உலகப் பெருந்தொற்று நெருக்கடிக்கு மத்தியிலும் வெற்றி மிகுந்த பயணம் | தினகரன் வாரமஞ்சரி

உலகப் பெருந்தொற்று நெருக்கடிக்கு மத்தியிலும் வெற்றி மிகுந்த பயணம்

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர்மாதம் 16ஆம் திகதி உலகம் தற்பொழுது இருக்கும் நிலையிலிருந்து முற்றிலும் வித்தியாசமான சூழலில் காணப்பட்டது. அவ்வாறானதொருபின்னணியிலேயே நாட்டை ஆட்சி செய்வதற்கான பொறுப்பை இலங்கையில் உள்ள வாக்காளர்களில்பெரும்பாலானவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்வேட்பாளராகக் களமிறங்கியதற்போதைய ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்‌ஷவிடம்கையளித்தனர். சுபீட்சத்தின்நோக்கு என்ற தொனிப்பொருளில் நாட்டு மக்கள் முன்னிலையில் முன்வைத்தஅவருடைய கொள்கைப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டுஅங்கீகரிக்கப்பட்டது.

நாட்டை சரியான பாதையிலும், எதிர்கால சந்ததிக்கு சிறப்பான நாட்டை ஒப்படைக்கும் நோக்கிலும் தயாரிக்கப்பட்ட இந்தக் கொள்கைத் திட்டத்தில் உள்ள பல விடயங்களை நிறைவேற்றுவதற்கு கடந்த இரண்டு வருடங்களில் முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த போதும் உலகத் தொற்றுநோய் இதற்குப் பெரும் இடையூறாக அமைந்தது.

இருந்தபோதும் சவால்களுக்கு மத்தியில் முக்கியமான அபிவிருத்திப் பணிகளில் தொய்வு ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்கவில்லை. சுமார் 3தசாப்த காலமாகப் புரையோடிப் போயிருந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றியிருந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிறந்த நிர்வாகியாக அடையாளம் காணப்பட்டிருந்தார்.

கொழும்பு மாநகரை தூய்மைப்படுத்துவதில் அவர் எடுத்திருந்த முயற்சிகள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்ததுடன், அவருடைய நிர்வாகத் திறமை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கிய போது அவருக்கு ஆதரவுத் தளத்தைப் பெருக்கியது. அது மாத்திரமன்றி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் வழங்கியிருந்த தலைமைத்துவத்தின் அனுபவம் காரணமாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலால் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்காத தலைமைத்துவும் ஜனாதிபதியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டது.

இதுபோன்ற காரணிகளால் நாட்டில் உள்ள வாக்காளர்களில் 69இலட்சம் வாக்காளர்களின் தெரிவினால் இலங்கையின் ஆறாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டார். பெரும்பான்மை சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் பதவிக்கு வந்திருந்தாலும் அனைத்து இன மக்களின் ஜனாதிபதியாகவும் தான் ஆட்சிபுரிவேன் என்ற உறதிமொழியை அவர் வழங்கியிருந்தார்.

அது மாத்திரமன்றி ஆரம்பம் முதல் ஜனாதிபதி, அரசாங்கத் துறையை வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதில் கவனம் செலுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனங்களுக்குத் தலைவர்கள் நியமித்தல் உள்ளிட்டவற்றுக்குப் பொருத்தமானவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதால் அது குறித்து தீர்மானம் எடுப்பதற்கு தனியான குழுவொன்றையும் நியமித்திருந்தார். இது போன்று தனது நிர்வாகத் திறமையை படிப்படியாக காண்பித்து வரும் சூழ்நிலைலேயே துரதிஷ்டவசமாக கொவிட்-19உலகத் தொற்றுநோய் இலங்கையையும் பாதிக்கச் செய்தது. பதவியேற்று ஒரு சில மாதங்களிலேயே கொவிட் தொற்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு ஏற்பட்டது. முதலாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் எடுத்திருந்த துரித நடவடிக்கைகள் உலகளாவிய ரீதியில் பாராட்டப்பட்டன.

இவ்வாறான தொற்றுநோய் சூழலின் பின்னணியில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பொதுஜன பெரமுன அரசாங்கம் கைப்பற்றியது. இது ஜனாதிபதியின் எதிர்காலத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பக்கபலமாக அமைந்தது என்றால் மிகையாகாது.

