வேளாண் சட்டங்களை மோடி திரும்பப் பெற்றது ஏன்? | தினகரன் வாரமஞ்சரி

வேளாண் சட்டங்களை மோடி திரும்பப் பெற்றது ஏன்?

கடந்த ஒரு வருட காலமாக வட இந்திய விவசாயிகளுக்கும் பிரதமர் மோடியவர்களுக்கும் இடையே நடைபெற்று வந்த கயிறிழுப்பு கடந்த வெள்ளியுடன் முடிவுக்கு வந்துள்ளது. வட மாநில விவசாயிகள் குறிப்பாக பஞ்சாப் உத்தரபிரதேச மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த ஒரு வருட காலமாக பா.ஜ.க. அரசு கொண்டுவந்த மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளச் சொல்லி போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்களது பிரதான போராட்டக்களமாக புதுடில்லி மாறியிருந்தது. மோடியவர்களின் அரசும் கொடாக்கண்டனாக, தன் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்க முன்வரவில்லை. விவசாய பிரதிநிதிகளுக்கும் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கும் இடையிலான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறாமைக்கான முக்கிய காரணம், மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுங்கள் என்ற விவசாயிகள் தரப்பின் கோரிக்கையை அரசு ஏற்க முன்வராதது தான்.

இந்தியா ஒரு விவசாய நாடு. அதன் 130கோடி சனத்தொகையில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானோர் விவசாயிகள். அதனால் தான் இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்று மகாத்மா காந்தி கூறினார். இந்தியாவை உந்தித்தள்ளும் சக்தி கிராமங்களில் தான் இருக்கிறது என அவர் நம்பினார். 2020மார்ச் ஜூன் காலப் பகுதியில் மட்டும் இந்தியாவின் பண்ணை உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி 3.50பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருந்தது என்றால் விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதி இந்திய பொருளாதாரத்தில் எவ்வளவு, முக்கியமான இடத்தை வகிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்திய மாநிலங்களில் கோதுமைக் கிடங்கு என அழைக்கப்படும் மாநிலம் பஞ்சாப். டில்லிக்கு விமான மூலம் பறப்பவர்களின் கண்களைக் கவரும் ஒரு விஷயம். டில்லியை அண்மிக்கும்போது டில்லியைச் சுற்றிவர கோதுமை வயல்கள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து விரிந்து கிடக்கும் அழகுதான். டில்லியில் இருந்து ஆக்ராவுக்கு தாஜ்மஹாலைப் பார்க்க வாகனத்தில் பயணித்தீர்களானால் கோதுமை வயல்களுக்கு மத்தியில்தான் நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு வேளாண்மை அந்நாட்டில் முக்கியத்துவம் பெற்ற துறையாக விளங்குகிறது. அரிசி, கோதுமை, தானியங்கள், கால்நடை உற்பத்திகள் என்பன நேரடி பண்டங்களாகவும், அவற்றைப் பயன்படுத்திய பல்லாயிரம் முடிவுப் பொருட்களாகவும் உள்நாட்டில் விற்பனைக்கு விடப்படும் அதேசமயம் 120உலக நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. உண்மையில் அங்கே விவசாயிகள் தான் ராஜாக்கள்.

புதிய சட்டங்கள் வருமுன் விவசாயிகளும் பண்ணையாளர்களும் தமது உற்பத்திகளை ஏலம் விடுவதன் மூலம் போட்டி விலையில் இலாபம் பெற்றார்கள். இந்த விற்பனை அரசினால் முறைப்படுத்தப்பட்ட மொத்த விற்பனை சந்தைகளில் இடம்பெற்றன.

புதிய சட்டங்களின் கீழ் வேளாண் பொருட்களின் விற்பனையில் இருந்து அரசு முற்றிலுமாகத் தன்னை விடுவித்துக் கொள்கிறது. விவசாயிகளுக்கு முழுச்சுதந்திரம் கொடுக்கிறது. பொருட்களுக்கான குறைந்த பட்ச விலைகளை நிர்ணயித்து வந்த அரசு, அதையும் செய்யாது. குறைந்த பட்ச விலை நிர்ணயம் என்பது விவசாயிகளுக்கு ஒரு பாதுகாப்பை அளித்து வந்தது. புதிய சட்டத்தின்படி, விவசாயிகள் தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமே தமது பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.

இங்கே தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் என்ற பெயர்களில் அறியப்படுவோர் பெருவர்த்தக முதலாளிமாரும் பல்தேசிய மற்றும் தேசிய நிறுவனங்களாகும். டாட்டா, பிர்லா, அதானி, கோத்ரெஜ், அம்பானி மற்றும் பல்தேசிய நிறுவனங்கள் குறிப்பிடும் விலைகளுக்கே பொருட்களை விவசாயிகள் விற்க வேண்டியிருக்கும். விவசாயிகளுக்கு அவர்கள் கடன்களை வழங்கிவிட்டு பின்னர் பொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்கவும் கூடும். பெரு முதலாளிகளிடம் தான் பணயக்கைதிகளாகி விடலாம் என்ற அச்சமும் விவசாயிகளிடம் உண்டு.

