தேயிலைத் தோட்டத்தில் அல்லல்படும் பெண்ணுரிமை | தினகரன் வாரமஞ்சரி

தேயிலைத் தோட்டத்தில் அல்லல்படும் பெண்ணுரிமை

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெண்களின் வகிபாகம் முக்கியத்துவம் பெறுகிறது. வீட்டு வேலைகள் தொடக்கம் விளம்பரம் வரை பெண்களே முன்னிலை வகிக்கிறார்கள். இன்று பெண்கள் பல துறைகளில் முன்னேற்றமடைந்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்கள் வேலைசெய்யாத துறைகளே இல்லையென்றே கூறலாம். ஆனால் இந்த வாய்ப்புகளும் வசதிகளும் உலகிலுள்ள எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துள்ளதா? என்பதை நோக்கும்போது பல்வேறு விடயங்களில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பெண்கள் பின் தங்கியிருப்பதை காணலாம்.  

இலங்கையின் பொருளாதாரத்திற்கு அதிகளவு பங்களிப்பை வழங்கிவரும் பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் தற்போது பல்வேறு பிரச்சினைகளையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கியுள்ளனர். தேயிலை உற்பத்தித் துறையில் வேலைசெய்யும் பெண் தொழிலாளர்கள் சுமார் 200வருடங்களுக்கு மேல் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினை செய்து வருகின்றனர்.  

தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளியொருவரை எடுத்துக் கொண்டால் பெரும்பாலானோர் தமது பதினாறு அல்லது பதினெட்டு வயதிலேயே தோட்டத்தில் பெயர் பதிவுசெய்து வேலைசெய்யத் தொடங்குகின்றனர். இவ்வயதில் ஆரம்பிக்கும் கொழுந்து பறிக்கும் தொழிலானது எவ்விதமாற்றமும் முன்னேற்றமும் இன்றி ஓய்வுபெறும்வரை தொடர்கின்றது. (ஆழப்புதைந்த அப்பனின் சிதைமேல், சி.வி. வேலுப்பிள்ளை.)  

பெருந்தோட்டப் பெண்களில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறிப்பதையே பிரதான தொழிலாகச் செய்து வருகின்றனர். திருமணம் முடித்து கணவன், பிள்ளைகளோடு வாழ்கின்ற பெண்னொருவரின் ஒருநாள் வாழ்க்கையை நோக்கினால் உலகில் இவ்வாறும் பெண்கள் சமூகம் கஸ்டப்படுகின்றதா? என்று சிந்திக்கத் தோன்றும்.  

பல அறிஞர்களும், கவிஞர்களும் பல்வேறுவிதமான வெற்று வார்த்தை ஜாலங்களால் பெண் விடுதலை, பெண்களின் உரிமைகள், பெண் அடிமை, பெண்களின் குணங்கள், பெண்களின் அழகு, பெண்கள் கலாசாரம், பெண்களுக்கே உரிய தாய்மை அம்சம், பெண்களின் முக்கியத்துவம், பெண்களின் படைப்பு போன்ற பல்வேறு விடயங்களில் பெண்கள் சார்பான விடயங்கள் முன்வைக்கப்படுவதை காணலாம்.  

தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்யும் பெண் தொழிலாளியொருவர் காலை 5மணிக்கு எழும்பிவிட வேண்டும். கடும் குளிருக்கு மத்தியிலும் காலைக் கடன்கள் (வீட்டு வேலைகள்) அனைத்தையும் பூர்த்திசெய்ய வேண்டும். பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகள் மத்தியிலும் தங்களது வேலைகளை பூர்த்திசெய்துவிட்டு செல்கின்றனர். ஒருசில தோட்டங்களில் எந்நேரமும் குடிநீர் வராது. பொது மலசல கூடங்களே இன்றும் பல தோட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது.  

தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்தில் மாடாக உழைத்தாலும் இவர்களுக்கு தரம் குறைந்த (Labour Dust) எனப்படும் தேயிலைத்தூளே வழங்கப்படுகின்றது. இன்றுவரையும் சிறந்த தேயிலை தூளைக்கூட பெறமுடியாத அப்பாவிகளாக வாழ்ந்து வருகின்றனர். ரொட்டியைத் தயாரித்து பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு காலையில் தேநீர் தயாரிக்கும் போதும், சமைக்கும் போதும் படும் கஷ்டங்களோ சொல்லில் அடங்காதவை. சில வீடுகளில் மழைக்காலங்களில் காயாத பச்சை விறகுகளை வைத்து ஊதி புகை மண்டலத்தில் இருக்கும் இவர்கள் ஆஸ்மா உட்பட பல்வேறு சுவாச நோய்களுக்கு உட்படுகின்றனர். இவர்களின் வீடும் (10 x 10) ஆக அமைந்த லயன் அறைகள். சிலர் இன்றும் தற்காலிக குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். (தீப்பற்றிய, மண் சரிவு நடந்த வீடுகளில் வசித்தவர்கள்) இதனால் இவர்களின் லயன் அறைகளும் ஒரே புகை மண்டலமாகவே காட்சியளிக்கும்.  

ஒருவாறு தேநீரைத் தயாரித்து கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் கொடுத்து பின்னர் அவசரஅவசரமாக கோதுமை மாவைப் பிசைந்து ரொட்டியைத் தயாரித்து பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு பிள்ளைகளை பாடசாலைக்கு ஆயத்தப்படுத்த வேண்டும். இறுதியாக தானும் உண்டுதன் கைக் குழந்தையை தூக்கிக் கொண்டு சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு அப்பிள்ளையை விட்டுவிட்டு ஓட்டமும் நடையுமாக வேலைத் தளத்திற்கு செல்லவேண்டும். நேரம் பிந்திவரும் பெண்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பி விடுகிது நிர்வாகம். இப் பெண்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதும் உண்டு. வேலைத் தளத்திற்குப் பொறுப்பான கங்காணி, கணக்கப்பிள்ளை போன்றோரிடம் கெஞ்சிய பின்னரே வேலைக்கு அனுமதிப்பதும் உண்டு.  

பின்னர் தேயிலை மலைக்குச் சென்று தோட்ட நிர்வாகம் எடுக்கச் சொல்லும் இருபது கிலோகிராம் கொழுந்தைப் பறிக்கவேண்டும். கொழுந்து குறைவாக பறித்தால் அன்றைய தினம் அரைபேருதான். தேநீர் வேளையில் தேயிலைச் செடிகளின் கீழும், மரநிழல்களின் கீழும், கான்கள், வீதியோரங்களில் இருந்தே தேநீரை குடித்து உணவை உட்கொண்டு வருகின்றார்கள். இதுவரையும் இவர்களுக்கு தேநீர் அருந்துவதற்கு ஒரு கூடாரம் கூட இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.  

10மணிக்கு உணவுகொண்டு வராதவர்களின் நிலையோ மிகவும் பரிதாபம். ஒருநாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் கொழுந்து நிறுக்கப்படும். 10மணிக்குத் தேநீர் குடித்துவிட்டு மீண்டும் தேயிலை மலைக்கு (நிறைகளுக்கு) சென்று மீண்டும் கொழுந்து பறிக்க வேண்டும்.

12மணிக்கு சாப்பாட்டுக்கு கொழுந்து கூடை சுமையுடன் இரண்டு கிலோ மீற்றருக்கு மேல் நடந்து கொழுந்து மடுவத்திற்கு வரவேண்டும். அங்கு கொழுந்து நிறுத்து மீண்டும் வீட்டுக்குவர பகல் 12.30மணியாகி விடும்.  

தொடர்ந்து தன் குழந்தையைப் பிள்ளை பராமரிப்பு நிலையத்திலிருந்து தூக்கிக் கொண்டுவந்து பாலூட்டி, பகலுணவை தயாரித்து கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் வைத்துவிட்டு மீண்டும் 1.30மணிக்கு வேலைக்குத் திரும்ப வேண்டும். மழை, வெயில், குளிர், பனி, அட்டைக்கடி, குளவி கொட்டுதல், பாம்பு கடி, சிறுத்தை தொல்லை, உயரமான மலைச் சரிவுகள், கரடுமுரடான பாதை, உயரமான நீண்ட படிக்கட்டுக்கள், பாதுகாப்பான உடைகள் இன்மை என ஏகப்பட்ட சுமைகள்.   இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தவாறே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளையும் காலை 8.00மணிமுதல் மாலை 4.30வரையும் கடந்து சென்றுகொண்டிருக்கின்றார்கள்.   தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தொழிலில் மாற்றம் வேண்டும். உடையில் மாற்றம் வேண்டும். வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டும். தொழில் காப்புறுதி, தொழில் பாதுகாப்பு, தொழில் உரிமை, வேலைநேரம், அரசாங்க சலுகைகள், வீட்டு அமைப்புமுறை, பிள்ளை வளர்ப்புமுறை, பராமரிப்புமுறை, பெண் கல்வி, பெணகளுக்கான சமஉரிமைகள், பெண்களுக்கான கெளரவம், பாதுகாப்பு உத்தரவாதம் போன்றவற்றில் மாற்றம் கொண்டுவர வேண்டும். வீட்டு வன்முறை ஒழிக்கப்பட வேண்டும். இளவயது திருமணம் ஒழிக்கப்பட வேண்டும். பெண்கள் முன்னேற்ற கழகங்கள் உருவாக்கப்பட்டு பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்களை சமூக பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும். பெண்கள் சுதந்திரமாக வாழ்வதென்பது அந்நாட்டில் சகலரும் செளபாக்கியமாக வாழ்கின்றார்கள் என்று அர்த்தம் கொள்ளலாம்.

இரா. சிவலிங்கம்

Comments