்தொற்று குறைவடையவில்லை என்பதை முதலில் குறிப்பிட்டாக வேண்டும். இந்நாடும் இத்தொற்று அச்சுறுத்தலில் இருந்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அதற்கான சூழல் தற்போது காணப்படுவதாக நான் கருதவில்லை. கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இத்தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டது. அப்போது தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்ைக ஓரிரு தினங்களில் மாத்திரமே 500ஐத் தாண்டியது. ஆனாலும் அந்த எண்ணிக்கை ஒரு போதும் ஆயிரத்தைத் தாண்டவில்லை. இம்முறை நிலைமை அவ்வாறில்லை. தினமும் அறுநூறுக்கு மேற்பட்டவர்கள் நாளாந்தம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். இது இத்தொற்று இன்னும் கட்டுப்பாட்டு நிலையை அடையவில்லை என்பதை இது தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

ஆனாலும் நாட்டை எந்நாளும் முடக்கி வைத்திருக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தி அன்றாட நடவடிக்கைளுக்கு இடமளிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வளவுதான். இந்த சூழலை மிகவும் பொறுப்புடனும் முன்னவதானத்துடனும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதைவிடுத்து நாட்டை மீண்டும் முடக்குவதற்கு வழிசமைத்து எவரும் செயற்படக் கூடாது. அவ்வாறு செயற்படுவது நாடும் மக்களும் இத்தொற்றின் பெரும் பாதிப்புக்கு முகம்கொடுக்கவே வழிவகுக்கும்.

குறிப்பாக கடந்த மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்தவென நாட்டை முடக்கியதால் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அரச, தனியார் துறையினருக்கு மாதாந்த சம்பளம் கிடைக்கப்பெற்றது. ஆனால் இத்தொற்றின் மற்றொரு அலை தோற்றம் பெற்று நாட்டை முடக்க வேண்டிய நிலை மீண்டும் ஏற்பட்டால் மாத சம்பளம் கூட வழங்க முடியாத நிலைக்கு பெரும்பாலான கம்பனிகள் உட்பட அரச நிறுவனங்கள் கூட உள்ளாகலாம். அதனால் தற்போதைய சூழலில் மிகுந்த முன்னவதானத்துடனும் பாதுகாப்புடனும் செயற்படுவது இன்றியமையாததாகும்.

கேள்வி: இந்நாட்டில் கொவிட் 19தொற்று பரவுதல் நிலைமை எவ்வாறுள்ளது?

பதில்: தற்போது தினமும் 600க்கு மேற்பட்டவர்கள் இத்தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர் உயிரிழப்பும் 15முதல்- 20வரை தினமும் பதிவாகின்றது. இவை இத்தொற்று திருப்தியடையக்கூடிய வகையில் குறைவடையவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. ஆனாலும் இத்தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவில் குறைவடைந்திருப்பதால் மக்களின் அத்தியாவசியப் பொருளாதார செயற்பாடுகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளை அநாவசிய செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தலாகாது. அத்தோடு இத்தளர்வை அனைத்து செயற்பாடுகளுக்கும் உரியது எனவும் கருதவும் கூடாது.

இத்தொற்றானது நுளம்பினாலோ, காற்றினாலோ பரவுவதில்லை. மாறாக மனிதர்கள் ஊடாகப் பரவும் தொற்று இது. அவர்கள் தான் இதனைக் காவிப் பரப்புகின்றனர். அதன் விளைவாகவே பயணக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தி மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதைய சூழலில் மக்கள் மீண்டும் கட்டுப்பாடற்ற நடமாட்டங்களையும் பயணங்களையும் மேற்கொள்ளத் தொடங்கினால் இத்தொற்று மீண்டும் தீவிரமடையவே செய்யும். அதனால் இப்போதைக்கு இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி அடிப்படை சுகாதார வழிகாட்டல்களாகும்.

