அமெரிக்க இராஜதந்திர பொறிக்குள் அகப்படுமா சீனா? | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்க இராஜதந்திர பொறிக்குள் அகப்படுமா சீனா?

சர்வதேச அரசியலில் உரையாடல் என்பது ஒரு இராஜதந்திர பொறிமுறை ஆகும். அத்தகைய பொறிமுறையில் ஒரு அங்கமாகவே சீன, அமெரிக்க ஜனாதிபதிகளின் மெய்நிகர் சந்திப்பு கடந்த 16ம் திகதி நடைபெற்றது. ஜோ பைடன் மற்றும் ஷி ஜின்பிங் ஆகிய இருவரும் முதல் தடவையாக இத்தகைய சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். இரு நாட்டுக்குமான அரசியல் வர்த்தகம் மற்றும் இராணுவ விடயங்களில் பாரிய முரண்பாடும் பகைமையும் கூர்மையடைந்திருக்கின்ற சூழலில் இத்தகைய சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இத்தகைய இராஜதந்திர பொறிமுறைகளினூடாக உலகளாவிய ரீதியில் நிகழக்கூடிய போர்களை தடுக்க முடியுமென்று யதார்த்தவாத கோட்பாட்டை முன்வைத்த ஹெனத் வொய்ஸ், ஹான்ஸ் மோகன்தோ ஆகியோர் குறிப்பிடுகின்றனர். இக்கட்டுரையும் இரு தலைவர்களின் சந்திப்பில் உரையாடப்பட்ட முக்கிய விடயத்தையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

இரு தலைவர்களது சந்திப்பு சில முன்னாயத்தங்களை கொண்டு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா தரப்பு 'இருதரப்பு உட்கட்டமைப்பு சட்டம்' என்பதை காங்கிரஸில் நிறைவேற்றியுள்ளதோடு, ஜின்பிங் சீன ஆட்சியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தை ஆரம்பிப்பதற்கான உத்தரவாதத்தோடு இச்சந்திப்பை எதிர்கொண்டுள்ளார். அதாவது பரஸ்பரம் அமெரிக்கா எதிர் சீனா என்பது சமவல்லமையுடைய அரசு என்ற எண்ணப்பாங்கோடு இச்சந்திப்பை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் பொருளாதார விடயம் உரையாடப்பட்ட போதும் அரசியல் ரீதியிலான உரையாடலுக்கான களமே முதன்மையாக காணப்பட்டது. அமெரிக்க தரப்பை பொறுத்தவரை சீனாவை பொருளாதார ரீதியில் அல்லது வர்த்தக ரீதியில் எதிர்கொள்வதென்பது கடினமான இலக்காக அமைந்திருப்பதனால் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் சீனாவை கையாள எத்தனித்திருந்ததை உணர முடிகின்றது. 2021ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் நிகழ்ந்த ஜி-07மாநாட்டிலும், நேட்டோ சந்திப்பிலும், ஐரோப்பிய யூனியனுடனான பைடன் தலைமையிலான அமெரிக்க சந்திப்பிலும் சீனாவிற்கு எதிரான பதிலீடு பற்றியே அதிக விடயங்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அத்தகைய எண்ணத்தோடு பயணிக்க விளைந்ததன் பிரதிபலிப்புக்களை அமெரிக்கா உணர்ந்ததன் விளைவாகவே சீனாவுடனான உரையாடலை முன்னிறுத்த தயாரானது. இத்தகைய உரையாடல் சீனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவோ அல்லது அதற்கான உத்திகளை வகுக்கவோ வாய்ப்பாக அமையுமென அமெரிக்கா எதிர்பார்த்தது. அதற்கேற்பவே இப்பேச்சுவார்த்தையை தனக்கு இசைவாக கட்டமைத்தது. ஆனால் அத்தகைய கட்டமைப்பு சீனா தலைமையை எதிர்கொள்கின்ற போது நெருக்கடிக்கு உரியதாகவே மாறியுள்ளது. குறிப்பாக சீனா-அமெரிக்க பேச்சுவார்த்தையில் முதன்மைப்படுத்தப்பட்ட விடயங்களை அவதானிப்பது அதன் பிரதிபலிப்புக்களை விளங்கிக் கொள்ள உதவும்.

