புத்தளம் மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளம் | தினகரன் வாரமஞ்சரி

புத்தளம் மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளம்

ஒவ்வொரு வருடமும் மழை பெய்யும் காலங்களில் தாழ் நிலப்  பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவது வழக்கமாக இருந்தாலும் முறையான  வடிகாலமைப்பு வசதிகள் எங்குமே இல்லாமையினாலேயே இம்முறை இந்த வெள்ளம்  மக்களுக்கு மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. 

வெள்ளம் வழிந்தோடிவிட்டது. ஆனால் மக்கள் தமது இயல்பு  வாழ்க்கைக்குஇன்னமும்  திரும்ப முடியாமல் உள்ளனர். தொடர்ச்சியாக பெய்த  கடும் மழை காரணமாகவே புத்தளத்தில் உள்ள சில நீர்த்தேக்கங்களின் வான்  கதவுகள் கடந்த திங்கட்கிழமை (08) திறக்கப்பட்டன. 

இதன் காரணமாகவே குறித்த நீர்த்தேக்கத்தின் தாழ்  நிலப்பகுதிகள் வீடுகள் மற்றும் வீதிகள் என்பன வெள்ளாத்தில் மூழ்கின. இந்த  வெள்ளத்தினால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள 16பிரதேச செயலாளர்  பிரிவுகளில் வாழும் மக்கள் பாதிக்கப்படிருக்கிறார்கள் என புத்தளம் மாவட்ட  செயலாளர் தெரிவித்தார். 

வீடுகளுக்குள் வெள்ள நீர் உற்புகுந்துள்ளமையினால் மக்களின் இயல்பு நிலை  பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் உறவினர்கள்  பொதுமண்டபங்களிலும் இடைத்தங்கல் முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டனர்.  எனினும் இன்று வரை பல கிராமங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால்  பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் தமது உறவினர்கள் வீடுகளிலும்  மதஸ்தலங்களிலும் தங்கியுள்ளனர். 

புத்தளம் - சிலாபம் வீதியில் கடும் வாகன நெரிசல் 

வெள்ளத்தினால் சிலாபம் - புத்தளம் பிரதான வீதி புத்தளம் - அநுராதபுரம்  பிரதான வீதியில் 4அடிக்கும் அதிகமான வெள்ளம் வீதிக்குக் குறுக்காக  வேகமாக பாய்ந்து சென்றமையால் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர் நோக்கி  வந்தனர். 

இதனால் புத்தளம் – கொழும்பு -புத்தளம் – அநுராதபுரம் ஆகிய  பிரதான வீதிகளில் திங்கட்கிழமை (08) மாலை முதல் செவ்வாய்க்கிழமை (09)  அதிகாலை வரை கடும் வாகன நெரிசல் காணப்பட்டது.

இன்னும் மோட்டார்  சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் சொகுசு கார்கள் வேன்கள் போன்ற சிறிய  வாகனங்கள் பழுதடைந்த நிலையில் வீதிகளில் நீண்ட வரிசையில் தரித்து  நின்றமையும் அவதானிக்க முடிந்தது. எனினும் புத்தளம் மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க முப்படையினர்  களத்தில் இறங்கி வாகன நெரிசலை செவ்வாய்க்கிழமை (09) காலை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 

ஏழு பேர் மரணம் 

இதேவேளை சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் புத்தளம்  மாவட்டத்தில் இதுவரை 7பேர் உயிரிழந்துள்ளனர். முந்தல் பிரதேச செயலாளர்  பிரிவில் மூவரும் மஹாகும்புக் கடவல பிரதேச  செயலாளர் பிரிவில் இருவரும் மஹாவெவ மற்றும்  வண்ணாத்தவில்லு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒவ்வொருவருமாக 7  பேர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசிறி  தெரிவித்தார். 

புகையிரத சேவைகள் பாதிப்பு 

இதேவேளை புத்தளம் - கொழும்பு புகையிரத போக்குவரத்து சேவைகள்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்படுகிறது. புத்தளம் - கொழும்பு  புகையிரத விதியின் மங்கள எளிய அம்பலவெளி பகுதியில்  தண்டவாளங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன சுமார் 100மீற்றர் வரை  பாரிய குழிகள் ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதமடைந்த நிலையில் இருந்ததை  அவதானிக்க முடிகின்றது. கடந்த காலங்களில் இந்தப் பகுதி வெள்ளத்தில்  மூழ்கிய போதும் இவ்வாறு தண்டவாளங்கள் பாரிய அளவில் சேதமடையவில்லை என  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை கொழும்பு – புத்தளம் தண்டவாளங்கள் இவ்வாறு  சேதமடைந்து காணப்படுவதால் கொழும்பில் இருந்து பங்கதெனிய வரையான புகையிரத  சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை  தெரிவித்துள்ளது. 

