அரசியல் தீர்வு குறித்து அமெரிக்காவில் பேச்சு | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் தீர்வு குறித்து அமெரிக்காவில் பேச்சு

அரசியலமைப்பு உள்ளடங்கலாகப் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் அமெரிக்காவுக்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டெபோரா கே.ரோஸை சந்தித்து பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் மற்றும் கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் அடங்கிய சட்டநிபுணர் குழு கடந்த சனிக்கிழமை அமெரிக்கா பயணமானது.

தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இக்குழுவினருக்கும் அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன.

அதன் ஓரங்கமாக அமெரிக்க காங்கிரஸில் வட கரோலினா மாநிலத்தின் இரண்டாவது மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் உறுப்பினரும் சட்டத்தரணியுமான டெபோரா கே.ரோஸிற்கும் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். அதுமாத்திரமன்றி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தின் பதில் உதவிச் செயலாளர் லிஸா பீட்டர்ஸன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுடனும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவுடனும் இலங்கையிலிருந்து சென்ற எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

Comments