வீடு இடிந்து விழுமா, நிலச்சரிவு ஏற்படுமா? | தினகரன் வாரமஞ்சரி

வீடு இடிந்து விழுமா, நிலச்சரிவு ஏற்படுமா?

கண்டி மாவட்டம், புப்புரஸ்ஸ ஸ்டெலன்பேர்க் கந்தலா கீழ்ப்பிரிவு தோட்டத்தில் 125குடும்பங்கள் வாழ்கின்றன. இந்த தொழிலாளர்கள் வாழும் 13தொடர்குடியிருப்புகள் உள்ளன. மிக உயரமான மலையுச்சியில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகளின் இரு பக்கங்களின்  கீழ் பகுதியில் ஆறுகள் பாய்கின்றன. ஆற்றங்கரையின் மேட்டுப் பகுதியில் சுமார் இரண்டு மீற்றர் தூரத்தில் இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளன.  

இந்த 13குடியிருப்புகள் அமைந்திருக்கும் நிலத்துக்குக் கீழ் ஒரு நீரூற்று இருப்பதாக அறியப்படுகிறது. அதிகஷ்ட பிரதேசமான இப்பகுதியில் கடந்த 2013ஆண்டு பெய்த கடும்மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் தோட்டக்குடியிருப்புகள்  பெரிதும் பாதிக்கப்பட்டன. இங்கு குடியிருந்த மக்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இரண்டு மாதங்களாக தொடர்ந்த கடும்மழைக்கு மத்தியில் அந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். பின்னர் மழை சற்றுக்குறைய ஆரம்பித்ததும் பழைய குருடி கதவத்திறவடி என்ற நிலையில் தாம் குடியிருந்த வீடுகளுக்கே மீண்டும் திரும்ப வேண்டியதாயிற்று. 

இக்காலப்பகுதியில் கந்தலா கீழ்ப்பிரிவு பகுதியில் குறிப்பிட்ட அந்த இடம் மண்சரிவு ஏற்படும் நிலப்பகுதி என்பது பல ஆய்வுகளுக்கு பின் உறுதி செய்யப்பட்டது. மக்களை உடனடியாக இவ்விடத்தைவிட்டு வெளியேறும்படி கண்டி அனர்த்த முகாமை காரியாலயமும் கம்பளை பிரதேச செயலகமும் பணித்தது. இதனை எவரும் பொருட்படுத்தவில்லை. இதற்கிடையே மக்களின் குடியிருப்பு பகுதியில் இடையிடையே சுவர்கள்  வெடிப்புக்கு உள்ளாவதும் மண்சரிவுகள் ஏற்படுவதுமாக தொடர்சியாக இடம்பெற்று வந்தது.  

2016ஆம் ஆண்டு மீண்டும் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. குடியிருப்புகள் தாழிறங்கவே அத்திவாரம் கழன்று சுவர்கள் இடிந்து வீழ்ந்து பெரும்பாதிப்புக்கு உள்ளானது. மீண்டும் பாதுகாப்பான இடங்களில் அதாவது பாடசாலை, வைத்தியசாலை போன்ற இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். மாதங்களாக அகதிகளாக இருந்த அந்த மக்கள் மழை ஓய்ந்ததும் மீண்டும் இடிபாடுகளுடன் கூடிய குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டனர். சில குடும்பங்கள் பாதிக்கப்பட்ட அந்த குடியிருப்புகளுக்கு செல்லவில்லை. இவர்கள் தொடர்ந்தும் உறவினர்களுடைய வீடுகளில் தங்கியுள்ளனர். 

கடந்த இரண்டு வாரங்களில் பெய்த கடும் மழையால் குடியிருப்புகளுக்கருகில் 5பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டன. மேலும் குடியிருப்புகள் தாழிறங்கியதுடன் சுவர்களும் வெடிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. இதனால் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 2016ஆண்டிலேயே அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் எழுத்து மூலமாக உடடியாக இடம்பெயருமாறு இவர்களுக்கு அறிவித்துள்ளது.  

இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து. இவர்களுக்கு என 40வீடுகளை வீடன் தோட்டத்தில் அமைக்கப்பட்டன. இந்த வீடுகளின் கட்டுமாணப் பணிகள் இதுவரையில் பூர்த்தியாகாமல் இழுபறி நிலையில் உள்ளது. இதேவேளை தற்போது அரசு இயற்கை அனர்த்தத்திற்கு உள்ளாகக்கூடிய இடம் என அறிவித்து இடம்பெயராவிட்டால் பலாத்காரமாக அப்புறப்படுத்தப்படுவார்கள் என கூறியுள்ளது.

இவ்வாறான நிலையில் இந்த 125குடும்பங்களும் எங்கே செல்லும்? மாற்று இடங்கள் எங்கே உள்ளன? யார் இடம் கொடுப்பார்கள்?  

எவரேனும் இவற்றுக்கு விடை சொல்லி மாற்று ஏற்பாடுகள் செய்வார்களானால் புண்ணியம் கிடைக்கும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தாழிறங்கும் நிலம். சரியும் சுவர்கள். இத்தகைய அபாயகரமான சூழலில் நீங்கள் வாழ்வீர்களானால் உங்கள் நிலை எப்படி இருக்கும்? இதைக் கற்பனை செய்தால் அவர்களுக்கு உடனடியாக உதவ வேண்டும் என்ற வேகம் உங்களுக்கு ஏற்படும்.

நவராஜா
படங்கள்: தெல்தோட்டை தினகரன் நிருபர்

Comments