ஒன்லைன் வகுப்பு | தினகரன் வாரமஞ்சரி

ஒன்லைன் வகுப்பு

நேரம் காலை 6.00மணியை தாண்டிக் கொண்டிருந்தது. வசந்தி சமையலறையில் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள். அப்போது தான் நித்திரையிலிருந்து எழும்பி வந்த கணவனின் கையில்  தேனீர் கோப்பையை கொடுத்து விட்டு'இஞ்ச அப்பா..

புட்டு அவிச்சு வச்சிருக்கிறன்.. அடுப்பில கறி கிடக்கு கொஞ்சம் வத்தினதும் இறக்கி வையுங்க..

எனக்கு நேரம் போகுது..' என்று சொல்லிக் கொண்டு கழுவி வைத்த பாத்திரங்களை எடுத்து அடுக்கினாள்.'சரி நீ வெளிக்கிடு.. நான் பாக்கிறன்..' என்று சொல்லி கொண்டு தேங்காய் திருவலையை இழுத்து அடுப்பின் பக்கத்தில் போட்டுக் கொண்டு அமர்ந்தான் கலையரசன். 'குழம்ப நல்லா வத்த விட்டுடாதீங்க..

பிறகு கறி காணாது எல்லாருக்கும்..' என்று சொல்லிவிட்டு சமையலறையில் இருந்து வெளியேறவும் 'வசந்தி ஒருக்கா கேட்டு பாரன் இண்டைக்கு.. பிள்ளய பாக்க பாவமா இருக்கு..

எங்கட கஸ்டத்துக்கு அதுகள் என்ன செய்யுங்கள்..'உனக்கு கேக்க ஒரு மாதிரி இருக்கெண்டா நான் வேணுமெண்டா..'

என்று வாக்கியத்தை அவன் இழுக்கவும் 'கேக்கிறது சரியப்பா.. ஆனா சம்பளக்காசு வெறும் பத்தாயிரம் தான்.. இந்த நாசமா போன கொரோனாவால உங்களுக்கும் வேல இல்ல..

தந்த நிவாரணமும் இண்டையோட முடிஞ்சிது.. கடசியா கிடந்த சோயாமீற் பக்கற்றில தான் இப்ப குழம்பு வச்சிருக்கிறன்..

நாளைக்கு கறிக்கு என்ன செய்யிறது.. பிறகு சாப்பாட்டுக்கு என்ன செய்யிறது..?' என்றாள் கவலை தோய்ந்த குரலில் வசந்தி.

அவள் சொல்வதும் சரி தான். பிள்ளைகளை எப்படி பட்டினி போட முடியும்? ஒன்றும் பேசாமல் கலையரசன் ஒரு பெருமூச்சோடு எரிந்து கொண்டிருக்கும் அடுப்பை விரக்தியோடு பார்த்தான்.கலையரசன் வசந்தி தம்பதியினருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை என மூன்று பிள்ளைகள். அதில் மூத்தவள் இந்த முறை சாதாரணதர பரீட்சை எழுதவிருக்கிறாள்.

அவன் மேசன் தொழில் செய்பவன். தனது வருமானத்திற்கேற்ப குடும்பத்தை பொறுப்பாக நடாத்திச் செல்வதில் அவனுக்கு திருப்தி தான் அதனால் தான் மேலதிக வருமானம் தேவை என்று யோசித்ததும் இல்லை மனைவியை வேலைக்கு அனுப்ப வேண்டும் என்றும் நினைத்ததுமில்லை அவன்.

என்னதான் வருவதை வைத்து வாழ்க்கையை ஓட்டினாலும் சில நேரங்களில் சேமிப்பின் அவசியத்தை வாழ்க்கை உணர்த்தி விடுகிறது.

நாட்டில் ஏற்பட்ட தொற்றுநோய் காரணமாக போக்குவரத்து தடை லொக்டவுன் என்று வறுமைக்கோட்டின் கீழ்  வாழும் மக்களை பசியும் பட்டினியும் விரட்டி அடித்தது.

