பங்காளிக் கட்சிகளின் நோக்கம் புரியவில்லை! | தினகரன் வாரமஞ்சரி

பங்காளிக் கட்சிகளின் நோக்கம் புரியவில்லை!

தொழிற்சங்கப் போராட்டத்தினால் மின்சார விநியோகம் தடைப்படாத வகையில் நாடெங்கும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று மின்வலு அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ‘அரசாங்கத்தின் செயற்பாடுகளில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு ஓரணியாக முன்செல்ல முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அரசிலிருந்து விலகிச் செல்ல முடியும் என்றும்’ அமைச்சர் காமினி லொக்குகே கூறினார். எமக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

கே: யுகதனவி அனல்மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: நவம்பர் மூன்றாம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க இருப்பதாகவும் இதனால் எழுபத்துஇரண்டு மணித்தியாலங்கள் நாடு இருளில் மூழ்கும் என்றும் அவர்கள் தமது முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தனர். அது மாத்திரமன்றி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கான எரிபொருள் விநியோகத்தையும் முடக்கப் போவதாகக் கூறினார்கள். எனினும், இவர்களின் இந்தப் போராட்டம் ஏன் பலவீனம் அடைந்தது என்பதைப் பார்க்க வேண்டும்.

உண்மையான நிலைமையை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சாரசபை ஊழியர்களுக்கு நாம் விளங்கப்படுத்தினோம். யுகதனவி விடயம் குறித்த இவர்களின் கருத்துகளை நோக்கும் போது ஒட்டுமொத்த மின்சார சபையும் அமெரிக்காவுக்கு வழங்கப்படப் போவதாக மக்கள் நினைத்திருக்கலாம். மின்சக்தி உருவாக்கம் குறித்த எமது திட்டத்தில் யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படுவதுடன், இது ஐந்து வீதத்திலும் குறைவானதாகவே அமையும். எனினும், மின் உற்பத்தி மற்றும் பெற்றோலியத் துறையில் அமெரிக்கா ஏகபோக உரிமையைக் கொண்டிருக்கப் போகிறது எனக் காண்பிக்கவே தொழிற்சங்கங்கள் முயற்சிக்கின்றன. எனினும், இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் அறுபது வீதமான பங்குகளை இலங்கையைச் சேர்ந்த பணிப்பாளர்களே நிர்வகிப்பார்கள். சட்டரீதியான பின்புலத்தைக் கொண்டவர்கள் இதனைப் புரிந்து கொள்வார்கள்.

நியூ போர்ரெஸ் எனேர்ஜி நிறுவனத்தினால் நாடு முழுவதும் எல்.என்.ஜி விநியோகிக்கப்படும். லக்விஜய அனல் மின்நிலையத்துக்கு நிலக்கரி விநியோகிப்பதற்கு காணப்படும் கம்பனி போன்றதாக இது காணப்படும். இந்த அனல்மின் நிலையத்தில் சீன நாட்டவரின் பிரசன்னம் காணப்படுவதால் தற்பொழுது இது எவ்வித தடையுமின்றி இயங்கி வருகிறது. யுகதனவி அனல் மின்நிலையம் குறித்த ஒப்பந்தத்துக்கு அமைய 2035ஆம் ஆண்டாகும் போது இதன் முழுமையான உரிமை இலங்கைக்குக் கிடைத்து விடும்.

கே: இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கப் போராட்டத்துக்குச் சென்றால் மின்சார விநியோகத்தில் ஏதாவது இடையூறுகள் ஏற்படுமா?

பதில்: நாம் இந்த சவாலை ஏற்றுக் கொள்வோம். இலங்கை மின்சார சபை வழமையான செயற்பாடுகளை முன்னெடுக்கும். நாட்டை மதிக்கும் கௌரவமானவர்களே மின்சார சபையில் பணியாற்றுகின்றனர். மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஜே.வி.பியின் பின்புலத்தைக் கொண்ட தொழிற்சங்களுடன் அவர்கள் கைகோர்ப்பார்கள் என நான் கருதவில்லை.

கே: மக்கள் கவுன்சிலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அமெரிக்க நிறுவனத்துடன் அரசாங்கம் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விமர்சித்திருந்தனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அவர்கள் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் அரசாங்கத்தில் இருக்கின்றார்களாயின் உலகப் பொருளாதார நெருக்கடியைப் புரிந்து கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ளாது தமது கடமைகளை அவர்களால் நிறைவேற்ற முடியாது. ஆளும் கட்சியின் பங்காளிகளுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அண்மையில் நடத்திய கலந்துரையாடலின் போது, தமது பரிந்துரைகளை எழுத்துமூலம் தருமாறு கோரியிருந்தனர். குறித்த ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தும் போது அது குறித்துக் கவனத்தில் கொள்ள முடியும் என்றும் கூறியிருந்தனர். அவர்களுக்கு வேறொரு நிகழ்ச்சி நிரல் உண்டு என்பது இதன் மூலம் தெளிவாகிறது. குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு ஒரு அணியாக முன்னோக்கிச் செல்ல முடியும், இல்லாவிட்டால் அவர்களால் அரசாங்கத்திலிருந்து வெளியேற முடியும்.

கே: அரசாங்கம் கொண்டிருக்கும் கூட்டுப் பொறுப்பிலிருந்து விலகினால் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்துகின்றனர். இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மிகவும் தவறான நடவடிக்கையில் இறங்கினர். அதனால்தான், அரசாங்கத்திற்குள் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்காமல் அவர்கள் விரும்பினால் வெளியேறலாம் என்று நான் சமீபத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தேன். அரசாங்கத்தின் இந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை கட்சி ஆராய்ந்து வருவதாக நான் நினைக்கிறேன். பொதுஜன பெரமுன ஒழுக்கமுள்ள கட்சியாகும். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடைய உண்மையான நோக்கம் என்ன என்பது புரியவில்லை. அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு நாம் இருக்கின்றோம்.

கே: உரம் இறக்குமதி தொடர்பான கொடுப்பனவுகளை மேற்கொள்ளவில்லையெனக் கூறி மக்கள் வங்கியை கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமா?

பதில்: கடனுக்கான கடிதம் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் காணப்படுகின்றன. எனவே சர்வதேச சட்டத்துக்கு அமையவே நாம் செயற்பட்டுள்ளோம். இதனை யாரும் மீற முடியாது. உரத்தை கப்பலில் ஏற்றும் துறைமுகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கடனுக்கான கடிதம் அமைந்திருக்கும். இதில் எவ்வாறான நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது பற்றி எனக்குத் தெரியாது. அதற்கு அமையவே தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

அர்ஜூன்

Comments