பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்டதே இந்த பட்ஜட் | தினகரன் வாரமஞ்சரி

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்டதே இந்த பட்ஜட்

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தனது முதலாவது வரவு, செலவுத் திட்டம் தொடர்பில் கூறிய கருத்துக்கள்

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தினகரனுக்கு தெரிவித்தார். தினகரனுடனான நேர்காணலின் போது அவர் தெரிவித்த கருத்துக்களை இங்கு தருகின்றோம்

இம்முறை வரவு செலவுத் திட்டமானது பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சிக்கிய வரவு செலவுத் திட்டமா? அப்படியாயின் அதற்கான காரணம்?

ஆம். இந்த வரவு செலவுத் திட்டமானது அனைவருக்கும் பெரும் சவாலாகும். 1953ம் ஆண்டின் பின்னர் இந்நாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வரவு செலவுத் திட்டங்களிலும் வருமானத்தை விட செலவு அதிகமாகும். எல்லா வருடங்களிலும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை இருந்தது. இவ்வருடத்திலும் அது அவ்வாறேதான் உள்ளது. அதேபோன்று அந்நிய செலாவணி வரவு செலவுத் திட்டமும் அவ்வாறே இடம்பெற்றது. எமக்கு கிடைக்கும் வருமானம் குறைந்தது. வெளிநாடுகளில் எம்மவர்கள் உழைக்கும் டொலரினைத் தாண்டி வெளிநாடுகளிலிருந்து பொருட்களைக் கொண்டு வருவதற்கு செலவு செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டையும் பெரும்பாலும் வெளியில் வேறு வழிகளில் கடன் பெற்றே தீர்த்து வைக்கப்பட்டது. அத்துடன் இம்முறையும் உள்நாட்டு வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையினை ஈடு செய்வதற்கு சில வரிகள் அல்லது வருமான வழிகளைத் தேட வேண்டிய நிலை. அதுவும் சில தரப்பிடமிருந்து பெறுவதைப் போன்று பெரும்பான்மையினரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்த சவால் எமக்கிருந்தது.

இம்முறை கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் இருந்ததால் முன்னரைப் போன்று வெளியிலிருந்து கடன் பெற முடியாது போனது. வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் நாம் பல வருடங்களாக பெருமளவிலான கடனைப் பெற்றிருந்ததால் நிலைமை மோசமடைந்தது. உலகில் கடன் வழங்கும் நிறுவனங்களும் எம்மை தரப்படுத்தலில் கீழே இறக்கியுள்ளன. நாட்டில் நிலவிய கொவிட் நிலைமையினால் மக்களிடமிருந்து அல்லது வர்த்தகர்களிடமிருந்து முன்னரைப் போன்று கடன் பெற முயடிாமல் போனது. அவர்களும் இந்த கொவிட் மற்றும் பொருளாதார பிரச்சினைகளினால் மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தார்கள். முன்னர் நாம் கடன் பெற்ற வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தற்போது எம்மிடம் நிவாரணங்களைக் கேட்கின்றார்கள். இதனால் இந்த வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. நான் சவால்களைச் சந்திப்பதற்கு விருப்பமுடையவன். எனினும் இந்தச் சவால்களுக்கு மத்தியில் சிறந்த வரவு செலவுத் திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு நான் முயற்சித்தேன்.

இங்கு நான் செய்தது பூவை நசுக்காமல் கழிவுகளை அப்புறப்படுத்தும் வேலையேயாகும். அந்த சவாலை வெற்றி கொள்வதற்கு நான் சிறந்த வழியினைக் காட்டியிருக்கின்றேன் என நான் நினைக்கிறேன். இனி நாம் செய்ய வேண்டியது கட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றிணைந்து இந்த புதிய வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி பெறுவதேயாகும். இதனை ஒருபோதும் என்னால் மாத்திரம் செய்ய முடியாது. அனைத்து துறைகைளயும் சேர்ந்த அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பு இதற்காகத் தேவையாகும்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி மட்டம் எவ்வாறானது?

கொவிட் தொற்றுடன் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. எனினும் இதற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் எமது பொருளாதாரம் 7வீத வளர்ச்சியைக் காட்டியது. 2014ம் ஆண்டிற்கு முன்னர் 3வருடங்கள் பொருளாதார வளர்ச்சி 7வீதத்தைத் தாண்டியிருந்தது.

