கொவிட் -19 சிகிச்சைக்கான மாத்திரைகள்; நவீன அறிவியலின் மாபெரும் புரட்சி | தினகரன் வாரமஞ்சரி

கொவிட் -19 சிகிச்சைக்கான மாத்திரைகள்; நவீன அறிவியலின் மாபெரும் புரட்சி

நவீன டிஜிட்டல் அறிவியல் யுகத்தில் உலகம் முகம் கொடுத்துள்ள மாபெரும் அச்சுறுத்தலும் சவாலும் தான் கொவிட் 19தொற்று. இது 2019ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்து பரவத் தொடங்கியது. என்றாலும் குறுகிய காலப்பகுதிக்குள்,  அதாவது முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் இத்தொற்று உலகம் முழுவதும் பரவியது. கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இத்தொற்றானது, உயிராபத்து மிக்கதாகவே  விளங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆளுக்காள் தொற்றி பரவும் பண்பைக் கொண்டுள்ள இத்தொற்றின் பரவுதலும் தாக்கமும் பாதிப்பும் உலகையே கிலி கொள்ளச் செய்தது. மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். 

இந்த நிலையில்,  கொவிட் 19தொற்றைக் கட்டுப்படுத்தவென தடுப்பூசியையோ சிகிச்சைக்கான மாத்திரையையோ கண்டுபிடிக்க முன்வருமாறு உலக சுகாதார ஸ்தாபனம்  2020பெப்ரவரியளவில் உலகளாவிய வேண்டுகோளை விடுத்தது. இத்தொற்றின் தீவிரமும் தாக்கமும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அழைப்பும் மருத்துவ விஞ்ஞானிகளை தூக்கம் இழக்கச் செய்தது. நவீன விஞ்ஞானத்தின் பெருஞ்சவாலாக இத்தொற்றை அவர்கள்  நோக்கினர். இப்பின்புலத்தில் கொவிட் 19தொற்றின்  தாக்கத்தையும் பாதிப்புக்களையும் கட்டுப்படுத்துவதற்கு தேவையான மாத்திரையையோ அல்லது தடுப்பூசியையோ கண்டுபிடித்துவிடும் நோக்கில் அவர்கள் இரவு பகல் பாராது அயராது உழைக்கத் தொடங்கினர்.

கொவிட் 19 கட்டுப்பாட்டுக்கு தடுப்பூசி

இதன் பிரதிபலனாக, அமெரிக்காவின் மொடர்னா நிறுவனம், இத்தொற்றைக் கட்டுப்படுத்தவெனக் கண்டுபிடித்த தடுப்பூசியை மனிதனில் செலுத்தி பரீட்சிக்கும் நடவடிக்கையை 2020மார்ச் நடுப்பகுதியில் முதன் முதலில் ஆரம்பித்தது. இதே காலப்பகுதியில்  ஏனைய நாடுகளது மருத்துவ விஞ்ஞானிகளும் கொவிட் 19கட்டுப்பாட்டுக்கான மருந்து தொடர்பிலான ஆராய்ச்சிகளை தொடங்கி இருந்தனர். இவ்வாறான பின்னணியில் 2020ஜுன் மாதமளவில் தாம் இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்தது. ஆனாலும் அது உடனடியாக மனித பயன்பாட்டுக்கு வரவில்லை. இதேவேளை, 2020செப்டம்பராகும் போது பைசர் நிறுவனமும், ஒக்டோபர் மாதமளவில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்தும் இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான தங்களது தடுப்பூசியும் மனிதப் பயன்பாட்டுக்கு தயாராகிவிட்டதாக அறிவித்தன.