இத்தொற்று மீண்டும் தீவிரமடையத் தொடங்கினால் முதலில் பாடசாலைகள் தான் மூடப்படும். இதன் விளைவாக பிள்ளைகளின் கல்வி மீண்டும் பாதிக்கப்படும். அதனை தொடர்ந்து ஏனைய துறைகளும் பாதிக்கப்படும். அதனால் இத்தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்துவதில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் இத்தொற்றாளர்களால் வைத்தியசாலைகள் நிரம்பிவிடும். எல்லா இடங்களிலும் நோயாளர்கள் காணப்படும் நிலைமை உருவாகும். இது தான் கடந்த முறை ஏற்பட்டது. அதனால் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றினால் தான் இத்தொற்றை இப்போதே கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இல்லாவிட்டால் நாம் எதிர்பாராத பேரழிவுக்கு இத்தொற்றினால் நாடு முகம் கொடுக்க முடியும்.

கேள்வி: டிசம்பராகும் போது நிலைமை மிக மோசமடையும் என்றும் இந்நாடு நாலாவது அலையை நோக்கி நகர்கிறது என்றும் கூறப்படுகிறதே?

பதில்: கொவிட் 19தொற்று தவிர்ப்புக்கான வழிகாட்டல்கள் தொடர்பில் கடந்த 10நாட்களுக்குள் உதாசீனமாகவும் கவனயீனமாகவும் நடந்து கொண்டதன் விளைவாகவே இத்தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறு நடந்து கொண்டவர்கள் தான் தொற்றாளர்களாக அடையாளமும் காணப்படுகின்றனர். இதனை இப்போதே கட்டுப்படுத்தத் தவறினால் நிச்சயம் இத்தொற்று தீவிரமடைய முடியும்.

நாளொன்றுக்கு 5,000பேர் படி தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலைமை ஏற்பட்டால் தினமும் 50ஆயிரம் தொற்றாளர்களை முகாமை செய்ய வேண்டிய நிலைமை எமக்கு ஏற்படும். அதேபோன்று நாளொன்றுக்கு 6,000பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படும் நிலைமை ஏற்பட்டால் 60ஆயிரம் தொற்றாளர்களை முகாமை செய்ய வேண்டிய நிலைமை எமக்கு உருவாகும். இத்தொற்றாளர்கள் ஒவ்வொருவரையும் பத்து நாட்கள் வைத்தியசாலைகளில் தங்க வைத்திருக்க வேண்டும். ஆனால் நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் 80ஆயிரம் கட்டில்கள் தான் மொத்தமாக உள்ளன. அப்படியென்றால் 80ஆயிரம் கட்டில்களையும் இத்தொற்றாளர்களுக்காகவே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதனால் தற்போது நாளொன்றுக்கு 500, 600என்ற படி பதிவாகும் தொற்றாளர்களை 400, 300என்றபடி குறைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி: இத்தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் எவ்வளவோ பிரசாரம் செய்யப்பட்ட போதிலும் அவை தொடர்பில் மக்கள் கவனயீனமாகவும் அசிரத்தையோடும் நடந்து கொள்கின்றனரே?

பதில்: நாட்டில் சட்டம் உள்ளது. அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொரு நிறுவனத்துக்கும் இருக்கின்றது. உதாரணமாக பஸ் வண்டிகள் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை தனியான அதிகார சபையொன்று கொண்டுள்ளது. அதேபோன்று ரயில்கள் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ரயில்வே திணைக்களம் கொண்டுள்ளது. காலி முகத்திடல் தொடர்பான சட்டங்களை கொழும்பு மாநாகர சபை நடைமுறைப்படுத்துகிறது. இவ்வாறு ஒவ்வொரு துறை தொடர்பிலும் ஒழுங்குபடுத்தல் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள் தம் பொறுப்புகளை உரிய முறையில் நிர்வகிக்காது மக்கள் கூட்டமாக இருப்பதையும் நடமாடுவதையும் பயணங்களை மேற்கொள்வதையும் இத்தொற்று தவிர்ப்புக்கான சட்டங்களை மீறுவதையும் கண்டும் காணாதது போன்று நடந்து கொண்டால் எம்மாலும் ஒன்றும் செய்ய முடியாது. சுகாதாரத் துறையிலுள்ள அனைத்து கட்டில்களும் நிரம்பியதும் நாமும் ஒதுங்கியிருந்து நிலமையைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். அதனால் தற்போதைய சூழலில் ஒவ்வொரு நிறுவனமும் தம்மால் எதுவும் செய்யமுடியாது என்றிராது தமது நிறுவனத்திற்குரிய கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். குடிமக்கள் என்ற வகையில் தமது பொறுப்பை மக்களும் நிறைவேற்றுவது அவசியம். உதாரணமாக விக்டோரியா பூங்காவில் சுகாதார வழிகாட்டல்களைப் பேணாது மக்கள் நடந்து கொள்கின்றார்கள் என்றால் அப்பூங்காவை இழுத்து மூடிவிட வேண்டும். இதேபோன்று காலி முகத்திடல் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதேபோன்று ரயில், பஸ்ஸில் குறிக்கப்பட்ட அளவு பயணிகள் இருப்பார்களாயின் ஏனைய தரிப்பிடங்களில் அவற்றை தரித்து செல்ல அனுமதிக்கக்கூடாது.

