பக்தர்களின் இதயங்களில் வாழ்கிறார் பாபா | தினகரன் வாரமஞ்சரி

பக்தர்களின் இதயங்களில் வாழ்கிறார் பாபா

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா இன்றும் இன்னமும் ஒவ்வொரு சாயி பக்தனின் இதயங்களில் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார். நவம்பர் 23ம் திகதி, செவ்வாய் கிழமை அவரது 96வது ஜெனனதினம். உலகில் வாழும் கோடிக்கணக்கான சாயி பக்தர்களுக்கு அவர் சாட்சாத் தெய்வமே! அவரிடத்தில் உலகிலுள்ள பக்தர்கள், இன்றும் ஆன்மீகத்தொடர்புடன் தானிருக்கிறார்கள். அவரும் பல லீலைகளைச் செய்துகொண்டுதானிருக்கிறார்.

கொடிய நோயின் தாக்கம், உலகமெங்கும் பரவியுள்ளது. பயம் ஒரு பக்கம் வாட்டுகிறது. பொருளாதாரம் மறுபக்கம் தாக்குகிறது.  இன்று எதையோ இழந்த உணர்வில் பல பக்தர்கள் இருக்கின்றனர். ஆனால் பாபா எம்முடன்தானிருக்கிறார் என்பதை, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா நமக்கு விட்டுச் சென்ற, பாரம்பரியமான அன்பையும் சேவையையும் புரிந்துகொண்டால், சோர்வடைந்த மனதுக்கு முழுத்தெளிவு கிடைக்கும்.

நம் கண்முன்னே வாழ்ந்து, மகா சமாதியான மகாபுருஷர் இவர்தான். இவரது முதல் அவதாரமான, சீரடி சாயி பாபா வாழ்ந்த காலத்தில், நாம் வாழ்ந்ததில்லை. அயோத்தியில் இராமனும், துவாராகாபுரியில் கண்ணனும் வாழ்ந்த காலத்தில், வாழ்ந்த அதிஷ்டமான மானிடரைவிட, நாம் பல மடங்கு அதிஷ்டசாலிகள். காரணம்! சாயி பக்தர்களுக்கு, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா இராமராகவும் கிருஷ்ணராகவும் மட்டுமல்ல அனைத்து தெய்வங்களின் சொரூபமாகவும் காட்சியளித்தார். உலகில் அவதரித்த அவதாரங்களில் பிறப்பிடங்களைவிட, அவர்கள் மகா சமாதியடைந்த ஸ்தலங்கள்தான் மிகவும் சக்திவாய்ந்தவை. புட்டபர்த்தியிலுள்ள பாபா மகா சமாதியானது பிரசாந்தி நிலையம், அது  புனிதமான  தெய்வீக அதிர்வலைகளைக் கொண்டது. அங்கு அவர் மறைந்துவிடவில்லை. மறைந்திருந்து புதுமைபுரிகிறார். ஒரு சிலருக்கு அதிஷ்டவசமாகக் காட்சியளித்துமிருக்கிறார். உண்மையான பக்தியும், பிரேமையும், நம்பிக்கையும், பொறுமையும் இருந்தால், அதனை நாமும் அனுபவிக்கமுடியும்.

சாயி அவதாரத்தின் தோற்றம் அன்பின் வடிவம். அவர் சாயி பக்தர்களின் இதயங்களில் அன்பின் ஒளியையேற்றினார். அன்றாட வாழ்க்கையில். அந்த ஒளியானது, மற்றவர்களுடன் பரிமாறிக்கொள்ளத் தூண்டியது. சாயி சமுதாயத்தில் மாற்றம் ஏற்படச் செய்தது. லட்சக்கணக்கானவர்கள் பாபாவின் அன்பினால் உந்தப்பட்டதனால், உலகளாவிய நிலையில் 'செயல்படும் அன்பாக' அது ஆகியுள்ளது. அன்புதான் பகவானின் மிகப்பெரிய அருட்கொடையாகும். மனிதமேம்பாட்டு கல்வி முறையை அறிமுகப்படுத்தியவர் பாபாவேதான். பலபேர் மனித உயர்பண்புகளை ஆதாரமாகக் கொண்டு கல்வித்திட்டங்களை பேசியிருக்கலாம். ஆனால் நடைமுறைப்படுத்திய பெருமை பாபாவைத்தான் சேரும். சாயி பல்கலைக்கழங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கல்வி மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. பாபாவின் கல்வி திட்டம் வாழ்வதற்கானது, சம்பாதிப்பதற்கானதல்ல. இந்தக் கல்வி பாரம்பரியம், பகவான் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்காகக் கொடுத்த அருட்கொடையாகும். இந்தப் பாரம்பரியங்கள் இருக்கும்வரை பாபா வாழ்ந்துகொண்டுதானிருப்பார். வருடாவருடம் அவரது பிறந்தநாள் வரத்தான் செய்யும்.

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய (கொழும்பு) நிலையம் ஏற்பாட்டில்,  நவம்பர் 23ம் திகதி, செவ்வாய்க்கிழமை பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 96வது பிறந்தநாள், கொழும்பு புதுச்செட்டித் தெருவிலுள்ள, சாயி நிலையத்தில், காலை 5மணி தொடக்கம் பகல் ஆராத்தி வரை சுகாதார ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் நடைபெறவுள்ளது. சிறப்பு அம்சமாக பிறந்தநாள் கேக் வெட்டுதல், திருவூஞ்சல், திரிமங்களாராத்தியும் இடம்பெறும்.

எஸ்.டி.எஸ். உதயநாயகம்
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையம்,
கொழும்பு

 

 

 

Comments