இவ்வாறான பின்புலத்தில், இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான  பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை தம் நாட்டு பிரஜைகளுக்கு அவசர தேவையின் நிமித்தம் வழங்க 2020டிசம்பர் முதல் வாரத்தில் பிரித்தானியா அங்கீகாரமளித்தது. அதன் ஊடாக இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசியை மனித பாவனைக்கு அனுமதித்த முதல் நாடு என்ற பெருமையை பிரித்தானியா பெற்றுக்கொண்டது. இந்த அடிப்படையில் 2020டிசம்பர் 08ஆம் திகதி முதல் இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் பைசர் தடுப்பூசியை மனிதனுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பமானது.

இத்தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் வரையில் வளர்ச்சியடைந்த நாடு, வளர்முக மற்றும் வறிய நாடு என்ற பேதமில்லாமல் எல்லா நாடுகளிலும் கோரத் தாண்டவமாடியது இத்தொற்று. இதன் அச்சுறுத்தலுக்கும் சவாலுக்கும் முன்பாக இத்தடுப்பூசி, புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் மக்கள் மத்தியில்  ஏற்படுத்தியது. அதனால் மக்கள் தடுப்பூசியை ஆர்வத்தோடு பெற்றுக்கொள்ளத்  தொடங்கினர். என்றாலும் இதே காலப்பகுதியில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான ஏனைய தடுப்பூசிகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவசரத் தேவையின் நிமித்தம் மனிதப் பயன்பாட்டுக்கு வந்தன.

தடுப்பூசி தொடர்பிலான ஐயம்

மனித இருப்புக்கே இத்தொற்று பெருஞ்சவாலாக அமைந்திருந்தன் விளைவாகவே, இது தோற்றம் பெற்றது முதலான ஒரு வருட காலப்பகுதிக்குள் உலகம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டது. ஆனாலும் இத்தடுப்பூசி தொடர்பில் ஐயங்களும் தோற்றம் பெறவே செய்தன. ஏனென்றால் உலகில் ஏற்கனவே தோற்றம் பெற்ற பல நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான  தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வருவதற்கு பல வருடங்கள், பல தசாப்தங்களே எடுத்திருக்கின்றன. ஏற்கனவே புழக்கத்திற்கு வந்துள்ள ஏனைய நோய்களைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளுக்கான வரலாறு அதுதான். கொவிட் 19தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசி தவிர்ந்த எந்தவொரு தடுப்பூசியும் நோய் தோற்றம் பெற்ற முதல் வருட காலத்திற்குள்ளேயே கண்டுபிடிக்கப்படவுமில்லை. மனித பாவனைக்கு வரவுமில்லை.

அதாவது, கொவிட் 19தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசிக்கு முன்னர் பயன்பாட்டுக்கு வந்த ஒவ்வொரு தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டு மனித பாவனைக்கு வர 8முதல் - 10வருடங்கள் எடுத்துள்ளன. சில தடுப்பூசிகளுக்கு இருபது முப்பது வருடங்கள் சென்றுள்ளன. அதேநேரம் உலகில் நீண்ட கறைபடிந்த வரலாற்றைக் கொண்டுள்ள குஷ்டரோகம், காசநோய் என்பவற்றுக்கு கூட நவீன விஞ்ஞானத்தின் மூலம் தான் சிகிச்சைக்கான மாத்திரைகள்  கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. அதேபோன்று உலகில் பல தசாப்த வரலாற்றைக் கொண்டிருக்கும் மலேரியாவுக்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்து, இவ்வருடத்தின் நடுப்பகுதி முதல் மனித பாவனைக்கு வந்துள்ளது. அத்தடுப்பு மருந்தை ஆபிரிக்க நாட்டு மக்களுக்கு வழங்கவே உலக சுகாதார ஸ்தாபனம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த நிலையில் தான் ஒரு நோய்க் கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவும் அது மனித பாவனைக்கு வரவும் பல வருடங்கள், பல தசாப்தங்கள் எடுக்கக்கூடிய கால சூழலில் கொவிட் 19தொற்றுக்கு அது தோற்றம் பெற்ற ஒரு வருடத்திற்குள் தடுப்பு மருந்து மனித பயன்பாட்டுக்கு வந்தமை தான் பலரை ஆச்சரியத்திற்கும் ஐயங்களுக்கும் உள்ளாக்கின. இது உண்மையான தடுப்பு மருந்தா? இது பக்க விளைவுகள் அற்றதா? என்றவாறான கேள்விகளும் எழுந்தன.  அதன் விளைவாக இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்துக்கொண்டவர்களும் இருக்கின்றனர்.