ஐந்து நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு 

தெதுரு ஓயா ராஜாங்கன இங்கினிமிட்டிய அங்கமுவ மற்றும்  தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் கடந்த (17)  திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  அறிவித்துள்ளது.

குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு  அதிகரித்துள்ளமையால் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்படி  தெதுரு ஓயா நிர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி வரையும் ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள்  இரண்டு அடி வரையும் தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் 6  அங்குலம் வரையும் இங்கினிமிட்டிய மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின்  தலா இரண்டு வான் கதவுகள் ஒரு அடி வரையும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம்  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கடமை நேர அதிகாரியொருவர்  தெரிவித்தார்.

இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை (17) கடும்  மழை பெய்துள்ள போதிலும் எவ்வித அனர்த்தங்களும் ஏற்படவில்லை எனவும் அந்த  அதிகாரி மேலும் கூறினார். 

36,370 குடும்பங்கள் பாதிப்பு 

புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 36370குடும்பங்களைச் சேர்ந்த  ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 586பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம்  மாவட்டச் செயலாளர் கே.ஜி.விஜேசிறி தெரிவித்தார். அத்தோடு 16தற்காலிக  முகாம்களில் 201குடும்பங்களைச் சேர்ந்த 691பேர் தங்க  வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் தமது உறவினர்களின் வீடுகளில்  தங்கியுள்ளனர். 

இவ்வாறு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு  சமைத்த உணவு,  குடிநீர் வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் என்பன பிரதேச  செயலகங்கள் ஊடாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் வெள்ளத்தினால் ஏற்பட்ட சொத்து சேத விபரங்கள்  தொடர்பில் பிரதேச செயலாளர்கள் ஊடாக விபரங்கள் சேகரிக்கப்பட்டு  வருவதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை புத்தளத்தில் அண்மையில் பெய்த கடும் மழையினால்  ஏற்பட்ட வெள்ளநீரை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறு கற்பிட்டி  ஆலங்குடா பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக புத்தளம்  மாவட்டத்தில் கடும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. இதன்போது கற்பிட்டி பிரதேச  சபைக்குட்பட்ட ஆலங்குடா கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஆலங்குடா பி  முகாம் அல் ஹிஜ்ரா ஜின்னாபுரம் அல் அஸாம் அல் மனார் அல் ஜின்னா மசூர்  நகர் மரவன்சேனை கொலனி ஆகிய பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  இதனால் சுமார் 490குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு  வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்று வரை தங்களது உறவினர்களின்  வீடுகளில் தங்கியுள்ளனர்.

இவ்வாறு தங்கியுள்ள மக்களுக்கு  பொது அமைப்புக்களின் நிதிப் பங்களிப்பில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு  வருகின்றன. 

இந்நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய தமது பகுதிகளை  பார்வையிட்டு தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள்  நடவடிக்கைகள் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் விசனம்  தெரிவிக்கின்றனர்.

கடந்த 8ஆம் திகதி பெய்த கடும் மழையினால் புத்தளம்  மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது.

எனினும் ஓரிரு நாட்களின் பின்னர்  இவ்வாறு வெள்ளத்தினால் மூழ்கிய பகுதிகளில் வெள்ளம் வழிந்தோடியதுடன்  மக்களின் இயல்பு வாழ்க்கையும் கட்டம் கட்டமாக வழமைக்குத் திரும்பியது. 

எனினும் வெள்ளம் ஏற்பட்டு ஒரு வார காலம் நிறைவடைந்த  நிலையிலும் புதன்கிழமை (17) வரை இவ்வாறு வெள்ளநீர் தேங்கியிருந்தது  பெரும் வேதனையளிப்பதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன்  வெள்ளத்தில் மூழ்கியுள்ள தமது வீடுகளை அப்படியே விட்டுவிட்டு  உறவினர்களின் வீடுகளில் தாங்கள் தங்கியுள்ள போதிலும் தமது வீடுகளுக்கு  பாதுகாப்பு இல்லை எனவும் சில வீடுகளில் திருட்டுச் 

சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

எனவே குறித்த பகுதியில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை முறையாக  வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும்  இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சொத்துக்களுக்கு பாரிய நட்டம்  

