பிரபாகரனின் தவறான அணுகுமுறையினால் ஈடுவைக்கப்பட்ட தமிழ் மக்களை மீட்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

பிரபாகரனின் தவறான அணுகுமுறையினால் ஈடுவைக்கப்பட்ட தமிழ் மக்களை மீட்க வேண்டும்

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளினால் தமிழ் மக்களை அடகுவைத்து விட்டு அழிந்து விட்டதாகவும், அதிலிருந்து மக்களை மீட்க வேண்டி இருப்பதால் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக சமர்த்தி உத்தியோகத்தர்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலின் போது, கிளிநொச்சி மாவட்டத்தில் 1,438குடும்பங்கள் சமுர்த்தி பயனாளர்களாக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில், மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டதுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் அணுகுமுறை காரணமாக சமுர்த்தித் திட்டம் வடமாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டியதுடன், தமது அணுகுமுறையே சரியானது என்பதை நிரூபித்த விடயங்களில் ஒன்றாக சமர்த்தி திட்டம் அமைந்துள்ளதாவும் தெரிவித்தார்.

மேலும், மக்கள் தொடர்ந்தும் கையேந்தி வாழாமல் நிரந்தரமான வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் சமுர்த்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Comments