மக்களின் உயிர்ப் பாதுகாப்புக்கு மேலாக அரசியல் ஆதாயமே எதிரணியின் இலக்கு! | தினகரன் வாரமஞ்சரி

மக்களின் உயிர்ப் பாதுகாப்புக்கு மேலாக அரசியல் ஆதாயமே எதிரணியின் இலக்கு!

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் கொவிட் தொற்றுநோய் இலங்கைக்கு விதிவிலக்காக அமையவில்லை. உலகத் தொற்றினால் இலங்கை உட்பட பல நாடுகள் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன. ஏறத்தாழ இரண்டு வருடங்களாக இலங்கையின் சுமுகமான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்து, இடையிடையே பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் ஊடரங்கு உத்தரவு என்பன நடைமுறைப்படுத்தப்பட்டமையால் மக்களின் அன்றாட வாழ்க்கை யின் போக்கிலும் மாற்றம்ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் இந்த தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் காணக் கூடியதாகவுள்ளது. தொற்றிலிருந்து அனைவரையும் காப்பாற்றும் பொருட்டு சகலருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதில் அரசாங்கம் முனைப்புக் காட்டியுள்ளது. கொவிட் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு அரசு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தாலும், இதற்கு ஏனைய தரப்பினரின் ஒத்துழைப்புக் கிடைப்பதில் சிக்கல் நிலை இருப்பதை அவதானிக்க முடிகிறது.

கொரோனாவின் முதலாவது அலைத் தாக்கத்தை இலங்கை மிகவும் திறமையாகக் கையாண்டிருந்தது. எனினும், அதன் பின்னரான நிலைமைக்கு பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் காரணமாகின. குறிப்பாக கடந்த சிங்கள- தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் மகிழ்ச்சியில் தொற்றுநோய் குறித்து கவனயீனமாக இருந்தமையால் எதிர்கொண்ட உயிரிழப்புகள் மற்றும் நோய்த் தொற்றின் அதிகரிப்பு என்பன குறித்து நாம் அறிவோம். இவ்வாறான நிலையில் மக்களைப் பாதுகாப்பதில் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய எதிர்க்கட்சியினர் தற்போது தமது பொறுப்பினை மறந்து செயற்படுவதாகவே தெரிகிறது.

மக்கள் தொடர்பிலோ அல்லது நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு நிலைமைகள் குறித்தோ எந்தவித அக்கறையுமின்றி எதிர்க்கட்சியினர் செயற்படுவதற்கு சிறந்ததொரு உதாரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தியிருந்த அரசுக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் கூற முடியும். கடந்த சில வாரங்களாக தணிவடைந்திருந்த கொரோனா தொற்றுநோய் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத் தரப்பினர் தொடர்ச்சியாக எச்சரித்து வரும் நிலையில் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் நூற்றுக்கணக்கானவர்களை வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்திருந்தது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கண்டித்து இந்தப் போராட்டத்தை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தாலும் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் சிறிதளவும் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்த பிரதான எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் மக்கள் மீது அக்கறையை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, தமது சொந்த அரசியலை வெளிப்படுத்தும் செயற்பாடுகளாகவே அமைந்தன. அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அல்லது நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருந்தால் அதனைச் சுட்டிக் காட்டுவதும், மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் சரியான பாதையில் அரசு செல்வதை வழிப்படுத்துவதுமே எதிர்க்கட்சியின் பொறுப்பாக இருக்கும்.

எனினும், தற்போதுள்ள பிரதான எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் அவ்வாறு அமையவில்லையென்பது துரதிஷ்டமானதாகும். ஆரம்பம் தொட்டு அரசாங்கத்தை எல்லா விடயத்திலும் குறை கூறுவதையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாடிக்கையாகக் கொண்டுள்ளார். பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் மாற்று யோசனைகளை முன்வைப்பதற்கோ அல்லது நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மக்களை மீட்பதற்கு அரசாங்கத்தின் சிறந்த செயற்பாடுகளுக்குக் கூட கைகோர்ப்பதற்கோ அவர்கள் தயாராகவில்லையென்பதை பல சந்தர்ப்பங்களில் அவர்கள் புலப்படுத்தியுள்ளனர்.

ஆரம்பத்தில் நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போது தடுப்பூசி வழங்கவில்லையெனக் குற்றஞ்சாட்டினார்கள். அரசாங்கம் முழு முயற்சியில் தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கியதும் வேறொரு விடயத்தைப் பிடித்துக் கொண்டு குறை கூறி வருகின்றனர். பொருளாதார ரீதியாகவும், உளரீதியாகவும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பொதுமக்களுக்கு எதிர்க்கட்சி எந்த விமோசனத்தையும் வழங்கவில்லை. இவ்வாறான பின்னணியில் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அக்கறையும் காட்டாமல் ஆயிரக்கணக்கானவர்களை வீதியில் இறக்கிப் போராடுவதற்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

நாட்டில் நிலவும் தற்போதைய சுகாதாரப் பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகள் பாரிய ஒன்றுகூடல்களுக்கு எதிராக சில இடங்களில் நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெற்றிருந்தனர். இருந்தபோதும் இந்தத் தடைகளையும் மீறி, சட்டத்தையும் மதிக்காது கடந்த செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கானவர்கள் கொழும்பில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் கலந்து கொண்டிருந்தவர்கள் எந்தவொரு சமூக இடைவெளியையோ அல்லது சுகாதார வழிகாட்டல்களையோ பின்பற்றவில்லை. பொதுமக்கள் மாத்திரமன்றி மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றோம் எனக் கூறிக் கொள்ளும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட சுகாதார வழிகாட்டல்கள் எதனையும் பின்பற்றவில்லை.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ஊடாக புதியதொரு கொவிட் கொத்தணி உருவானால் அதற்கு யார் பொறுப்புக் கூறப் போகின்றார்கள்? நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு மீண்டும் நாட்டை முடக்கும் நிலையே ஏற்படும். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். இதற்கான முழுப் பொறுப்பையும் எதிர்க்கட்சியினரே ஏற்க வேண்டும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சம்பள அதிகரிப்புக் கோரி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீதியில் இறங்கி நடத்திய போராட்டங்களின் பின்னணியில் கொரோனா தொற்று அதிகரிப்பைக் காணக் கூடியதாகவிருந்தது. தற்பொழுது எதிர்க்கட்சியினர் மக்களை ஒன்றுதிரட்டி வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றனர். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி எதிர்வரும் நாட்களில் அறிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கும்.

நாடு எதிர்கொண்டுள்ள சுகாதார நிலைமைக்கு மத்தியில் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவது தொடர்பில் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கிடையில் மாற்றுக் கருத்துக்கள் இருந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் இந்தப் போராட்டத்தை தற்பொழுது நடத்த வேண்டாம் என ஆலோசனை வழங்கியிருந்த போதும் எதிர்க்கட்சித் தலைவர் தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதில் விடாப்பிடியாக இருந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள போட்டி நிலையும் இதற்குக் காரணமாகவிருக்கலாம். ஏனெனில், சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் விலைவாசி அதிகரிப்புக்கு எதிரான போராட்டமொன்றை நடத்தியிருந்தது. இதற்குப் போட்டியாக தாம் பாரியதொரு போராட்டத்தை நடத்த வேண்டும் என பிரதான எதிர்க்கட்சி எண்ணியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் போட்டி அரசியலால் பாதிக்கப்படப் போவது என்னவோ அப்பாவிப் பொதுமக்களேயாவர். இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சி மக்கள் பாதுகாப்பபு குறித்து பொறுப்புடன் நடந்து கொள்வதே காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.

பி.ஹர்ஷன்

Comments