இலங்கையில் உணவு உற்பத்தி; பரீட்சார்த்த முயற்சிகளுக்கு இது தருணமல்ல | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் உணவு உற்பத்தி; பரீட்சார்த்த முயற்சிகளுக்கு இது தருணமல்ல

நச்சுக்கலப்பற்ற உணவு உற்பத்தி என்ற கோஷம் கடந்த 2015இல் பதவிக்கு வந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்தது. பெரும் எடுப்பில் அதற்கான அங்குரார்ப்பண நடவடிக்கைகளும் செய்து வைக்கப்பட்டன. விவசாய இரசாயனப் பிரயோகங்களைக் குறைத்து இயற்கைவழி விவசாயத்திற்கு மாறும் எண்ணம் வெளிப்படுத்தப்பட்டது.

அனுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றயுைம் அதற்கு அப்பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் செறிவாகப் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் விவசாய இரசாயனங்களின் பிரயோகமுமே முக்கிய காரணமாகக் கருதப்பட்டதாலும் அப்போதைய ஜனாதிபதி அந்தப்பிரதேசத்தைச் சார்ந்தவர் என்றபடியினாலும் அவ்வாறான ஒரு முடிவு எடுக்கப்பட்டது.  

ஆனால் முற்றுமுழுதாக இயற்கை விவசாயத்திற்கு அவ்வாறு குறுகிய காலத்தில் மாறமுடியாது என்பதால் வீட்டுத்தோட்ட மட்டத்தில் அதனை அறிமுகப்படுத்தி படிப்படியாக விரிவாக்கம் செய்ய முயற்சிக்கப்பட்டது. ஆனால் 2019இல் பதவிக்கு வந்த அரசாங்கம் விவசாயத்தில் இரசாயனப் பிரயோகத்தை நிறுத்தி சேதனப் பசளைகளையும் மரபு ரீதியான களைக்கட்டுப்பாடு பீடைக்கட்டுப்பாட்டு முறைகளையும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டது.  

மக்களுக்கு விசத்தை உண்ணக்கொடுப்பது தவறு என்று வியாக்கியானம் கொடுத்து அந்நடவடிக்கைக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது. எவ்வாறாயினும் இந்த நடவடிக்கையின் விளைவுகள் பற்றி நடைபெற்றுவரும் பெரும்போக அறுவடையின் போது வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள முடியும். உணவு அறுவடையில் பாதிப்புகள் ஏற்படாது என்று அரசாங்கம் நம்புகிறது எதிர்க்கட்சிகளோ உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு பட்டினிச்சாவுகள் எதிர்கொள்ளப்படலாம் என்று அச்சம் தெரிவிக்கின்றன.  

அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் இலங்கை மக்களின் உணவுப் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலைச் சந்திக்கும். பற்றாக்குறை காரணமாக உணவுப்பொருள் விலைகள் சடுதியாக அதிகரித்து வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும். உணவுப்பொருள் விலையதிகரிப்பினால் எற்படும் பணவீக்கம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கெதிராக தொழிலாளர்கள் மேற்கொள்ளும் கூலி உயர்வுப் போராட்டங்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளும் நிலைமையை மோசமாக்கி உற்பத்திச் செலவுகளை மேலும் அதிகரிக்கும். இவை இரண்டும் மாறிமாறி விலைகளை அதிகரிப்பதால் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உயர்ந்து செல்லும் நிலை உருவாகும்.  

ஏற்கெனவே நாட்டில் உணவுப்பொருட்களின் விலைகள் துரிதமாக அதிகரித்துள்ளன. எனவே உணவுப்பொருள் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்படுமாயின் அவற்றைக் கட்டாயமாக இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகலாம். ஏற்கனவே டொலர் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைப் பொருளாதாரம் உணவு இறக்குமதிக்காக எவ்வாறு டொலரை பெற்றுக்கொள்ள எத்தனிக்கிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.   

