லண்டனில் இலங்கையரது வீட்டில் பாரிய தீ விபத்து | தினகரன் வாரமஞ்சரி

லண்டனில் இலங்கையரது வீட்டில் பாரிய தீ விபத்து

ஜன்னல் வழியாக பாய்ந்து பாட்டனார் உயிர் பிழைப்பு; எனினும் கால்கள் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

தென்கிழக்கு லண்டனிலுள்ள (Bexleyheath) பெக்ஸ்லிஹீத்தில் அமைந்துள்ள  இலங்கையர் வீடொன்றில் திடீரென ஏற்பட்ட 'தீ' விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.இந்த வீடு மூன்று மாதங்களுக்கு முன்னரே வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் தாய், இரு பிள்ளைகள் மற்றும் பாட்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றும் ஒருவர் (பாட்டனார்) வீட்டின் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய போதிலும் அவரது கால்கள் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் இரவு 8.30மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது மனைவி தனது கைத்தொலைபேசி செயலிழப்பதற்கு முன்னதாக, கணவரை தொடர்பு கொண்டு தீப்பற்றியுள்ளதாக பதற்றத்துடன் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயற்பட்ட போதிலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.யோகன் தங்கவடிவேல் என்று அழைக்கப்படும் கணவர், தனது குடும்பத்தினரை இழந்த நிலையில், தீயில் கருகிய வீட்டின் முன்பாக கதறியழுது, சரிந்து விழுந்த காட்சிகள் அங்கிருந்த மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யோகன் பணியிலிருந்த போது, அவரது மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மிகவும் பீதியடைந்த குரலில் அவர், ‘நெருப்பு, நெருப்பு’ என கத்தியுள்ளார். அத்துடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.ஆண்,பெண் இரு குழந்தைகளும் படுக்கையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவரது தாய் நேற்று இலங்கை செல்லவிருந்ததாகவும், அதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.அந்தப் பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் வீட்டின் முன் கூடி மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதேவேளை, இந்த வீட்டை மூன்று மாதங்களுக்கு முன்னரே 4,25,000 பவுண்ட்களுக்கு வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.

Comments