சிறுபான்மை சமூகங்களின் மாகாணங்களை வெல்வதற்கு தமிழ் பேசும் தலைமைகள் ஒன்றிணைவது அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

சிறுபான்மை சமூகங்களின் மாகாணங்களை வெல்வதற்கு தமிழ் பேசும் தலைமைகள் ஒன்றிணைவது அவசியம்

சிறுபான்மைச் சமூகங்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு தமிழ், முஸ்லிம் தலைமைகள் தீர்க்கமான வியூகங்களை வகுக்க வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார். இதுபற்றி அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு தெரிவித்தவையாவது....

கேள்வி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சமகால அரசியல் போக்குகள் பற்றி விளக்கி சொல்லலாமா?

பதில்: சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மக்களின் நாடித்துடிப்புக்களை அறிந்து கொள்வதற்கு ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் கட்சியின் தலைவர் சென்று வருகிறார். அவர்களது கருத்துக்களும் செவிமடுக்கப்படுகின்றன. இவ்வாறு, தலைவரின் விஜயங்களில் பெறப்படும் அனுபவங்கள், மக்களின் அறிவுரைகளை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் அடுத்த கட்டப் பணிகள் மும்முரப்படுத்தப்படவுள்ளன. எந்தத் தீர்மானங்கள் எடுத்தாலும் அவற்றுக்கு கட்டுப்பட்டு கட்சிப் பணியில் தொடர்ந்தும் பயணிக்கவுள்ளேன்.

கேள்வி: அம்பாறை மாவட்டத்தில் உங்களது கட்சியைச் சேர்ந்த சிலர்,பிரபலத்துக்காக எதையெதையோ செய்கின்றனர். ஆனால், உங்களது செயற்பாடுகள்......?

பதில்: பிரபல்யங்களுக்காகச் செய்வது வேறு, பிரயோசனங்களுக்காகச் செய்வது வேறு. எதை,எவர் எதற்காகச் செய்கின்றனர் என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியும். அந்தளவுக்கு அரசியலில் மக்கள் தெளிவடைந்துள்ளனர். நான், எதையாவது செய்ய அல்லது சாதிக்கப் புறப்பட்டால் சமூகத்துக்குப் பிரயோசனமாகத்தான் அது இருக்கும். அதற்காக ஏனையோர் செய்வது சமூகத்துக்கு பிரயோசனமற்றது என்பதும் இல்லை.

கேள்வி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் அண்மைக்கால செயற்பாடுகள், கட்சியிலிருந்து அந்நியப்பட்டதாக சிந்திக்க வைக்கிறதே!?

பதில்: கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயக அரசியலில் தவிர்க்க முடியாதது. ஏதாவது ஒன்றுக்காக ஒருவர் பேசினால், தங்கள் தனிப்பட்ட நோக்கங்களுக்காக சிலர் அதைத் தூக்கிப்பிடிக்கின்றனர். எமது மாவட்ட எம்பியின் விடயத்திலும் இதுதான் நடப்பதாக நான் உணர்கிறேன். என்னதான் நடந்தாலும், எல்லாம் தீர்ந்துவிடக் கூடியதுதான். அம்பாறை மாவட்டத்தில் எங்கள் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்தது அங்கீகாரத்துக்கான அடையாளம்தான்.எனவே, தலைமையும் இவ்விடயத்தில் நெகிழ்வுத் தன்மையுடன் நடக்கும் என்றுதான் எதிர்பார்க்க வேண்டியுள்ளது.

கேள்வி: உள்ளூராட்சி சபையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட சுழற்சி முறை ஆசனங்கள்,சிலருக்கு கிடைக்காமலிருக்கிறதே ஏன்?

பதில்: உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2018இல் நடத்தப்பட்டது. அப்போது நல்லாட்சி அரசாங்கத்தில் எமது கட்சியும் இருந்ததால் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் இணைந்து சில சபைகளில் போட்டியிட்டது. பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் யானைச் சின்னத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட நேரிட்டது.இதனால்,யானைச் சின்னத்தில் தெரிவான எங்களது உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி சட்ட நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. இதனால், உறுப்பினர்கள் பதவி விலகி ஏனையவர்களுக்கு சுழற்சி முறையில் இடம்கொடுக்க முடியாதளவுக்கு சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளன. இதனால்தான், சுழற்சி முறையில் இன்றும் இழுபறி நிலவுகிறது.