அவ்வாறான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்காது இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறையினர் தான் மேற்கொள்ள வேண்டும் என்று இருக்கக்கூடாது. இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்தும் எல்லாப் பொறுப்புக்களையும் சுகாதார துறையினரால் மாத்திரம் நிறைவேற்ற முடியாது. ஏனைய நிறுவனங்களும் இது தொடர்பில் ஆற்ற வேண்டிய தம் பொறுப்புக்களை நிறைவேற்றுவது அவசியம். இவற்றைச் செய்யாது மக்களைக் குறைகூறுவதில் அர்த்தமில்லை.

கேள்வி: கொவிட் 19தொற்று கட்டுப்பாட்டுக்கான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் அசிரத்தையோடு மக்கள் செயற்பட 'தடுப்பூசி பெற்று விட்டோம்' என்ற மனநிலை காரணமாக இருக்கலாமா?

பதில்: இத்தொற்றைப் பொறுத்த வரையில் தற்போதுள்ள தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கும் இத்தொற்று ஏற்படலாம். அதனைத் தடுப்பூசியினால் தடுக்க முடியாது.

தற்போது நாட்டின் சனத்தொகையில் 60வீதத்திற்கு மேற்பட்டோருக்கு இத்தடுப்பூசியின் இரண்டு சொட்டுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. 70வீதத்திற்கும் மேற்பட்டோருக்கு இத்தடுப்பூசியின் முதல் சொட்டாவது பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களும் நிறையவே இருக்கின்றனர். அவர்களும் இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இத்தடுப்பூசியின் ஊடாக இத்தொற்றின் தீவிரத்தன்மையைக் குறைத்துக் கொள்ளலாமேயொழிய அது தொற்றுவதையோ ஏனையவர்களுக்கு பரவுவதையோ கட்டுப்படுத்த முடியாது. அதனால் இத்தடுப்பூசி தொடர்பான தவறான நம்பிக்கைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

கேள்வி: நிறைவாக மக்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரைகள் யாது?

பதில்: கொவிட் 10தொற்று தவிர்ப்புக்கான அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களை ஒவ்வொருவரும் உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும். அதுவே இன்றைய உடனடித் தேவையாகும். இத்தொற்றுத் தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்கள் மிகவும் முக்கியமானவை. இவ்வழிகாட்டல்கள் ஒழுங்குமுறையாகக் கடைபிடிக்கப்பட்டால் இத்தொற்றின் எந்த திரிபும் அச்சுறுத்தலாக இராது. அதனால் இத்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பு நேரும் வரையும் பார்த்துக் கொண்டிராது, இற்றை வரையும் பொறுப்புடன் செயற்பட்டது போன்று எதிர்வரும் சொற்ப காலத்திற்கும் பொறுப்புடனும் பொறுமையுடனும் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும். அப்போது இத்தொற்று மீண்டும் தீவிரமடைய வாய்ப்பைப் பெறாது.

பேட்டி கண்டவர்: மர்லின் மரிக்கார்

Comments