டொலர் நெருக்கடி காரணமாக மசகெண்ணெய் இறக்குமதி செய்யமுடியாத நிலையில் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் 50நாட்களுக்கு மூடப்படுவதாக எரிசக்தி அமைச்சர் அறிவிருத்திருந்தார். நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எற்படலாம் என்ற பலமான எதிர்பார்க்கை நாட்டில் நிலவுகிறது. இப்போது உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு உணவையும் இறக்குமதி செய்ய நாடு தள்ளப்பட்டால் மிகப்பெரிய நெருக்கடி நிலையினைச் சந்திக்க நேரிடும். மறுபுறம் மக்கள் தமது பொருளாதார நடத்தைகளை பணவீக்க எதிர்பார்க்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ள எத்தனிப்பதால் உண்மையிலேயே பணவீக்கம் அரசாங்கம் எதிர்பார்ப்பதை விடக்கூடுதலாக அதிகரிக்கும் சாத்தியங்கள் உண்டு.  

இலங்கையில் ஏற்கனவே சில உணவுப்பொருள்களின் விலைகள் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் விலைகளை விட அதிகமாகவே காணப்படுகின்றன. தக்காளி ஒரு கிலோவின் விலை நெதர்லாந்தின் சந்தையில் 99யூரோ சதத்திலிருந்து 1.49யூரோ வரை விற்பனையாகிறது. அதாவது 228ரூபாவிலிருந்து 342ரூபா வரை. இலங்கையில் ஒரு கிலோ தக்காளி 500ரூபா வரையில் விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ உருளைக்கிழங்கு 1.39யூரோவுக்கு விற்பனையாகிறது. இலங்கைப் பெறுமதியில் இது 317ரூபாவாகும். இலங்கையில் உருளைக்கிழங்கு விலை இதற்கு சமமாக உள்ளது. ஒருகிலோ மஞ்சள் நிற தோடம்பழம் அங்கு 454ரூபாவுக்கு சமமான பெறுமதியில் விற்கிறது. இலங்கையில் இது 650ரூபாவுக்கு மேல் விற்பனையாகிறது. நெதர்லாந்தின் சில கடைகளில் மூன்று கிலோ தோடம்பழம் 2.89யூரோவுக்கு அதாவது 659ரூபாவுக்கு விற்கிறது. அதேபோல் ஓரு கிலோ திராட்சைப்பழம் அங்கு சுமார் 300ரூபாவுக்கு விற்கப்பட இங்கு ஒரு கிலோ 1000ரூபாவுக்கு மேல் விற்பனையாகிறது. ஒரு கிலோ அப்பிள் 228தொடக்கம் 342ரூபா வரையில் அங்கு விற்கப்பட இலங்கையில் கிலோ 650ரூபாவுக்கு மேல் விற்கப்படுகிறது. எலும்பு மற்றும் தோல் நீக்கிய கோழி இறைச்சி ஒரு கிலோ நொதர்லாந்தில் உள்ள ஒரு மலிவான சுப்பர் மார்கட்டில் 6.49யூரோவுக்கு அதாவது 1480ரூபாவுக்கு விற்கப்படுகிறது. இதே வகை இறைச்சிக்கு இதற்கு கிட்டிய விலையே இலங்கையின் சுப்பர்மார்க்கட்களில் விற்கப்படுகிறது. 200கிராம் மலிவாக சீஸ் 385ரூபாவக்கு சமமான பெறுமதியில் விற்கப்பட இங்கு 1450ரூபாவுக்கு விற்கப்படுகிறது.  

இவ்வாறு மேற்குலக அபிவிருத்தியடைந்த நாடொன்றில் காணப்படும் உணவு விலைகளுக்கு சமமாக அல்லது அதைவிடக் கூடுதலாக இலங்கையில் உணவுப்பொருள்கள் பலவற்றின் விலைகள் காணப்படுகின்றன. நாட்டு மக்களின் வருமானத்தைப் பொறுத்தமட்டில் நெதர்லாந்தின் தலைக்குரிய உற்பத்தி 2020இல் 52304அமெரிக்க டொலர்களாகக் காணப்பட இலங்கையின் தலைக்குரிய உற்பத்தி வெறும் 3682டொலர்கள் மட்டுமே. 

