தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்

ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச பதவியேற்று இரண்டு ஆண்டுகளாகின்றன.  மேலும் கடந்த வாரம் 18ம் திகதி முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷவின் 76வது பிறந்த தினம் மிக எளிமையாகக் கொண்டாடப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகாலமாக இந்த அரசு தான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாது கொவிட் பெருந்தொற்று நாட்டை அலைக்கழித்ததால் சற்றும் எதிர்பாரா வகையில் நாடு வேறொரு திசையில் பயணிக்க வேண்டியதாயிற்று. இது இலங்கைக்கு மாத்திரம் வாய்த்த ஒன்றல்ல. முழு உலகமும் இந்த நெருக்கடியையும் அது ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார பின்னடைவுகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தாலும் ஒரு பலவீனமான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் இந்நாட்டில் பெருந்தொற்று பாரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு அதன் சங்கிலித் தொடர் விளைவுகளை நாம் கண்கிறோம். தற்போது அத்தனை விளைவுகளையும் இந்த அரசின் மீதே சுமத்தப்படுவதையும் அதன் வழியே அரசியல் இலாபங்களை எதிர்த்தரப்பினர் அடைய முயல்வதையும் காண முடிகிறது. எந்தக் கட்சி பதவியில் இருந்தாலும் கொவிட் விளைவுகளை சுமந்தேயாக வேண்டியிருந்திருக்கும். எனவே இந்த இரண்டாண்டு காலப்பகுதியில் அரசு சாதனைகளை செய்யவில்லை; வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்தரப்பு கூக்குரலிட்டாலும் அது வெறும் அரசியலே தவிர உண்மை நிலையை அவர்களும் அறிவார்கள்.

இரண்டு முறை ஜனாதிபதியாகப் பதவி வகித்து பிரதமராகவும் வீற்றிருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷ இந் நாட்டின் முதிர்ந்த, மக்களால் விரும்பப்படும் ஒரு அரசியல் தலைவர். அவர் மிகுந்த நேர்மையுடன் தன் கடமைகளை நிறைவேற்றியிருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் இருந்து வட கிழக்கு ஆயுத தீவிரவாதத்தை ஒடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம் முயற்சிகளில் பல இராஜதந்திர குறுக்கீடுகளையும் அரசுகள் சமாளிக்க வேண்டியிருந்தது. இத் தடைகள் அனைத்தையும் மீறி 2005ம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற மஹிந்த ராஜபக்‌ஷ, இராஜதந்திர ரீதியாகக் காய்களை நகர்த்தி 2009ம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இச்சந்தர்ப்பத்தில் அவர் தொடர்ந்தும் கூறிவந்த ஒரு விஷயமே, நாம் தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்துக்கு எதிராக மட்டுமே யுத்தம் செய்கிறோம் என்பதாகும். இது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல என்பதை அவர் நிரூபிக்கவும் செய்தார்.

83ஜுலை கலவரத்துக்கு வடக்கே 13படைவீரர்கள் மணடைந்ததே வித்தாக அமைந்ததோடு அதன் பின்னணியில் அன்றைய அரசும் செயற்பட்டிருந்தது என்பது பகிரங்க இரகசியம். மிகவும் கலவரப்பட்டவர்களாக தமிழ் மக்கள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன தம்மைக் காப்பதற்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் இருக்க, அவரோ தன் வானொலி உரையில், கலவரத்தில் ஈடுபட்டாரை நியாயப் படுத்தும் வகையில் உரையாற்றியதோடு யுத்தம் என்றால் யுத்தம், சமாதானம் என்றால் சமாதானம் என்று கூறினார். அவரது அந்த உரை அச்சத்தில் ஆழ்ந்திருந்த தமிழ்ச் சமூகத்தை மேலும் கலவரப்படுத்துவதாக அமைந்தது. அவரது உரையின் பின்னர் கலவரம் மேலும் ஒரு தடவை உச்சம் தொட்டு அடங்கியது.