எனினும் கொவிட் தொற்றின் காரணமாக எமது பொருளாதாரம் வீழ்ச்சிடைந்தது. எவ்வாறாயினும் இந்த புதிய வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய நாம் அடுத்த வருடத்தில் இவ்வருடத்தை விட உயர்ந்த பொருளாதார வளர்ச்சி மட்டத்தை எதிர்பார்க்கின்றோம்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது 65ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் தர பணியாளர்கள் விரக்தியடைவதற்கு இடமுள்ளதா?

அவ்வாறு நடக்காது. இந்த வேலைத்திட்டத்தினால் இரண்டாம் தர பணியாளர்களுக்கு இந்த சிரேஷ்ட அதிகாரிகளிடமிருந்து அவர்களது முதிர்ச்சி மற்றும் திறமைகளுக்கு அமைய ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இன்று எமது நாட்டில் உயிர்வாழும் வயது மட்டம் அதிகரித்துள்ளது. எனவே, செயற்படும் அரச உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் முதிர்ச்சி, நிபுணத்துவம் மற்றும் மூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டிற்காக தொடர்ந்தும் திறமையாக பணியாற்றுவதற்கு இந்த வாய்ப்பை வழங்கவே முயல்கிறோம்.

அத்துடன் தனியார் துறைகள், அரை- அரசு மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளின் உறுப்பினர்கள் இப்போது 60வயது வரை பணியாற்றலாம். இதன் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நன்மை கிடைக்கின்றது.

அரச சேவை உண்மையிலேயே நாட்டிற்கு சுமையா?

அது அவ்வாறில்லை. எனினும் அரச சேவையானது முற்றாக பொது மக்களுக்குச் சேவையாற்றும் மக்களுக்குச் சார்பான சேவையாக இருக்க வேண்டும்.

இப்போது பாருங்கள், தாய் ஒருவர் கர்ப்பமானால் அது அவருக்கு சுமையாகும். எனினும் அது அதனை விடவும் அத்தாய்க்கு வளமாகும். அத்தாய் அக்குழந்தையை மீது அதிக பாசம் காட்டுவாள். எப்போதும் பணியாற்றுவது ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காகும். தேவையான மருந்துகள், உணவுகளை உட்கொள்வாள். தேவையற்ற உணவுகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பாள். அதேபோன்றுதான் அரச ஊழியர்களும் அரசாங்கத்திற்கு ஒரு சுமையாக இருந்தாலும் நாம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். நாட்டிற்கு அவர்களால் பெரும் நன்மைகள் இருக்கின்றன.

எனினும் இங்கிருக்கும் பெரிய பிரச்சினை இன்று எமது நாட்டின் பிரதான மூன்று செலவுகளுள் அதிக முக்கியமானதுதான் அரச சேவையாளர்களுக்கான சம்பளங்களுக்கான செலவாகும். அது மிகப் பெரும் தொகையாகும். இதற்குப் புறம்பாக நாம் முன்னர் பெற்ற கடனைச் செலுத்துவதற்கு நாம் பெரும் தொகையைச் செலவிடுகின்றோம். இதற்குப் புறம்பாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு சமுர்த்தி மற்றும் உர மானியங்களை வழங்குவதற்கும் பெருமளவினான நிதியினைச் செலவிடுகின்றோம்.

நான் கூறியது நிதி பற்றிய விடயங்களை. மற்றைய பக்கத்தில் மக்கள் அரச நிறுவனம் ஒன்றிற்கு சேவை ஒன்றை எதிர்பார்த்துச் சென்றால் அவர் அந்த சேவையினால் திருப்தி அடையாவிட்டால் அது எமக்குப் பெரிய பிரச்சினையாகும். அரசாங்கம் சம்பளம் வழங்கி அந்த அதிகாரிகளை நியமித்திருப்பது மக்களுக்கு சரியான சேவையினை வழங்குவதற்காகும். இதனடிப்படையில் அரச சேவையினைப் பெற்றுக் கொள்வதற்காக வருபவர்கள் திருப்தியடையும் வகையில் அவர்களுக்குத் தேவையான சேவையினை வழங்க வேண்டும் என யோசனை முன்வைத்திருக்கின்றேன். இதனடிப்படையில் அனைத்து அரச நிறுவனங்களும் நுகர்வோர் சேவை வாக்குறுதிப் பத்திரம் ஒன்றை நிறுவன வளாகத்தில் காட்சிப் படுத்துவதை ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் அரச சேவையினை மக்களுக்குச் சார்பாக சேவையாக ஆக்குவதற்கு ஆரம்ப வழியினைக் காட்டியிருக்கின்றேன்.