ஆனால் இத்தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பின்னர் இத்தொற்றின் தாக்கமும் உயிரிழப்பும் குறைவடைந்திருக்கின்றது. இது இத்தடுப்பூசியை  பெற்றுக்கொள்வதில்  நம்பிக்கையையும்  ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் இத்தடுப்பூசியைப் பெற்றிருந்தாலும் இத்தொற்றுக்கு உள்ளாவதையோ இத்தொற்று பரவுவதையோ தவிர்க்க முடியாது என்பதை மறந்து விடலாகாது. தொற்றின் தாக்கத்தைக் குறைக்கக்கூடியதே இத்தடுப்பூசி. அதனால் இது ஒரு ஆறுதலான விடயமாகும்.

இருந்த போதிலும் இத்தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதோடு மருந்துவ விஞ்ஞானிகள் ஓய்வடைந்து விடவில்லை. மாறாக இத்தொற்றைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான மருந்துகளைக் கண்டறிவதற்கான முயற்சிகளை அவர்கள் தொடர்ந்தும் ஆராய்ச்சி ரீதியாக மேற்கொண்டு வருகின்றனர். ஏனென்றால்

இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசி புழக்கத்திற்கு வந்த பின்னர் இத்தொற்று மரணங்கள் குறைவடைந்துள்ள போதிலும் அவை முற்றுப்பெறவில்லை. இத்தொற்று தோற்றம் பெற்றது முதல் இற்றை வரையான கடந்த 23மாத காலப்பகுதிக்குள் (2021நவம்பர் 20வரையில்) முழு உலகிலும் 25கோடியே 65இலட்சத்துக்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ள இத்தொற்று, 51இலட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரையும் காவு கொண்டிருக்கின்றது. அந்த அடிப்படையில் இலங்கையிலும் கூட ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளதோடு, 14ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்துள்ளது இத்தொற்று.

இருந்தும் கூட இத்தொற்றின் பரவுதலும் உயிராபத்து அச்சுறுத்தலும் தொடர்ந்தும் நீடித்த வண்ணமே உள்ளன. இத்தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து ஒரு வருடத்தை அண்மித்துள்ள போதிலும் கூட இத்தொற்று உலகின் எந்த நாட்டிலும் முழுமையான கட்டுப்பாட்டை  அடையவில்லை. அதனால் தான் கொவிட் 19தொற்று தவிர்ப்புக்கான அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களைத் தொடர்ந்தும் கடைபிடிப்பது இன்றியமையாத விடயம் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வாய்மூலம் பயன்படுத்தும் மாத்திரைகள்

இவ்வாறான சூழலில் ஐக்கிய அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டுள்ள மேர்க் நிறுவனம் ரிட்ஜ்பேர்க் பயோதெரபியூடிக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து கொவிட் 19தொற்று கட்டுப்பாட்டுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய 'மொல்னுபிரவீர்' ( Molnupiravir) என்ற பெயர் கொண்ட மாத்திரையைக் கண்டுபிடித்து தயாரித்துள்ளது. இம்மாத்திரையை இத்தொற்றுக்கான அறிகுறிகள் வெளிப்பட்டு ஐந்து நாட்களில் பயன்படுத்தலாமென குறித்த நிறுவனத்தின் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். இது வாய்மூலம் பயன்படுத்தக்கூடிய மாத்திரையாகும். இம்மாத்திரையானது இத்தொற்று காரணமான மரணத்தை 50வீதமும் இத்தொற்றுக்கு சிகிச்சை பெறவென வைத்தியசாலையில் தங்கியிருப்பதற்கான வாய்ப்பை 50வீதமும் குறைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கின்றது. இந்நிலையில் இம்மாத்திரையை இத்தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்த இம்மாதத்தின் முதல் வாரத்தில் (05.11.2021) பிரித்தானியா அங்கீகாரமளித்தது. இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான மாத்திரையைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடாகவும் பிரித்தானியாவே விளங்குகிறது. என்றாலும் இம்மாத்திரையை இலங்கையில் பாவிப்பதற்கும் கொவிட் 19கட்டுப்பாட்டுக்கான நிபுணர்கள் கமிட்டி அனுமதி வழங்கி இருப்பதாக மருந்துப்பொருள் உற்பத்தி இராஜாங்க அமைச்சரான பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டிருக்கின்றார். 