கேள்வி: சம்மாந்துறை மக்களின் கரங்கா வட்டை பற்றிய சர்ச்சையில் தற்போதைய நிலைப்பாடுகள் எவ்வாறு உள்ளன?

பதில்: இவ்விடயம் நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பு வரும் வரைக்கும் எதையும் சொல்ல முடியாது. தேசத்துக்கு மகுடம் "தெயட்டகிருள" அம்பாறையில் நடத்தப்பட்டது. இதில், பங்குபற் றிய அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்களின் வாகனங்கள் தரித்து நிற்பதற்குத்தான் இந்தக் காணிகள் அப்போது வழங்கப்பட்டன. இதனால், பிறரது பார்வைகளுக்கு இந்தக் காணிகள் தென்படத் தொடங்கின. எனினும், இது, பறிபோன காலகட்டத்தில் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தவர்கள், மாகாண சபையில் அதிகாரத்தில் இருந்தவர்கள் உள்ளடங்கலாக, அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக செயற்பட்டவரும் தலையிட்டு இவற்றை மீட்டிருக்கலாம்.

கேள்வி: நடைபெறலாமென எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தல்களில் உங்களது கட்சி எந்தக் கூட்டணியில் இணையுமென எதிர்பார்க்க முடியும்?

பதில்: நான், ஏற்கெனவே சொன்னதைப் போன்று, இதற்கான கள நிலவரங்களை அறியும் நோக்குடன்தான் கட்சித் தலைவர் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். ஆனால், என்னிடம் தனிப்பட்ட யோசனை உள்ளது. தமிழ், முஸ்லிம் ஏக தலைமைகளாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எங்களது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணைந்து போட்டியிடுவது சிறப்பாக இருக்கும்.ஆட்சியும் வேறுபக்கம் செல்லாது தடுக்கப்பட்டு சிறுபான்மைத் தலைமைகளிடம் வரும்.

கேள்வி: சிறுபான்மை சமூகங்களின் மாகாணங்களை (வடக்கு, கிழக்கு) கைப்பற்றும் உங்களது வியூகங்களை விளக்கமாக சொல்ல முடியுமா?

பதில்: மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிட்டால் இருபது ஆசனங்கள் கிடைப்பது உறுதி. மீதி 17ஆசனங்களும் ஏனையோரிடம் இருந்தாலும் ஆட்சி அமைக்க முடியாதே! இன்னும், ஓரிரு ஆசனங்களுள்ள ஆனால்,எங்களது அணியில் இல்லாவிட்டாலும் தமிழ் தேசியத்தை விரும்பும் கட்சிகளும் எங்களுடன் இணையும் என எதிர்பார்க்கலாமல்லவா.

கேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் தலைமைகளுடன் இணைந்து போட்டியிடுவது சாத்தியமானதுதானா?

பதில்: இப்போதுள்ள நிலைமையில் இது சாத்தியமில்லை. ஆனால்,எப்போதும் இது சாத்தியமாகவே வேண்டும். ஒரு சிலரின் பழிச்சொல்லுக்காகத்தான்,இந்த இணைவு பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் தலைமைகளும் யோசிக்கின்றன. பரவாயில்லை தனித்துப் போட்டியிட்டு பின்னர் இணைந்து கொள்ளும் நடைமுறைகளும் அரசியலில் உள்ளதே!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து போட்டியிட்டால் போனஸ் ஆசனங்களுடன் சேர்த்து 14ஆசனங்களைப் பெறலாம். தனித்துப் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆறு ஆசனங்களை இலகுவாகப் பெறும். இணைந்தால் இருபது ஆசனங்களைக் கொண்டு ஆட்சியமைக்கலாம். பின்னர் முதலமைச்சர்களின் தவணைகளைப் பங்கிடலாம். இந்த வியூகம்தான், ஏனையோருக்கு பாடமாக அமையும்.

ஏ.ஜீ.எம்.தௌபீக்

Comments