நீங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் வாகன அனுமதிப் பத்திரத்தைக் கூட நீங்கள் பெற்றிருக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை 10வருடங்களாக அதிகரித்ததால் உங்களுக்கும், இன்னும் அனேக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அந்த சலுகை இல்லாமல் போகும் தானே?

இது பொருளாதார ரீதியில் எமக்கு பெரும் நன்மைகள் கிடைக்கும் ஒரு விடயமல்ல. இது அரசியல் ரீதியாக முன்வைக்கப்பட்ட யோசனையாகும். எமது நாட்டின் பல்வேறு சமூக ஊடகங்கள் மூலம் மற்றும் பல்வேறு கருத்துக்கள் மூலம் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பில் விமர்சிக்கப்பட்டு வந்துள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள 225உறுப்பினர்களுக்கும் இதனால் சில மன வேதனை ஏற்பட்டிருக்கலாம். அவ்வாறானவர்களுக்காக செய்த நடவடிக்கையாகவேதான் நான் இந்த யோசனையினை முன்வைத்தேன்.

இது தொடர்பிலும் மக்கள் கருத்துக்களும் இடம்பெற்றிந்தது. இதனடிப்படையில் மேலே பார்த்து செல்வதைவிட கீழ் நோக்கிச் செல்வதே சிறந்தது என நான் நினைத்தேன். இதன் பிரகாரமே நான் இந்த யோசனையை முன்வைத்தேன்.

இந்த பிரேரணையினால் வரும்காலத்தில் எமது முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கும் ஓய்வூதியம் இல்லாமல் போகுமா?

அதனை என்னால் இப்போதே கூற முடியாது. இதற்காகப் பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும். அதனை அங்கீகரிப்பது அல்லது தோற்கடிப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் வேலையாகும்.

பல வருடங்களாக நிலவி வந்த ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டினை நீங்களும், பிரதமரும் இணைந்து தீர்த்து வைத்துள்ளீர்கள். எனினும் இதனால் மீண்டும் அரச சேவையில் சம்பள முரண்பாடுகள் ஏற்படும் என சில அரச சேவை தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

இந்த ஆசிரியர் சம்பள முரண்பாட்டினை நாம் தீர்த்து வைத்திருப்பது அவ்வாறு மீண்டும் அரச சேவையில் சம்பள முரண்பாடுகள் இடம்பெறாத வகையிலாகும். என்றாலும் பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிடுவதை நானும் கண்டேன். அவை தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

எவ்வாறாயினும் அடுத்த வருடத்தினுள் முழு நாட்டிலும் அரச சேவையாளர்களினதும், ஓய்வூதியம் பெறுவோரினதும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு நாம் ஆயத்தமாகியிருக்கின்றோம். விசேடமாக அரச ஊழியர்களின் சம்பளத்தை தற்போதையதை விடவும் உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.

அத்துடன் அனைத்து அரச சேவையினுள்ளும் ஒவ்வொரு குழுக்களைத் தெரிவு செய்யாமல் அரச சேவையின் அனைவரதும் சம்பள முரண்பாடுகளையும் நீக்குவதற்கு புதிய சம்பள விகிதங்களை வழங்குவதற்கு அரச சேவை சம்பள ஆணைக்குழுவினால் தகுந்த பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு நாம் கேட்டுள்ளோம். வரவு செலவுத்திட்டத்திலும் இந்த யோசனையை நாம் முன்வைத்துள்ளோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற மொட்டு கட்சியை உருவாக்கியவர் நீங்களே. அதன் செயற்பாட்டாளரும் நீங்களே. ஜனாதிபதி உள்ளிட்ட அரச அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மொட்டுக் கட்சியினால் முடிந்திருப்பதும் உங்களது செயற்பாடுகளினாலாகும். இன்னமும் பெரும்பாலான கட்சி ஆதரவாளர்கள் மொட்டு கட்சியுடன் உள்ளார்களா? மொட்டு கட்சியுடன் தொடர்புடைய பல்வேறு கட்சிகளும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவிப்பது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

எமது பொதுஜன பெரமுன மொட்டு கட்சியின் அதிகாரம் அப்படியேதான் இருக்கின்றது. பெரும்பான்மையான மக்கள் இன்னமும் எம்முடனேயே இருக்கின்றார்கள். எம்மோடு தொடர்புடைய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். நாம் எதிர்க்கட்சியில் இருக்கும் போதும் அப்படித்தான். அந்த கருத்துக்களுக்கு அமைய நாம் பலமடைந்து முன்னேறிப் பயணிப்போம். நாம் முன்னோக்கிப் பயணிப்பதற்கு அவற்றை பக்க பலமாக எடுத்துக் கொள்வோம். எமது கட்சிகளுக்கிடையில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை.