கலையரசனுக்கு அநேகமாக வெளி மாவட்டங்களில் தான் மேசன் வேலைகள் கிடைக்கும். போய் தங்கியிருந்து வேலை செய்துவிட்டு வருவது தான் வழக்கம்.

ஆனால் நாட்டில் பயணத்தடை போடப்பட்ட பின் அவனுக்கும் வேலை இல்லை. பிள்ளைகளுக்கு பாடசாலையும் இல்லை. எல்லாம் முடங்கினாலும் மனித வயிறு முடங்கி விடாதே. வருமானம் இல்லை ஆனால் பசி இருந்தது. இப்படியிருக்க வசந்தி கலையரசனிடம் 'இங்க.. பக்கத்து ஒழுங்கையில ஒரு பாங்க் மனேஜர் இருக்கிறாரே அப்பா.. அவங்கட வீட்டுக்கு வேலைக்கு ஆள் வேணுமாம்.. முதல் வேலை செய்தவ லீவு எடுத்து வீட்ட போனவவாம்..

இப்ப இந்த நிலமையில திரும்பி வரேலாம அங்கயே நிக்கிறாவாம்..நான் வேணுமென்டா அவங்கட வீட்ட வேலைக்கு போகவா...' என்று கேட்டாள்.

முதலில் கலையரசன் அதற்கு உடன்படவில்லை. ஆனால் மனைவி சொன்ன நியாயமான காரணங்களும் பிள்ளைகளை பட்டினி போட்டுவிடக்கூடாது என்ற எண்ணமும் அவனை சம்மதிக்க வைத்தது. மாதம் பத்தாயிரம் சம்பளம் காலையிலும் மாலையிலும் வந்து வீட்டு வேலைகள் சமையல் வேலைகள் என்று எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என அந்த வீட்டில் சொன்னார்கள். வசந்தி யோசிக்காமல் சரி என்றாள். வேலை அதிகம் என்றாலும் பரவாயில்லை அவளுக்கு மாதம் அந்த பத்தாயிரம் ரூபாய் காசு வேண்டும்.

வேலைக்கு சேர்ந்து இரண்டாவது மாதம். போன மாதம் கிடைத்த பத்தாயிரம் ரூபாவில் வீட்டுசெலவுகளை பாத்தாச்சு. இப்படியே கலையரசன் மீண்டும் வேலைக்கு போக தொடங்கும் வரை சமாளிக்கலாம் என்று கணவனும் மனைவியும் கலந்து பேசியிருந்தார்கள்.

ஆனால் அரிசி விலை கூடினாலும் சரி பெற்றோல் விலை கூடினாலும் சரி இவ்வளவு ஏன் கடலில் கப்பல் தீப்பிடித்தாலும் கூட அதன் பாதிப்பு என்னவோ வறுமைக்குள் வாழும் மக்களுக்கு தான். தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதால் ஒன்லைனில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. கலையரசனின் மூத்தவள் இந்த வருடம் சாதாரணதர பரீட்சை எழுதுகிறாள்.

அதனால் அவள் ஒன்லைன் வகுப்புகளில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

என்ன செய்வது வீட்டில் சாப்பாட்டு பிரச்சினையே பெரும் பிரச்சினையாக இருக்க அன்ரொயிட் கைபேசிக்கு எங்கே போவது. மகளை பார்க்க வசந்திக்கு கவலையாக இருந்தது. நல்லா படிக்கிற பிள்ளை போன் இல்லாத காரணத்தால் பரீட்சையில் சித்தியடையாமல் போய் விடுவாளோ என்று மனம் பதைபதைத்தது. வசந்தி வேலை செய்யும் வீட்டில் அவள் எஜமானருடைய பிள்ளை ஒன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதை அவள் கண்டிருக்கிறாள்.

அந்த பிள்ளை தான் பாவிக்கும் கைபேசியை அதிக நேரம் பாவிக்க வசதிப்படவில்லை அதனால் வேறு நல்ல கைபேசி வாங்கித்தரும்படி தாயிடம் கேட்டுக் கொண்டிருந்தது.