பா.ஜ.க அடிப்படையில் முதலாளித்துவ கட்சி. பெரும்பாலும் அமெரிக்கசார்பு நிலை எடுக்கக் கூடிய கட்சி. அகண்ட இந்தியா, இந்துத்துவா, கிறிஸ்தவ, இஸ்லாமிய எதிர்ப்பு, பிராமணிய மற்றும் வர்ண பேதத்தை போற்றும் பண்பு என்பன ஆர்.எஸ்.எஸ். சின் அடிப்படைக் கோட்பாடுகளாக இருப்பதால் பா.ஜ.கவும் அவற்றையே பின்பற்றி வருகிறது. காங்கிரசை வீழ்த்திவிட்டு இந்தியாவை ஆளும் கட்சியாக பா.ஜ.க.வந்ததற்கு முக்கிய காரணம் அதன் இஸ்லாமிய எதிர்ப்பு மனோ நிலையும் அது கையாண்ட வன்முறை கலாசாரமும்தான். உதாரணத்துக்கு குஜராத் கலவரம் மற்றும் அயோத்தி மசூதி தகர்ப்பு. தற்போது தமது தேர்தல் வெற்றிக்கு அக் கட்சி நம்பியிருப்பது அயோத்தியில் வளர்ந்து வரும் இராமர் கோவிலை.

இந்த அடிப்படையில், இந்தியாவின் மிக முக்கிய துறையான வேளாண் துறையை தனியார் துறைக்கு தாரை வார்ப்பதை நோக்கமாகக் கொண்டு நிறைவேற்றப்பட்ட சட்டங்களே இவ் வேளாண் சட்டங்கள் என்பது இப்போராடும் கிஷான் (விவசாயி) அமைப்பின் நிலைப்பாடு. இந்த சட்டத்துக்கு விட்டுக் கொடுத்தால் விவசாயிகளின் கதி அதோ கதியாகிவிடும் என்பது கிஷான் அமைப்பின் உறுதியான நம்பிக்கை. எனவே தம்மை அடிமைப்படுத்தும் சட்டங்களை முற்று முழுதாக விலக்கிக் கொள்ளும்வரை இப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று வட நாட்டு விவசாயிகள் தீர்மானித்ததின் விளைவாகவே கடந்த செப்டம்பர் மாதம் டில்லியை முற்றுகையிட விவசாயிகள் தீர்மானித்து செயலிலும் இறங்கினர்.

டில்லி இவ்வளவு பெரிய விவசாயிகள் போராட்டத்தை முன்னெப்பொழுதும் சந்தித்ததில்லை. அவர்கள் குறிவைத்தது டில்லி இந்தியா கேட் மற்றும் பாராளுமன்றம் அமைந்திருக்கும் விசாலமான பரந்த இடத்தைத்தான். ஆனால் பொலிஸார் டில்லிக்குள் நுழைவதை வெற்றிகரமாகத் தடுக்கவே அந்த இடத்திலேயே சுமார் ஒருலட்சம் விவசாயிகள் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். கடந்த ஜனவரியில் அவர்கள் நடத்திய பிரமாண்டமான டிரக்டர் பேரணியின்போது டில்லி செங்கோட்டை அமைந்திருக்கும் பகுதியில் விவசாயிகளின் டிரக்டர்கள் நுழைந்தன. ஒரு விவசாயி பொலிஸாரின் காவலையும் மீறி செங்கோட்டையி்ல் ஏறி விவசாயிகளின் கொடியை ஏற்றினார். டில்லியில் இது பேசப்படும் விஷயமாயிற்று. தமது பலத்தை அரசுக்கு காட்டும் ஒரு நிகழ்வாக இது விவசாயிகள் தரப்புக்கு அமைந்தது.

எனினும் மோடி அரசு தொடர்ந்தும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுக்காத கொடாக் கண்டனாகவே நடந்து கொண்டது. தான் பதவிக்கு வர உதவிய பெரு நிறுவனங்களுக்கு விசுவாசமாக, பல பில்லியன் சந்தை மதிப்பு கொண்ட விவசாயத்துறையை தாரைவார்க்கவே மோடி விரும்புகிறார் என்பது விவசாயி தரப்பு தரும் விளக்கம். மோடியோ, இச்சட்டங்கள் விவசாயிகளின் மேம்பாட்டைக் கருதி உருவாக்கப்பட்டவை. அவர்கள் இச்சட்டங்களை மிகச் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை. விளக்குவதற்கு நாம் போதிய முயற்சிகள் செய்யவில்லையோ என்றும் தோன்றுகிறது என்கிறார். உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் கோடீஸ்வர விவசாயிகள் உள்ளனர். இச்சட்டங்களால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதோடு இடைத்தரகர்களுக்கும் பிழைப்பு போய்விடும் என்பதால்தான் பணக்கார விவசாயிகள் சாதாரண விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துகிறார்கள் என்பது பா.ஜ.க. முன்வைக்கும் குற்றச்சாட்டு. பஞ்சாப்பில் ஆளும் கட்சி காங்கிரஸ் என்பதால் இப்போராட்டம் பஞ்சாபிகளால் உக்கிரமாக நடத்தப்படுவதற்கு காங்கிரசே பின்னணியில் இருந்து செயல்படுகிறது என்பது மத்திய அரசின் குற்றச்சாட்டு.