2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்தபோதும் தென்பகுதியில் வாழும் இலட்சக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் தமது உயிருக்கும் உடமைகளுக்கும் என்ன வேண்டுமானாலும் நேரலாம் என்ற அச்சத்தில் ஆழ்ந்திருந்தன. முன் அனுபவங்களின் பிரகாரம் அவர்களது அச்சம் நியாயமானதே. ஆனால் யுத்த வெற்றியை அறிவிக்கும் வகையில் பாராளுமன்ற மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இனவாத குண்டர்களை உசுப்பிவிடும் வகையில் எந்தவொரு வார்த்தைப் பிரயோகத்தையும் தனது உரையில் பயன்படுத்தவில்லை. மாறாக, சிறுபான்மை என்றொரு பிரிவு இந் நாட்டில் கிடையாது என்ற வார்த்தையை அழுத்தமாகச் சொன்னார். இந்த உரையில் தமக்கு ஏதேனும் ஒரு ‘செய்தி’ கிடைக்குமா என எதிர்பார்த்திருந்த குண்டர்கள் அரசின் நிலைப்பாட்டைப் புரிந்து கொண்டு பேசாமல் இருந்து விட்டனர்.

சிங்கள மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த ஒரு தருணத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ எவ்வளவு இராஜ தந்திரமாக நடந்து கொண்டார் என்பதைத் தமிழர்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றனர்.

தனது 76வது பிறந்ததினத்தைத் கொண்டாடிய முதிர்ந்த, அனுபவம் கொண்ட பிரதமர், தன் அரசியல் வாழ்க்கையின் உச்ச கட்டமாக ஒன்றை செய்து முடிக்க வேண்டும் என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந் நாடு சுதந்திரம் பெற்றது முதல் தமிழ் மக்கள் தமக்கு அரசியல் அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பலவிதங்களில் வெளிப்படுத்தியும் அவை பலனயளிக்காத நிலையிலேயே நாடு யுத்தமொன்றுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. யுத்தம் ஓய்ந்தாலும் அதன் விளைவுகள் ஓய்ந்ததாக இல்லை. பல கேள்விகளுக்கு நாடு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. கடந்த வாரம் பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பின் மீது உரையாற்றிய தர்மலிங்கம் சித்தார்த்தன், நாடு பொருளாதார பாதிப்பு காரணமாகக் கையேந்தும் நிலைக்கு சென்றிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. உரிய நேரத்தில் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தால் என்ற உண்மையை எடுத்துச் சொல்லியிருந்தார். இன்றைய நெருக்கடிக்கு கொரோனா மட்டுமே காரணம் அல்ல; தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்படாததே என அவர் குறிப்பிட்டிருந்ததை சிந்தித்துப் பார்க்க வேண்டும். யுத்த வெற்றி கிடைத்துவிட்டதால் மட்டும் நாடு முன்னேற்றம் அடைந்து விட்டதா? தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டடிருந்தால் இந்நாட்டில் வெளிநாடுகள் தலையீடு செய்துமிருக்காது என்று அவர் பேசியது சிந்தனைக்குரியது.

எனவே, யுத்தத்துக்கு முடிவு கட்டிய பிரதமரும், இந்நாட்டு மக்களின் அன்புக்குரியவருமான மஹிந்த ராஜபக்‌ஷ, தமிழர் பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைப் பெற்றுத்தரவேண்டும். இந் நாடு சிங்கப்பூர் அளவுக்கு முன்னேற்றம் காண்பதற்கான அடிக்கல்லை நாட்டியவர் என்ற பெருமை அவரைக் கிட்டும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் புதிய அரசியலமைப்பின் ஊடாகவோ அல்லது சட்டத்திருத்தத்தின் மூலமோ தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களைப் பெற்றுத் தர இந்த அனுபவமும் அரசியல் முதிர்ச்சியும் கொண்ட பிரதமர் முன்வர வேண்டும். அதை அவர் செய்வார் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.

Comments