அந்த கதை வசந்தியின் காதில் தற்செயலாக விழ அப்படியானால் அந்த பிள்ளைக்கு புதிதாக கைபேசி வாங்கினால் இந்த பழைய கைபேசியை தனது ஒரு மாத சம்பளத்தை கழித்துக் கொண்டு தனக்கு தரும்படி கேட்டால் என்ன என்று தோன்றியது அவளுக்கு. அதைப்பற்றி வீட்டில் போய் கலையரசனிடம் சொன்னாள்.

அவனும் அதை ஆமோதித்தான். ஆனால் அதை எப்படி கேட்பது அவர்களிடம்? எப்படியும் அந்த கைபேசி ஒரு முப்பத்தைந்து நாற்பதாயிரம் வரும். என்ன தான் பாவித்த பொருளாக இருந்தாலும் பத்தாயிரம் ரூபாய்க்கு அதை எப்படி கேட்பது.

ஒரு வேளை கேட்டபின் தன் மீது நம்பிக்கையிழந்து வேலையும் இல்லை உனக்கு நீ வீட்ட போ என்று சொல்லிவிடுவார்களோ என்றும் பயமாக இருந்தது வசந்திக்கு.

எப்படியும் கேட்டுதான் ஆக வேண்டும். பிள்ளை படிக்க வேண்டும். வேறு வழியில்லை. அதைத் தான் இன்று அவள் வேலைக்கு வெளிக்கிடும் போது கலையரசன் ஞாபகப்படுத்தினான். சரி இன்று கேட்டுதான் பார்த்துவிடுவோமே என்று வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வீட்டு எஜமானியிடம் போய் கேட்டாள். 'அம்மா.. பழைய போன் ஏதும் இருந்தா தாறீங்களா? மகளுக்கு ஒன்லைன்ல வகுப்பு நடக்குது.. ஆனா போன் இல்லாம பிள்ளைக்கு படிப்பு இல்லாம போகுது.. 'சும்மா தர வேண்டாம்..

இந்த மாச சம்பளத்த கழிச்சிட்டு தாங்க..' என்றாள் வசந்தி தயங்கி தயங்கி. 'அய்யாட்ட கேக்கனும் வசந்தி.. பொறு பாத்து சொல்லுறன்..' என்றாள் வசந்தியின் எஜமானி.'சரிங்க அம்மா.. ஒருக்கா கேட்டு சொல்லுங்க.. வேல எல்லாம் முடிஞ்சிது.. நான் வெளிக்கிடுறன்..'

என்று அனுமதி வாங்கிக் கொண்டு தன்னோடு அழைத்து வந்திருந்த தன் மகனையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள் வசந்தி. அன்றிரவு சாப்பிட்டுவிட்டு பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள் வசந்தி. அவளது கடைசி மகன் தயங்கி தயங்கி தாயிடம் வந்து 'அம்மா இதில அக்கா படிக்கலாம் தானே..'

 என்று சொல்லி கைபேசி ஒன்றை நீட்டினான் தாயிடம். அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. 'தம்பி யார்ட போனடா இது?.. யார் தந்தது..? என்றாள். 'அம்மா..

நீங்க வேல செய்யிற வீட்ட ஒரு அக்கா இருக்கிறாவே.. அவ இந்த போன வெளியில  வச்சிட்டு போனவ.. நான் எடுத்திட்டு போய் கேட்டன் அக்கா இது உங்களுக்கு வேணாமா என்டு..

அதுக்கு அவ.. அந்த போன் சரியில்ல.. அங்கால வை.. என்டவ.. அதான் எங்கட அக்கா படிக்கலாம் தானே என்டு எடுத்திட்டு வந்திட்டன்..' என்று சுவாரஸ்யமாக ஒரு கதையை சொன்னான் வசந்தியின் இளையவன். வசந்திக்கு கால்கள் நிலத்தில் நிற்கவில்லை. தலை சுற்றியது.