வானவில்லாக இருந்தாலும் அது அழகாக இருப்பது அதில் பலவர்ணங்கள் உள்ளதனாலாகும். அதுபோலத்தான் கட்சியினுள் இருப்பவர்களும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவிப்பதனால் மொட்டு கட்சியும் நன்றாக அழகாகி, செழிப்பாகி, பலமாகி முன்னேறிப் பயணிக்கின்றது.

'கம சமக பிலிசந்தர' அபிவிருத்தி வேலைத்திட்டத்தினைப் போன்று கிராமிய அபிவிருத்திக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டாலும், அவ்வாறு அதிகளவு நிதி ஒதுக்கிடப்பட்டிருப்பது கிராமிய மொட்டுக் கட்சியினருக்கு ஒப்பந்தங்களை வழங்குவதற்கேயாகும் என எதிர்க்கட்சி கூறுகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

அவ்வாறு எதுவுமில்லை. இந்த அனைத்து வேலைகளும் வெளிப்படைத் தன்மையுடனேயே இடம்பெறும். கிராமங்களில் தேரர்கள், தொண்டர் அமைப்புக்களின் தலைவர்கள், கிராமங்களின் அரச அதிகாரிகள் ஆகியோருடன் அங்குள்ள அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்த குழுவின் மூலமே கிராமங்களில் அனைத்து வேலைகளும் செய்யப்படுகின்றன. இதன் கீழ் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 40இலட்சம் ரூபாய் நிதி நாட்டின் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் கிடைக்கும். இதன் கீழ் தமக்கு விருப்பமானவர்களுக்கு வேலைத்திட்டங்களைச் செய்ய முடியும். எம்மவர்களுக்கும் கிராமங்களில் வேலைகளைச் செய்வதில் பிரச்சினைகள் இல்லை.

டொலர் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கான தீர்வு உள்நாட்டுக் கைத்தொழிலை முன்னேற்றுவதே என அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளார். இதற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளனவா?

நாம் இது தொடர்பில் அமைச்சர் விமல் வீரவங்சவுடன் மிகவும் ஒத்துழைப்புடன் கலந்துரையாடினோம். நிதி அமைச்சு, கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழிலாளர்கள் இதில் கலந்து கொண்டார்கள். தொழில் முயற்சியாளர்கள் விசேடமாகக் கூறியது தமக்கு தொழிற்சாலைகளை அமைப்பதற்கு காணி இல்லை என்றேயாகும். காணி இருந்தால் அதற்கு வீதி, மின்சாரம், நீர் வசதிகள் இல்லை என்றும், பொதுவாக அனுமதி பெறுவதில் காணப்படும் சிரமங்களையும் அவர்கள் எடுத்துக் கூறினார்கள். இதற்கான தீர்வாக பிரதேச ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் நாடு முழுவதிலும் 200தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சர் விமல் யோசனை ஒன்றை முன்வைத்தார். இதற்கு நாம் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். இதற்காக அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த அனைத்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர்களது ஒத்துழைப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்த நிதி அமைச்சர் என்ற வகையிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆரம்பகர்த்தா என்ற வகையிலும் நீங்கள் மக்களுக்கு விசேடமாக ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?

எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மீது வைத்த நம்பிக்கையினைத் தொடர்ந்தும் அவ்வாறே வைத்திருங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பிரச்சினையினைத் தீர்ப்போம். இவ்வருட இறுதிக்கு முன்னர் மற்றும் அடுத்த வருடம் ஆரம்பமாகும் போது இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தல் ஆரம்பமாகும். அப்போது இப்போதுள்ள பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீர்ந்து விடும். ஆனால் இதனை என்னால் மாத்தரம் தனியாகச் செய்து விட முடியாது. எம்மவர்களும், நாட்டின் மீது பற்றுள்ளவர்களும் ஒன்றிணைய வேண்டும். அப்போது நாம் அனைவரும் இணைந்து இந்நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.

நிஹால் பீ. அபேசிங்க
தமிழில் - எம். எஸ். முஸப்பிர்
(புத்தளம் விசேட நிருபர்)

Comments