கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

இடி- மின்னல் - மழை - வெள்ளம்!

இலங்கையும் தமிழகமும் பல் நாட்களாக அனுபவித்து இன்றைய ஞாயிறு சற்று நிம்மதி,

இந்த இயற்கைக் களேபரத்தின் ஊடே மூடிக்கிடந்த பாடசாலைகளும் திறந்து கொண்டது தற்செயலாக நடந்தது.

கடந்த மாதம் 25லில் தரம் 01-05ஆரம்பப்பாடசாலைகளும், இம்மாதம் 8ல் 10.11.12, மற்றும் 13தர வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகளும் இடி – மின்னல் - மழை - வெள்ளம் அனர்த்தங்களுடன் ஆரம்பித்தன.

இச் சூழ்நிலையில் இன்னுமொரு அவலத்தைப் பலரும் அறிந்தே இருக்க மாட்டீர்கள்.

நான் கூட அறிந்தது முகநூல் வாயிலாக மாவனல்லை எம். ரிஷான் ஷெரீஃப் பக்கத்தில்!

இவர், ஒரு காலத்தில் ‘தினகரன்’ ஆசிரிய பீடத்தை அலங்கரித்தவர். இப்போது தமிழகம் அறிந்த எழுத்தாளராகவும் சாகித்ய விருதாளராகவும் திகழ்கிறார்.

சமீபத்தில் இந்த மாவனல்லை மைந்தர், “பாதை எங்கே? பாதை எங்கே” எனப் பதைபதைத்தவராக சில நிழல் படங்களை முகநூல் மூலம் வழங்க அதிர்ந்தே போனேன்!

“இலங்கை முழுக்கவும் அதி நவீனப் பாதைகள் அமைக்கின்றோம். அழகு நடை போடலாம், அருமையாக சவாரி போகலாம்” என்ற குரல்கள் எதிரொலிக்க இப்படியுமா பரிதாபக் காட்சிகள் என்ற ஆதங்கம் இயற்கையாகவே ஏற்பட்டு விடுகிறது.

இங்க சில படங்கள் பிரசுரம்.

ஒன்றில் பிரபல வளவை கங்கை ஓட்டமாய் ஓட்டம்! இன்னொன்றில் நாளைய சந்ததி ஒன்று, ஏதோவொன்றை குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு கங்கையைக் கடக்க முயன்று பார்க்கிறான். மற்றதில் வயோதிப மாது ஒருத்தியும் அதே வேலையைச் செய்கிறார்.

இவையெல்லாம் சர்க்கஸ் காட்சிகள் அன்று! நீரோட்டத்தில் அன்றாட வாழ்க்கை ஓட்டம்!

கல்வித் துறையில் விட்டதைப் பிடித்தல் என்ற உத்வேகத்தில், உயிரையும் பொருட்படுத்தாமல் வளவை கங்கையைத் தாண்ட வயதுக்கு வராத பிள்ளை முயல, மூதாட்டி வைத்தியசாலைக்கும், வேறு பணிகளுக்குமென கடக்க எத்தனிக்க பார்க்கிற நமக்கு மிகவும் பரிதாபத்திற்குரிய காட்சிகளாக உள்ளன.

இடம் : பலாங்கொடைக்கும் ஹம்பேகமுவக்கும் இடைப்பட்ட ஒரு கிராமம். (வளவை) கங்கைக் கரையோரம்.

அதே சமயம், ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் 68000வீதிகள் அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 14,000வீதிகளின் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு 1500வீதிகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று மாதங்களுக்குள் மேலும் 2,500வீதிகள் திறக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சரும், ஏனைய நல்மனம் கொண்டோரும் கல்விக்காக மருத்துவத் தேவைகளுக்காகக் (வளவை) கங்கையைக் கடக்கவும் திட்டமிட்டடுமே! திட்டம் இடுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

இனிப்பு-1

பொழுது விழுந்து பொழுது போகு மட்டும் ஒரு நாட்டின் பெயரை ஒரு தடவையேனும் உச்சரிப்பது நமக்குப் பழகி விட்டது.

அந்தளவுக்கு ‘சீனா” என்ற பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இதன் ஆயிரங்காலத்து வரலாற்றைப் புரட்டினால், பூமித்தாயை தனக்கே முழுதுமாக வரித்துக் கொள்ளும் போக்கு ஒரு தொடர்கதையாக நீள்கிறது.

இரு வரலாற்று நூல்களின் பெயர்களை பிரான்சில் வாழும் இக்பால் ஹசன் என்பார் வழங்க அவருக்கு நன்றி சொல்லி தருகிறேன்.

‘ஹிஸ் டரி ஆஃப் உத்தராஞ்சல்’ ஓ.சி. ஹண்டா 'த டிராஜடி ஆஃப் திபெத்'-- மன்மோகன் சர்மா

இவற்றில் வர்ணிக்கப்பட்டுள்ள வரலாற்று சம்பவம் மிக முக்கியமானது. சிவபெருமானது இருப்பிடம் கைலாசமலை என்பது இந்துக்கள் ஐதீகம். ‘கைலாஷ் பர்வத்’ அல்லது ‘கைலாஷ் மான சரோவர்’ என வட இந்தியர் அழைப்பர்.

இது அங்கே அருணாசலப் பிரதேசத்தில் உள்ளது.பாரத நாட்டின் விடுதலைக்கு முன்பே, சிவனின் இருப்பிடத்தை சீனா தனதாக்கிக் கொண்டது.

சுதந்திர இந்தியாவின் பிரதமர் நேருஜி ஐ.நா. வரை சென்றுமுறையிட்டார்.