'ஐயோ என்ர பிள்ளை களவெடுக்கிற அளவுக்கா நான் அவன வளத்திருக்கிறன்.. என்று புலம்பினாள். சின்ன பிள்ளை என்றும் பாராமல் மகனை போட்டு அடித்தாள் வசந்தி.

தன் வளர்ப்பு பிழைத்து விட்டதே இனி அந்த வீட்டு மனிதர்களின் முகத்தில் எப்படி முழிப்பது? இனி எனக்கு வேலை தருவார்களா? வருமானத்துக்கு எங்கு போவது? என்றெல்லாம் தன் இயலாமையை நினைத்து அவள் மனம் படபடத்தது. வசந்தி மகனை அடிப்பதை கண்டு கலையரசன் ஓடி வந்து தடுத்தான்.

கலையரசன் தடுத்தும் கேளாமல் மகனின் கையை பிடிந்து இழுத்துக் கொண்டு  அந்த இரவு நேரத்தில்  தான் வேலை பார்க்கும் வீட்டுக்கு போனாள்.கதவைத் தட்டினாள். வீட்டு எஜமான் கதவை திறந்தார். அந்த இரவு நேரத்தில் வசந்தி மகனுடன் அங்கு வந்து நிற்பதைக் கண்ட அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

'என்ன வசந்தி இந்த நேரத்தில.. ஏதும் பிரச்சினையா..? மாஸ்க் கூட போடாமலுக்கு சின்ன பொடியன கூட்டிட்டு வந்திருக்கிற..? என்று விசாரித்தார். 'அய்யா.. மன்னிச்சிடுங்க.. என்று கண்கள் கலங்கியபடி தன் மகன் செய்ததை அவரிடம் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்ட அவர். 'மகன கூட்டிட்டு உள்ள வா..' என்றார். அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்து 'என்ன வசந்தி இது.. அவன் சின்ன பொடியன்..

விளக்கமில்லாம இந்த போன எடுத்திட்டு வந்திருக்கிறான்..அதுக்காக அவன் களவெடுத்த என்டு போட்டு அடிச்சு..

இந்த நேரத்தில கூட்டிட்டு வாற..

என்ன இது..? ' என்று வசந்தியை சமாதானப்படுத்தி பேசினார். 'அந்த அக்கா அவக்கு வேண்டாமெண்டு சொன்னதால தான் எங்கட அக்காவுக்கு படிக்கலாம் தானே என்டு எடுத்தன்.. நான் களவெடுக்கேல அம்மா..' என்று விம்மியபடி தாயிடம் கெஞ்சினான் இளையவன்.'பிள்ளைக்கு படிக்க போன் வேணும் என்டு கேட்டிருக்கலாம் தானே வசந்தி..

நான் ஏதும் ஏற்பாடு பண்ணி தந்திருப்பன் தானே..

இந்தா இந்த போன எடுத்திட்டு போய் மகளிட்ட குடு..' என்று அவர் கைபேசியை கொடுக்கவும். தயங்கி தயங்கி அதை வாங்கியபடி 'அய்யா இந்த மாச சம்பளத்த போனுக்கு வச்சுக்கொள்ளுங்க..'

என்றாள். 'நீயும் உன்ர கதையும்..' என்று புன்னகைத்து விட்டு'மாசம் மாசம் ரெண்டாயிரம் போனுக்கு கழிச்சிட்டு எட்டாயிரத்த வாங்கிக்க..' என்றார் வசந்தியின் எஜமான். அவளுக்கு ஏதோ தான் பெரிதாக சாதித்தது போல் இருந்தது. கைபேசியை வாங்கி கையில் இறுகப்பற்றி பொத்திக் கொண்டாள்.

'நன்றி ஜயா.. நான் வெளிக்கிடுறன்..' என்று சொல்லிவிட்டுமகனைத் தூக்கி கொஞ்சிக்கொண்டு நடந்தாள் வீட்டை நோக்கி.

சபீனா சோமசுந்தரம்

Comments