முதலாவது, தைவான் விவகாரம் இரு தரப்புக்கிடையே காரசாரமான விவாதப்பொருளாகியது. சீன−ஜனாதிபதி ஷி ஜின்பிங் தைவானின் சுதந்திர பிரகடனத்தை ஊக்குவிப்பது நெருப்புடன் விளையாடும் செயலென அமெரிக்க ஜனாதிபதி பைடனை எச்சரித்திருந்தார். சீனா தைவானை தனது அங்கமாக கருதுகின்ற போது தைவான் ஆட்சியாளர்கள் அதனை இறைமையுள்ள நாடாக மாற்றுவதற்கும், அதனை பாதுகாக்கும் விவகாரத்தில் அமெரிக்கா குரல் கொடுப்பது, சீனா தைவானை தாக்கினால், அமெரிக்கா பாதுகாக்கும் எனக்குறிப்பிடுவதும் அத்தகைய அரசியலை உலக அரசியலாக மாற்றி சீனாவை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்குமே. இருதரப்பும் தைவானை மையப்படுத்தி தெளிவானதொரு சர்வதேச அரசியலை கையாள்வதற்கு திட்டமிடுகிறது. இதேபோன்று சீனாவின் ஹொங்கொங் மற்றும் வடமேல் பிராந்தியமான ஜின்ஜியாயிங்கில் உள்ள உய்குர் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் உரையாடப்பட்டது. இத்தகைய உரையாடல்களில் சீனா மீது அமெரிக்கா அதிக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. பதிலுக்கு சீனாவும் தனது வலுவையும் அரசியல் பலத்தையும் உத்தரவாதப்படுத்துவதில் முனைப்பான கவனம் செலுத்தியது. இவ்வுரையாடல் சீன தரப்பில் பலத்தையும் அமெரிக்க தரப்பின் பலவீனத்தையும் வெளிப்படுத்துவதாகவே தெரிகின்றது. அதனை விரிவாக விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும்.

ஒன்று, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை தைவான் மீதான தலையீட்டுக்கு எச்சரிக்கை செய்த விதம் கவனிக்கத்தக்கது. குறிப்பாக ஐரோப்பாவை ஆளுகை செய்த போனபார்ட் நெப்போலியன் குறிப்பிட்ட வாக்கியங்களே நினைவுக்கு வருகிறது. அதாவது, 'சீனா என்கின்ற உறங்கிக்கொண்டிருக்கும் சாத்தானை நாம் தட்டியெழுப்ப விரும்பவில்லை' என குறிப்பிட்டதன் மூலம் அதன் உண்மையான தோற்றத்தை அல்லது அதன் வலுவை உணர்ந்ததன் பிரதிபலிப்பை போன்றே ஜின்பிங்கின் எச்சரிக்கை அமைந்திருந்தது. சீனா எப்போதும் உலகத்துக்கு தனது மென் அதிகாரத்தையே வெளிப்படுத்தி வருகிறது. இதனை உடைப்பதற்கு அமெரிக்கா பல முயற்சிகளை பல தசாப்தங்களாக  முயன்று வந்துள்ளது. அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீனா போனபார்ட் நெப்போலியின் வார்த்தைக்கு இணையான எத்தகைய நடத்தைகளையும் வெளிப்படுத்தவில்லை. 1962இல் இந்திய எல்லையில் நிகழ்த்திய போர் ஒன்றே அண்மைய வரலாற்றில் சீனாவின் பெரும் எடுப்பு போராக காணப்படுகிறது. அமெரிக்கா தொடர்பான சீனாவின் எச்சரிக்கை அமெரிக்க தரப்பின் தைவான் தொடர்பான உரையாடல் நீட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது.

இரண்டு, தைவான் சீனாவின் அங்கம் என்பதும் அப்பிராந்தியம் சீனாவின் பிராந்தியம் என்றும் அடையாளப்படுத்தப்படுகின்ற சூழலில் அமெரிக்காவோடு ஒப்பிடுகின்ற போது புவிசார் அரசியலாக சீனாவின் பலம் எட்டிப்பார்க்கிறது. தைவான் தொடர்பான  போர் என்பது சீனாவுக்கே அதிக வாய்ப்பை கொடுக்கக்கூடியது. அதுவே பைடனுடனான உரையாடலில் ஜின் பிங்கின் எச்சரிக்கையின் வெளிப்பாடாக தெரிந்தது.