சீனா சொன்ன விளக்கம்.

“1680ஆண்டில் இந்தியாவை ஆண்ட பேரரசர் ஒருவர் எங்கள் நாட்டின் ஒரு பகுதியைப் பிடுங்கி எடுத்துக் கொண்டதையே நாங்கள் திரும்ப எடுத்துக் கொண்டோம்!”

இந்த விளக்கக் குறிப்பை இப்பொழிதும் ஐ.நா. ஆவணங்களில் காணலாம்.

‘பிடுங்கிய’ அந்த இந்தியப் பேரரசர் யார்?

இன்று, உலக அதிசயங்களுள் ஒன்றாக எந்த அழகுராணிக்கு ஒரு ஷாஜஹானால் நினைவுச் சின்னமாகக் கட்டப்பட்டதோ அந்தத் தாஜ்மஹாலின் மும்தாஜ் பேரரசிப் புத்திரர் ஒலி ரங்க சேப் பேரரசர் அவர்.

அவரையே ‘பிடுங்கியவர்’ என வர்ணித்துள்ளது சீனா.

உண்மைச் சம்பவம் முற்றிலும வேறு ஒலிரங்க சேப் காலத்தில் சீனாவே இந்தியப் பகுதியை ஆக்கிரமித்தது. ‘சிவனின் இருப்பிடத்தை’யே அங்கீகரித்துக் கொண்டது!

அன்றைய சீனச் சக்கரவர்த்தி முதலாம் ஷூன்ஜிக்கு (SHUNJI-I) மாமன்னர் ஒலி ரங்க சேப் எழுதிய மடலில், “கைலாஷ் மான்சரோவர் இந்தியாவின் ஒரு பகுதி. எங்கள் இந்து சகோதரர்கள் பூஜிக்கும் புனிதமான இடம். நீங்கள் அந்த இடத்தைவிட்டு உடனே அகல வேண்டும்”.

சீனா மடலைப் பெற்றுக் கொண்டு ஒன்றரை மாதங்கள் கள்ள மெளனம் சாதிக்க, பேரரசர் ஒலி ரங்க சேப், குமாவோன் பகுதியை நிர்வகித்த சிற்றரன் பாஜ பஹதூர் சந்தீன்.

படைகளுடன், தனது சேனைகளையும் இணைத்து சீனாவுடன் போரிட்டு சிவன் வாழ்ந்த கைலாச மலையை மீட்டெடுத்தார்!

எத்தனை இனிப்பான செய்தி!

ஆனால்... ஆனால்?

இன்றைய 21ம் நூற்றாண்டில், 2021ல் அவருக்கு வழங்கப் பட்டிருக்கும் பெயர்கள் “இந்துக்களின் விரோதி!” “தீவிரமான” இஸ்லாமிய அடிப்படைவாதி”!

இத்தோடு இந்த இனிப்பை நிறுத்தாவிட்டால் கசப்புகள் நிறைய சேர்ந்து விடும் அபிமானிகளே!

இனிப்பு-2

தமிழக முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ‘கண்ணே கண்ணு, பொன்னே பொன்னு” என்று ஒரேயொரு நாளேடு -“மணிச்சுடர்” என மாலை வேளையில் ஒளிசிந்தும்.இந்த நாளேட்டின் முன்பக்கத்தில் கடந்த வாரத்திலொரு புதிய பதவி நியமனம் பற்றியத் தகவல்!

ஆஹா! இனிப்பு! இனிப்பு! எத்தகைய பெண்ணுக்கு எப்படிப்பட்டதொரு பதவி!

“இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிரணி தேசியத் தலைவி” என மகுடம் சூட்டப்பட்டிருக்கிறார் ஒரு ஃபாத்திமா முஸப்பர்!

தமிழகத்தின் முன்னோடி முஸ்லிம் லீம் தலைவரும், இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ‘மணி வலிக்கு’ என்ற ஒப்பற்ற இலக்கிய சஞ்சிகை நிறுவனரும், ஆசிரியருமாகிய, மறைந்தும் மறையாத மாணிக்க மாமனிதராக என் போன்ற பலர் நெஞ்சங்களில் நின்றுலாவும் ஆ.கா அப்துஸ் ஸமத் புதல்வியே இந்த ஃபாத்திமா முஸப்பர்.

அருமைத் தந்தையார் பழக்கி, காட்டிக் கொடுத்த சமுதாயப் பணிகளில் தன்னையே தியாகித்துக் கொண்டு ஒரு ‘மணிவிளக்காக ஒரு மணிச்சுட’ராகத் திகழும் ஃபாத்திமா முஸப்பருக்கு ‘மகளிரணி தேசியத் தலைவி’ என்பது கற்கண்டு!

ஏற்கெனவே, புதிய தமிழக ஆட்சியில் முத்துவேல் கருணாநிதிப் புதல்வர், முதல்வர் ஸ்டாலின், முக்கியத்துவம் வாய்ந்த வக்பு வாரிய’த்தின் ஓர் உறுப்பினராகவும் நியமனம் வழங்கிச் சிறப்புச் செய்திருக்கிறார்.

பாராட்டும், வாழ்த்தும் வழங்கும் நமது இலங்கைப் பேனை, தமிழக முஸ்லிம் பெண்மணிகளுக்கும் வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறது. “நீங்கள் அனைவரும் இந்த ஃபாத்திமா உயர்த்திப்பிடிக்கும் ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ என்ற கொடியின் கீழ் ஒன்று திரண்டு சமூக மேம்பாட்டுக்கு அவருக்குக் கரம் கொடுங்கள்!”

Comments