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நிறைவேற்று அதிகாரத்துக்கும், சட்டவாக்கத்துக்கும் இடையிலான உறவை சிக்கலாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட 19வது திருத்தச் சட்டமூலத்தை திருத்தும் வகையிலும், ஜனாதிபதியின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் 20வது திருத்தச்சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், அரசாங்க நிறுவனங்களின் வினைத்திறனான செயற்பாடுகளைக் கண்காணிக்கும் பொருட்டு ஜனாதிபதி சில அரச நிறுவனங்களுக்குத் திடீர் விஜயங்களை மேற்கொண்டு மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளை வழங்கினார். கிராமங்களுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகளை வழங்குவதில் தீவிரம் காட்டி வந்தார்.

இதுபோன்ற நடவடிக்கைகளை ஜனாதிபதி மக்களுக்காக முன்னெடுத்து வரும் நிலையிலேயே கொரோனாவின் தாக்கம் அதிகரித்து அரசாங்கத்தினதும், பொதுமக்களினதும் இயல்பான முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தது. நாட்டு மக்களின் எதிர்காலத்தையும் அவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு விரும்பமில்லாவிட்டாலும் நாட்டை முடக்கும் தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டது. இருந்தபோதும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில் அவர் எடுத்த முயற்சிகள் பாராட்டத்தக்கதாக இருந்தன. அதேநேரம், பொது முடக்கத்தினால் பாதிக்கப்பட்ட அன்றாடத் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கொண்டு செல்லும் பொருட்டு அவர்களுக்கு 5000ரூபா நிதியை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

மறுபக்கத்தில் கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரேயொரு தீர்வு அனைவருக்கும் தடுப்பூசியை வழங்குவது என்பதில் உறதியாக நம்பிக்கை கொண்டுள்ள ஜனாதிபதி, நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நோக்கில் பல உலகநாடுகளிலிருந்தும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கு முனைப்புக் காட்டினார். இதற்காக பல மில்லியன் ரூபா செலவுசெய்யப்பட்டிருப்பதுடன், இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் இலவசமான தடுப்பூசி தொகுதிகளையும் வழங்கியிருந்தன. தடுப்பூசி தொடர்பில் எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக இருந்தார். இதில் அவர் வெற்றியும் கண்டுள்ளார்.

உள்ளக விவகாரங்களைக் கையாள்வது மாத்திரமன்றி சர்வதேச உறவுகளைப் பலப்படுத்துவதிலும் கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி முனைப்புக் காட்டியிருந்தார். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி ஐ.நா செயலாளர் நாயகம் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரையும் சந்தித்து இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்துத் தெளிவாக விளக்கமளித்திருந்தார்.

அது மாத்திரமன்றி புலம்பெயர்ந்துவாழ் சமூகத்தினருக்கும் பேச்சுக்காக விடுத்திருந்த அழைப்பு அனைவரினதும் அவதானத்தை ஈர்த்திருந்தது. குறிப்பாக நாடு பொருளாதார ரீதியில் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களின் பங்களிப்புக்கு கணிசமான தேவை உணரப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்திருந்தார். ஜனாதிபதியின் இந்த அழைப்பை புலம்பெயர்ந்துவாழ் தமிழர் அமைப்புக்கள் பல சாதகமாக எடுத்துக் கொண்டு தமது பதிலினை வழங்கியிருந்தன.

இவற்றுக்கும் அப்பால் எதிர்கால சந்ததியினருக்கு நஞ்சற்ற உணவை வழங்கவும், அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இரசாயன உரங்களைக் கட்டுப்படுத்தும் தொலைநோக்கு சிந்தனை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் இயற்கை வளம் மாத்திரமன்றி, எதிர்கால சந்ததியியும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்தக் கூடிய இந்தக் கொள்கைத் திட்டத்துக்கு எதிர்க்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தாலும் இரசாயனப் பசளைக்குப் பதிலாக, சேதனப் பசளைப் பயன்பாட்டினால் ஏற்படக் கூடிய நீண்டகால நன்மைகள் உணரப்படாமல் உள்ளன.

இந்த விவகாரம் வெறுமனே அரசியல் மயப்படுத்தப்பட்டு அரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கும் அப்பால் நீண்ட காலமாக நிலவிய ஆசிரிய, அதிபர் சம்பள முரண்பாட்டுக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தீர்வினை வழங்கியுள்ளது. 2022ஆம் ஆண்டிலிருந்து இதற்கான நிவாரணம் கிடைக்கிறது. இதுபோன்ற பல்வேறு தொலைநோக்கிலான சிந்தனைத் திட்டங்களை கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார். இருந்தபோதும் தற்பொழுது காணப்படும் தொற்றுநோய் சூழலுடன் கூடிய சவாலான நிலைமை எதிர்காலத்திலும் சவால் மிக்கதாகவே அமையும்.

சம்யுக்தன்

Comments