இதேவேளை புத்தளத்தில் என்றுமில்லாதவாறு இவ்வாறு வெள்ள அனர்த்தம் 

ஏற்பட்டமையினால் சொத்துக்களுக்கும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. புத்தளம் வண்ணாத்தவில்லு கற்பிட்டி முந்தல்  உள்ளிட்ட பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு  வரும் விவசாயம் தும்புத் தொழில் இறால் வளர்ப்பு மற்றும் தேங்காய்  வியாபாரம் என்பன முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் வர்த்தக நிலையங்கள்  அரச மற்றும் தனியார் அலுவலங்கள் என்பனவற்றிலும் பல இலத்திரனியல்  உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் வெள்ளநீரில் மூழ்கி பழுதடைந்துள்ளதாகவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நிவாரணம் வழங்க கோரிக்கை 

புத்தளம் மாவட்ட செயலகத்திற்குட்பட்ட பல பிரதேசங்களில்  ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மற்றும்  இதுவரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் புத்தளம் பிரதேச மக்களுக்கு  நிவாரண உதவிகளை வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் உள்ளிட்டோர் புத்தளம் மாவட்ட  அரசாங்க அதிபர் கே.ஜி.விஜேசிறியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிளுக்கு அமைச்சர் நாமல் விஜயம் 

இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  பகுதிகளை பார்வையிடுவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ  கடந்த (14) புத்தளத்திற்கு விஜயம் செய்தார். 

கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையினால் புத்தளம்  மாவட்டத்தில் உள்ள 16பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வாழும் 40  ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் மக்களின்  வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டதுடன் பல சொத்துக்களுக்கும் பாரிய  சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட ஆராச்சிக்கட்டுவ ஆனவிழுந்தான் பிங்கட்டிய உடப்பு  முந்தல் தாராவில்லு ஆகிய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்  நாமல்  ராஜபக்‌ஷ பார்வையிட்டார். 

அத்துடன் வெள்ளத்தினால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் வீதிகள்  என்பனவற்றையும் பார்வையிட்ட அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களையும்  சந்தித்து அவர்களின் நலன்கள் தேவைகள் பற்றியும் கேட்டறிந்துகொண்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும்  அவசரமாக செய்துகொடுக்குமாறும் தேவைகள் தொடர்பில் அறிக்கை  சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இதன்போது மாவட்ட செயலாளர்  பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்தோடு  வெள்ளத்தினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள முந்தல் பிரதேச இறால் பண்ணை  உற்பத்தியாளர்களையும் கற்பிட்டி பகுதியில் உள்ள விவசாயிகளையும் சந்தித்து  கலந்துரையாடிய அமைச்சர் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும்  கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது இறால் வளர்ப்பாளர்கள் மற்றும் விவசாயிகள்  எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி பிரதமர் மற்றும்  விடயங்களுக்குப் 

பொறுப்பான அமைச்சர்கள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் கூறினார். 

இதேவேளை முந்தல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விஷேட  நிகழ்வொன்றிலும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க  அநுருத்த சனத் நிசாந்த பெரேரா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும்  கலந்துகொண்டனர். முந்தல் பிரதேச செயலாளர் விஜானி வசந்திகாவின் தலைமையில்  இடம்பெற்ற நிகழ்வில் புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தால் முழுமையாக  சேதமடைந்த 14  வீடுகளை மீளவும் புனரமைப்பதற்கு பயனாளிகளுக்கு அமைச்சரினால்  நிதியுதவிகளும் இதன்போது வழங்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

சேத விபரங்களை சேகரிக்கும் புத்தளம் பெரிய பள்ளிவாசல் 

புத்தளம் பெரிய பள்ளி வாசல் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்களை  மதிப்பீடு செய்வதற்கும் பாதிக்கப்பட்டோருக்கு முடியுமான உதவிகளை  வழங்குவதற்கும் தரவுகளை சேகரித்து வருகிறது. வழங்கப்பட்ட தகவல்களின்  அடிப்படையில் புத்தளம் உள்ளூர் அதிகாரிகள் நிறுவனங்கள் மற்றும் சமூக  நலன்சார் அமைப்புகளின் ஆதரவைக்கொண்டு உதவிகள் ஒழுங்கு செய்யப்படவுள்ளது. 

எனவே,https://forms.gle/4A4u;qAds1UzMCmyC8எனும்  இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி  செய்து ஒப்படைக்குமாறு புத்தளம் பெரிய பள்ளிவாசல் புத்தளம் மாவட்ட  பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

ரஸீன் ரஸ்மின்
(கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர் )

Comments