மூன்று, ஹொங்கொங் உய்குர் முஸ்லீம் தொடர்பான மனித உரிமை விவகாரங்கள் சீனாவை பொறுத்த வரை சாதாரணமானவை. அமெரிக்காவிற்கும், மேற்குக்குமே ஜனநாயகம் மனித உரிமை முதன்மையானது. ஆனால் சீனாவிற்கு வர்த்தகமும், சந்தையும், உலகப்பொருளாதாரமும் அவசியமும் அடிப்படையுமானதாகும். எனவே மேற்கின் எந்த வாதங்களையும் சீனா எற்க தயாரில்லை என்பது மட்டுமன்றி அமெரிக்காவின் ஜனநாயகமும் மனித உரிமையும் போலி என்பதை சீனா மட்டுமல்ல உலகம் தெளிவாக கண்டு கொண்டுள்ளது. எனவே ஜின்பிங், பைடனுடான உரையாடல் தைவான் குறித்து மட்டுமே அதிலும் இராணுவ விவகாரமாக மாத்திரமே அணுக முயன்றுள்ளது. 

இரண்டாவது, உரையாடப்பட விடயத்தில் பொருளாதாரம் சார்ந்து, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக இரு நாட்டுக்குமிடையிலான போட்டி தொடர்பில் முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளன.  அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பிறகு சீனாவும் அமெரிக்காவும் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பப் போட்டியைத் தூண்டிவிட்டன. பில்லியன் கணக்கான சீனப் பொருட்கள் மீதான வரிகள் மற்றும் சீன உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்கப் பொருட்களை அணுகுவதில் இருந்து கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. ட்ரம்ப் காலகட்டத்தின் பல நடைமுறைகளை பராமரித்து வரும் பைடன் சீனாவின் நியாயமற்ற வர்த்தகம் மற்றும் பொருளாதார நடைமுறைகளில் இருந்து அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் தொழில்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எழுப்பி சீனா மீதான தடைகளையும் தொடர்ந்து பேணி வருகின்றார். இந்நிலையிலேயே குறித்த உரையாடலில் பைடன், 'தலைவர்கள் என்ற முறையில் நமது நாடுகளுக்கிடையேயான போட்டியானது, நோக்கமாகவோ அல்லது திட்டமிடப்படாமலோ மோதலாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்வது நமது பொறுப்பு.' என்று கூறியுள்ளார். அதேவேளை ஜின்பிங், 'சீனா-−அமெரிக்க உறவுகள் தடம் புரளாமல் தடுக்க வேண்டும். மோதல் இல்லாதது மற்றும் மோதாமல் இருப்பது இரு தரப்பினரும் கடைபிடிக்க வேண்டிய அடிப்பகுதி' என்றும் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு இருநாடுகளுக்குமாக எதிர்வரும் காலங்களில் இடம்பெறக்கூடிய பொருளாதர உறவுக்கான முன் முயற்சியாக சர்வதேச அரசியல் பரப்பில் அவதானிக்கப்டுகிறது.

எனவே, இரு தலைவர்களின் சந்திப்பும் போரற்ற சூழலை உருவாக்க திட்டமிட்டாலும் சீனாவின் பிடி தைவானை பொறுத்து உறுதியானதாக விளங்குவதுடன் நிலையான அரசியல் போட்டியையும் இராணுவ அணுகுமுறைகளையும் தீவிரப்படுத்த வழிவகுத்துள்ளது. அமெரிக்கா இவ்வுரையாடல் மூலம் சீனாவை கட்டுப்படுத்த முடியுமென திட்டமிட்டாலும் சீனா தனது போக்கில் மாற்று முடிவுகளுக்கு போவதற்கு தயாராகவில்லை என்பதை வெளிப்படுத்தியதோடு அமெரிக்க முயற்சி சுமூக தன்மையை விட தைவான் பதில் சீனா, -அமெரிக்க வர்த்தகம் என்பதை இவ்உரையாடல் பலப்படுத்தியுள்ளது. மேற்கின் இராஜதந்திர பொறிமுறைக்குள் சீனா அகப்படாது தன்னை பாதுகாத்துள்மை சீனாவின் பக்கம் வலுவான சூழலை உலக அரசியலில் ஏற்படுத்தியுள்ளது.

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments