கந்தப்பளை தேயிலைமலை அமிர்தவள்ளி லயக் குடியிருப்பு; குறைபாடுகள் களையப்பட்டு சீர் செய்யப்படுமா? | தினகரன் வாரமஞ்சரி

கந்தப்பளை தேயிலைமலை அமிர்தவள்ளி லயக் குடியிருப்பு; குறைபாடுகள் களையப்பட்டு சீர் செய்யப்படுமா?

தோட்டங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பெயர்கள் சூட்டப்படுவதும் அப்படியே அழைக்கப்படுவதும் வழக்கம்.   அதற்கும் அப்பால் ஒவ்வொரு லயன் குடியிருப்புகளிலும் வாழ்வோர் தமது லயத்துக்கு பிரசித்தி பெற்ற ஒருவரின் பெயரை சூட்டுவதும் தோட்டப்பகுதிகளில் வழமை!

மேட்டு லயம், பணிய லயம், கங்காணி லயம், பொட்டல் லயம், கோயில் லயம் என பலப் பெயர்கள் சூட்டி அழைப்பார்கள்.   நுவரெலியா கந்தப்பளை தேயிலைமலை தோட்டத்தில் காணப்படும் லயத்தின் பெயர் அமிர்தவள்ளி.  

இராமாயணத்தின் முக்கிய பாத்திரமான சீதைக்கும் கந்தப்பளை பார்க் தோட்டப் பிரிவான தேயிலைமலை தோட்டத்திற்கும் தொடர்புள்ளதாக ஒரு கதை உண்டு.     இத்தோட்டத்தின் இயற்கை வனப்பகுதியில் யானை விழுந்த பள்ளம் என்றொரு இடமும் இங்கிருந்து ஊற்றெடுத்து பாம்பன் ஆறு என அழைக்கப்படும் காட்டாறும் உள்ளது. சீதை, சீத்தா எலியவரை உள்ள வரலாறுமிக்க  சீதையம்மன் ஆலயத்திற்கு சென்றதாகவும் பாம்பு ஒன்று அவருக்கு வழிக்காட்டி சென்ற பாதையே இன்று 'பாம்பன் ஆறு' என அழைக்கப்படுவதாகவும் மக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது.  

இந்த பாம்பன் காட்டாறுக்கு அண்மித்த இடத்தில் அமிர்தவள்ளி லயம் காணப்படுகிறது. மொத்தம் 80பேர்ச் நிலத்தில் அமைந்திருக்கும் இந்த லயத்தின் ஒரு பகுதியில் 16வீடுகள் என இரண்டு பகுதிகளில் 32வீடுகள் 10க்கு 10என்ற அளவில் ஒரு வீட்டுக்கு இரண்டு அறைகள் கொண்ட குடியிருப்பாக அமைந்துள்ளது. இலக்கம் 16லயம் என பார்க் தோட்ட நிர்வாகம் இதை அடையாளப்படுத்துகிறது. இந்த குடியிருப்புக்கு  'அமிர்தவள்ளி' லயம் என பெயர் சூட்டப்பட்டு 175வருடங்களாகிறது. இந்த லயத்திற்கு  'அமிர்த வள்ளி' எனப்பெயர் வந்தது எப்படி? பிரிட்டிஷ் ஆட்சியில் நுவரெலியாவில் தேயிலை பயிரிடப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் நுவரெலியா கந்தப்பளை பகுதியில் கோட்லோஜ், தேயிலைமலை மற்றும் எஸ்கடேல் ஆகிய தோட்டங்கள் வரை ஒரு எல்லைப்பகுதி இருந்தது. அந்த எல்லைப் பகுதிக்கு உட்பட்ட 50ஏக்கர் காணியில் 'மன்சூட்' என்ற வெள்ளைக்கார பெண் தேயிலை பயிரிட்டிருந்தார். இதன்போது இந்த எல்லைப் பகுதியில் ஒரு சிறிய அம்மன் ஆலயம் ஒன்றும் 32வீடுகளுடன் ஒரு தொடர்வீடு பகுதியும் அமைக்கப்பட்டது. இந்தத் தொடர் குடியிருப்பில் எட்டு வீடுகளில் மாட்டு தொழுவமும், ஏனைய வீடுகளில் மக்கள் குடியிருப்பும் காணப்பட்டது. தனி 'மன்சூட்' என்ற வெள்ளைக்கார பெண் தனது பராமரிப்பில் தொழிலாளர்களுக்கு பல நன்மைகளை செய்து வந்துள்ளார். 

இதன் காரணமாக தோட்டத் தலைவிக்கு செல்லமாக 'அமிர்தவள்ளி' என்று பெயர் சூட்டியுள்ளனர். இது காலப்போக்கில் இந்த மக்கள் குடியிருப்புக்கும் பெயராக மாறி 'அமிர்தவள்ளி லயம்' எனப் பெயர் பெற்றதாக சொல்கிறார் தேயிலைமலை தோட்டத் தலைவராக இருந்த மாரிமுத்து விஜயகுமார் (வயது 65). 

மேலும், 1970களில் மலையக பெருந்தோட்டங்களை அரசாங்கம் சுவீகரித்த காலம் வரை 'மன்சூட் சீமாட்டி தோட்டத்தின் மன்சூட் விடுதியில் வசித்து வந்தாராம்.  மேலும் இந்த மன்சூட் பங்களாவை தொழிலாளர் குடும்பம் ஒன்றுக்கு தோட்ட நிர்வாகம் வழங்கியிருந்தது. சென்ற வருடம் தீ விபத்து சம்பவத்தில் இந்த பங்களாவும் எரிந்துபோனது.

இந்த லயத்திற்கு அருகில் அமைந்திருந்த சிறிய அம்மன் ஆலயமும் இன்று புதுப்பிக்கப்பட்டு தேயிலைமலை தோட்ட முத்து மாரியம்மன் ஆலயமாக மாற்றம் பெற்றுள்ளது.   அமிர்தவள்ளி லயம் அமைந்துள்ள இந்த 50ஏக்கர் தேயிலைத் தோட்டம் தேயிலைமலை தோட்ட நிர்வாகத்தின் கீழ் தற்போது உள்ளது.

தற்போது அமிர்தவள்ளி லயத்தின் ஒரு பகுதியில் இருந்த மாட்டுத் தொழுவமும் மக்கள் குடியிருப்பாக மாற்றப்பட்டு இன்று 32குடும்பங்கள் இங்கே வாழ்ந்து வருகின்றன. அமிர்தவள்ளி லயத்தின் பழைய கூரைத் தகரங்கள் மாற்றப்பட்டு சில குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.    அத்துடன் தமது வீட்டுக்கு அருகில் தற்காலிக குடியிருப்புகளும், சமையல் அறைகளும் அமைத்துக்கொள்ள தோட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் கமநெகும அபிவிருத்தி திட்டம் மூலம் வடிகாண் மற்றும் சில குடும்பங்களுக்கு மலசல கூடங்களும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.     எனினும் இந்த அமிர்தவள்ளி லயத்து குடியிருப்பாளர்களுக்கு இப்போது குடிநீர் வசதியும் சில குடும்பங்களுக்கு மலசலகூட வசதிகளும் இல்லை.  

அமிர்தவள்ளி லயத்தின் அருகில் உள்ள 30அடி உயரமான மண்மேட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் உயிர் அச்சத்துடன் வாழவேண்டியிருக்கிறது. நீரும் குறித்த மண்மேடு வழியாக வழிந்தோடுவதால் மண்சரிவு அபாயம் உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. லயம் அமைந்துள்ள 80பேர்ச் நிலம் நீர்வளம் காணப்படும் நிலமாக உள்ளது. இதுவும் மண்சரிவுக்கு காரணமாக அமையலாம். ஆனால் இப்பகுதியின் நிலத்தடி நீர் குடிநீருக்கு உகந்த நீர் அல்லவாம்.

மேலும் பாம்பன் ஆற்றில் ஓடும் நீரும் அசுத்த நீராக காணப்படுகிறது.   இந்த குடியிருப்பாளர்களுக்கு லயத்து மக்களுக்கு ஒரேயொரு பொதுவான குழாய் மட்டுமே காணப்படுகிறது.     இங்கே வசிக்கும் 32குடும்பங்களுக்கு எட்டு மலசலகூடங்கள் மாத்திரமே உள்ளன. எனவே புதிய கழிப்பறைகள் அமைத்துத் தரப்பட வேண்டும்.  

அதேநேரத்தில் தோட்ட நிர்வாகத்திடம் பல முறை இந்த லயத்தின் அவல நிலை எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எனினும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

எனவே மன்சூட் என்ற வெள்ளைக்கார பெண் நிர்வாகத்தில் இந்த லயத்தில் வாழ்ந்த மக்கள் அனுபவித்த சலுகைகள், அடிப்படை வசதிகள், நாகரீக காலத்தில் எம்மால் வாழ எவரும் வழிசமைக்காத நிலையில் நவீன அடிமைகளாகவும் அடிப்படை உரிமையற்றவர்களாக வாழ வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆறுமுகம் ரமேஸ்

Comments