நெதர்லாந்து மக்களின் பிரதான உணவு உருளைக்கிழங்கு சீஸ் மற்றும் இறைச்சி வகைகள் ஆகும். அவற்றின் விலைகள் அந்நாட்டு மக்களின் வருமானத்துடன் ஒப்பிடுகையில் மிகமிகக் குறைவாகும்.

இதனால் உணவுக்காக அவர்கள் தமது வருமானத்தில் செலவிடும் பங்கு மிகமிகக் குறைவானதாகும். அதே நிலைமையே சிங்கப்பூரிலும் அவதானிக்கப்படுகிறது. அந்த நாட்டில் உணவுப்பொருள்களின் விலைகள் அதிகமாக இருந்தாலும் மக்களின் வருமானம் 59797டொலர்களாக இருப்பதால் உணவுக்காக தமது வருமானத்தில் அவர்கள் செலவிடும் சதவீதம் மிகவும் குறைவு.  

எனவே இந்நாடுகளில் உணவுப்பொருள்களின் விலைகள் அதிகரித்தாலும் அது அந்நாட்டு மக்களின் உணவைப் பெறக்கூடிய இயலுமையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் இலங்கையில் வாழும் ஒரு சராசரிக் குடிமகன் தனது வருமானத்தில் 66சதவீதத்தை உணவுக்காகச் செலவிட வேண்டிய கட்டாயம் உள்ளது. நெதர்லாந்தில் வாழும் ஒருவர் தனது வருமானத்தில் வெறும் 5சதவீதத்தை மட்டுமே உணவுக்காகச் செலவிடுகிறார். இதனால் அபிவிருத்தியடைந்த மேற்குலக நாடுகளில் உணவுப்பொருள் உற்பத்தியில் அல்லது கிடைப்பனவில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக அவர்களின் உணவுப் பாதுகாப்பில் பிரச்சினைகள் ஏற்படலாமே தவிர அதனைக் கொள்வனவு செய்வதற்கான ஆற்றலில் குறுங்காலத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை.  

ஆனால், இலங்கையில் இந்த நிலைமை படுபாதகமான நிலையில் உள்ளது. ஒவ்வொரு குடும்பமும் அடிப்படை உணவைப் பெற்றுக்கொள்வதில் மிகப்பெரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றது. கீழ்மட்ட வருமானம் பெறும் குடும்பங்கள் உணவு வேளைகளைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன் நடுத்தர மட்ட வருமானம் பெறும் அரச ஊழியர்கள் உள்ளிட்ட பலர் தமது உணவுக்கான செலவுகளைக் கட்டுப்படுத்தியே ஏனைய செலவுகளை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  

ஏற்கெனவே உணவுப்பொருள்களின் விலைகள் உயர்ந்த மட்டத்தில் இருப்பதால் உற்பத்தியில் வீழ்ச்சி எற்பட்டு விலைகள் மேலும் அதிகரித்தால் இலங்கை மக்களில் பலர் படுமோசமாகப் பாதிக்கப்படலாம். உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்க உணவை இறக்குமதி செய்யும் நிலையிலும் இலங்கையின் அந்நியச்செலாவணி கையிருப்புகள் இல்லை.  

இப்போதைய சூழ்நிலையில் உள்நாட்டில் உணவுப்பொருள் உற்பத்தியை துரிதமாக அதிகரிக்கும் காத்திரமான முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும். பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்குவதற்கான நேரம் இதுவல்ல. உணவுப்பொருள் உற்பத்திக்குத் தேவையான வழமையான உள்ளீடுகளை வழமைபோல் இறக்குமதிசெய்து விவசாயிகளை ஒருங்கிணைத்து செறிவான துரித உற்பத்தித் திட்டமென்றின் அடிப்படையில் உற்பத்தியை மேற்கொள்ள முயற்சிக்கப்பட வேண்டும். வருமுன் காப்பது உத்தமம்.

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

 

Comments