கடந்த ஒன்றரை வருடத்தில் வடக்கில் பாரிய அபிவிருத்தி | தினகரன் வாரமஞ்சரி

கடந்த ஒன்றரை வருடத்தில் வடக்கில் பாரிய அபிவிருத்தி

வடக்கில் கடந்த ஒன்றரை வருட காலத்தில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  ஆனால் வடக்கு, கிழக்குக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கவில்லயென்று எதிரணி குற்றம் சாட்டுகிறதென குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமனாதன் எம்.பி தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு  மாத்தறை மாவட்டத்தில் 3,74,481வாக்குகள் கிடைத்தன. அதே வேளை யாழ் மாவட்டத்தில் 23,162தான் கிடைத்தன. வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தாலும் நிதி ஓதுக்கீட்டில் மாற்றம் கிடையாதென்றும் அவர் குறிப்பிட்டார்.

வரவு செலவுத்திட்ட 02ஆம் வாசிப்பு மீதான 06ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் வேலை, அபிவிருத்தி செய்வது தானென்று  சில தமிழ் கட்சிகள் கூறினாலும்  நல்லாட்சியில் ஏன்  அதனை செய்யவில்லை. அவர்கள் நாட்டின் மீது அக்கறை கொண்டு செயற்படவில்லை. நல்லாட்சியில் முன்னெடுத்த திட்டங்கள் தோல்வியடைந்தன.

அதிக விலைவாசி, உணவுப் பற்றாக்குறை, பதுக்கல் போன்ற  பல்வேறு பிரச்சினைகள்  மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.இதே நிலை ஏனைய நாடுகளிலும் காணப்படுகிறது. இந்த நிலையில் மேலும் மக்கள் மீது சுமையை ஏற்றாதிருப்பதே முக்கிய விடயமாகும். அனைத்து மக்களிடமிருந்தும் பணத்தை வரியாகப் பெறும் நிலை இருந்தது. ஆனால் சொற்பப பேரிடமிருந்து பணத்தை  பெற நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

குறுக்கீடு

செல்வம் அடைக்களநாதன் எம்.பி கருத்துத் தெரிவிக்கையில்

அபிவிருத்தி பற்றி கூறினீர்கள்.ஆனால் அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு ஏன் ஏனைய கட்சிகள் அழைக்கப்படுவதில்லை? என்று வினவினார்

இதற்குப் பதிலளித்த அங்கஜன் இராமனாதன் எம்.பி,

ஏனைய மாவட்டங்களை பற்றி எனக்கும் தெரியாது. யாழ். மாவட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் அழைக்கிறோம். அனைவரையம் உள்வாங்கியே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. 1,000 மில்லின்  ரூபா வீணடிக்கப்பட்டதோடு மோசடி  நடந்தது என்றார்.(பா)

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Comments