இதேநேரம், இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவென தடுப்பூசியைக் கண்டுபிடித்த நிறுவனங்களில் ஒன்றான பைஸர் நிறுவனம், தாம் இத்தொற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய 'பக்ஸ்லோவிட்' (Paxlovid) என்ற பெயர் கொண்ட மாத்திரையைக் கண்டுபிடித்து  தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இம்மாத்திரையை அடிப்படையாகக் கொண்டு இத்தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது, இந்நோயாளர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதையும் இத்தொற்றின் விளைவான மரண அச்சுறுத்தலையும் 89வீதம் குறைத்துக்கொள்ளலாம் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கின்றது. இது 90வீதம் செயல்திறன் மிக்க மாத்திரை. 100வீதம் உயிராபத்து அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடியதென அந்நிறுவனத்தின் பிரதம அறிவியல் அதிகாரி மைக்கல் டொல்ஸ்டன் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் இம்மாத்திரையை அவசர தேவையின் நிமித்தம் பயன்படுத்த அனுமதி வழங்குமாறு கோரி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் அதிகார சபைக்கு பைசர் நிறுவனம் விண்ணப்பித்திருக்கின்றது. இதேவேளை பைஸர் நிறுவனம் உற்பத்தி செய்துள்ள கொவிட் 19கட்டுப்பாட்டுக்கான மாத்திரையை கொள்வனவு செய்ய ஐக்கிய அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக தகவல்களும் வெளியாகியுள்ளன.

'தற்போது கொவிட் 19தொற்றை முகாமைத்துவம் செய்வதற்குப் பயன்படுத்தும் வழிமுறைகளை இம்மாத்திரை மாற்றியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பொது சுகாதாரத்திற்கான ஜோன் கொப்கின் கல்லூரியின் தொற்று நோயியல் துணைப் பேராசிரியர் டொக்டர் டேவிட் டவ்டி, இத்தொற்றாளர்களால் வைத்தியசாலைகளில் ஏற்படும் நெருக்கடியும் உயிரிழப்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும் குறைவடைய முடியும் எனத் தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

உலக மக்களையே கிலி கொள்ளச் செய்திருந்த இத்தொற்றின் அச்சம்,  இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்களவில் குறைந்தது. இத்தொற்று தோற்றம் பெற்று இரண்டாவது வருடம் நிறைவடையும் தறுவாயில் இத்தொற்றாளர்களுக்கு வாய்மூலம் சிகிச்சை அளிக்கக்கூடிய மாத்திரையும் பாவனைக்கு வந்துள்ளது. இதுவும் இத்தொற்றின் அச்சுறுத்தலை மேலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  ஆகவே கொவிட் 19தொற்றின் அச்சுறுத்தலானது இரண்டு வருட காலப்பகுதியில் மருத்துவ விஞ்ஞானத்துறையினால் வெற்றி கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதில் ஐயமில்லை.  இது நவீன அறிவியல் யுகத்தில் மாபெரும் புரட்சி என்றால் அது மிகையாகாது.

மர்லின் மரிக்கார்

Comments