அனேகமாக எந்த இந்திய எதிர்க்கட்சியும் வேளாண் சட்ட விவகாரத்தில் மோடி அந்தர் பல்டி அடிப்பார் என எதிர்பார்க்கவில்லை.

 

மோடியவர்கள் வேளாண் சட்டங்களான வேளாண் விலைபொருள் மற்றும் வர்த்தக சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவரை சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த அவசர சட்டம் என்பனவற்றை திரும்பப் பெற்றுள்ளதால் காங்கிரங் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளனவாம். மேலும் உத்தரபிரதேசத்தின் ராஷ்டிரிய லோக் தளம், சமாஜ்வாடி கட்சிகளுக்கும் அடியாக அமைந்திருக்கிறது இந்த அறிவிப்பு, ஏனெனில் உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேச போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜ.க.வின் செல்வாக்கை குப்புறக் கவிழ்ப்பதற்கு இக்கட்சிகள் விவசாயிகளின் போராட்டத்தைப் பயன்படுத்தவிருந்தன.

அடுத்த வருடம் உத்தர பிரதேசத்தில் மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளது. 2017ஆம் ஆண்டு தேர்தலில் உத்தரபிரதேச பாராளுமன்றத்துக்கு 72உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அங்கே மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 80. பஞ்சாப்பிலும் அடுத்த வருடம் தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த வருடம் ஐந்து வடமாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த ஐந்து மாநிலங்களிலும் உள்ள பெரும்பாலான விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள். ஒரு கட்சி மத்திய அரசில் ஆட்சி பீடமேற வேண்டுமானால் உத்தர, மத்திய பஞ்சாப், ஹரியானா, பீகார் போன்ற வடமாநிலங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம். இவை இந்தி பேசும், இந்துக்கள் நிறைந்த மாநிலங்கள். எனவே பா.ஜ.க. கொடி கட்டுவதற்கு வாய்ப்பான மாநிலங்கள். இப்போது பா.ஜ.க.வுக்கு இங்கே வெற்றி வாய்ப்புகளுக்கு விரோதமாக இருப்பது இந்த வேளாண் சட்டங்கள்தான். பா.ஜ.க. 2024பொதுத்தேர்தலில் பெரு வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகவும் ஆட்சியைத் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தடையாக இருப்பது விவசாயிகள் தமக்கு வேண்டாம் எனச் சொல்லும் வேளாண் சட்டங்கள்.

பா.ஜ.க தலைவர்களின் உயர்மட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலேயே, 2024பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிவெறும் நோக்கத்தோடு மட்டுமே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இச்சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளார். இந்தியாவில் ஐம்பது சதவீதமானோர் விவசாயிகள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17முதல் 18சதவீதத்தை விவசாய உற்பத்திகள் இட்டு நிரப்புகின்றன. எனவே விவசாயிகளுடன் நேரடி மோதலைத் தவிர்க்கும் ஒரு உத்தியே மோடியின் இந்த வாபஸ் முயற்சி. மோடியவர்கள் இவ் வேளாண் சட்ட வாபஸ் அறிவிப்பு பஞ்சாப் மக்களின் சீக்கிய மதத்தலைவர் குருநானக்கின் பிறந்த தினத்தன்று வந்திருக்கிறது. எனினும் பாராளுமன்றத்திலேயே திருத்த மசோதா சமர்பித்து இச்சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். அதனால், தமது எதிர்ப்பு நிலைப்பாட்டை தொடர்வது என்றும் பாராளுமன்றத்தில் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதுமே அரசை நம்பக் கூடியதாக இருக்குமென்றும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. மோடியின் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்திருப்பவர்களில் ஒருவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். கடந்த ஒரு வருடகால போராட்டகாலத்தில் போராடும் விவசாயிகளுக்கு தி.மு.க. தமது ஆதரவைத் தெரிவித்து வந்துள்ளது. சட்டசபையில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றினார். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழக விவசாயிகள் புதுடில்லியில் தொடர் போராட்டங்களை நிகழ்த்தியபோது அ.தி.மு.க அரசு அதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தி.மு.க. தன் ஆதரவைத் தெரிவித்ததோடு தன் எம்.பிமாரையும் விவசாயிகளுடன் கலந்துரையாட அனுப்பி வைத்தது. வடமாநில விவசாயிகளின் போராட்டத்துக்கும் அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆதரவு தெரிவித்த தி.மு.க.வின் நிலைப்பாடு சரி என்பது தற்போது புலனாகியுள்ளதால் தன் கிரீடத்தில் ஏற்கனவே பல மயிலிறகுகளைச் சூடியுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு இது மற்றொரு வெற்றி இறகாக அமைந்துள்ளது.

அருள் சத்தியநாதன்

Comments