புலம்பெயர்ந்த மண்ணில் புகழ்பெற்ற படைப்பாளி முல்லையூரான்..! | தினகரன் வாரமஞ்சரி

புலம்பெயர்ந்த மண்ணில் புகழ்பெற்ற படைப்பாளி முல்லையூரான்..!

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்கள் மத்தியில், இலக்கிய வாஞ்சை மிகக்கொண்டு படைப்புகளை அளித்த சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் முல்லையூரான். சமூக அவலங்களைப் பெரிதும் கவனத்திற்கொண்டு மனிதத்தின் மேம்பாட்டிற்காய்ப் படைப்புகளை அளித்தவர்களில் முல்லையூரான் குறிப்பிடத்தக்கவர்.

முல்லைத்தீவு - வற்றாப்பளையைச் சேர்ந்த முருகேசு - சிவபாக்கியம் தம்பதிகளின் புதல்வரான இவரின் இயற்பெயர் சிவராசா.

இவர் ஆரம்பக் கல்வியை வற்றாப்பளை றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், பின்னர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி, றிபேக் கல்லூரியிலும் கல்வியைத் தொடர்ந்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் கற்று இளமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்திலேயே எழுத்துத்துறையில் தீவிரமாக ஈடுபட்டார்.

இவரது படைப்புகள் பத்திரிகைகளிலும் 'மல்லிகை' மற்றும் சில சஞ்சிகைகளிலும் பிரசுரமாகின. 'மல்லிகை' முல்லைத்தீவுச் சிறப்பிதழ் வெளியிட்டது.  அச்சிறப்பிதழின் வெளியீட்டு விழா முல்லைத்தீவில் சிறப்பாக நடைபெற்றது.

அவ்விழா சிறப்பாக நடைபெற முல்லையூரான் அயராத உழைப்பை நல்கினார் என மல்லிகை ஆசிரியர் பெரிதும் பராட்டியமை குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் முல்லையூரான் 'அக்கினிக் குஞ்சு' என்ற சஞ்சிகையையும் வெளியிட்டு வந்தார். 1981 -- 1982காலப்பகுதியில் இரு கவிதைத் தொகுதிகளையும் இவர்  வெளியிட்டார்.

அந்நாட்களில் பல கவியரங்குகளிலும் கலந்துகொண்டு பாராட்டுப் பெற்றார்.

தாயகத்தில் யான் பங்குபற்றிய கவியரங்குகள் சிலவற்றில் இவரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை ஞாபகத்திலுண்டு.

பண்டாரவளையில் சிறிதுகாலம் ஆசிரியராகக் கடமையாற்றினார். பல்கலைக்கழகத்தில் கற்றவரையே காதலித்து வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டார்.

நாட்டு நிலைமை காரணமாக 1983 -ம் ஆண்டு புலம்பெயர்ந்து தமிழ்நாடு சென்றார்.

அங்கு சிறிது காலம் பத்திரிகை ஒன்றில் பணிபுரிந்தார். தமிழகத்தில் வாழ்ந்த காலத்திலும் ஒரு சில நூல்களை வெளியிட்டார்.

1986 -ம் ஆண்டு  டென்மார்க் நாட்டிற்கு வந்து சேர்ந்தார். 1993 -ல் 'நிர்வாண விழிகள்' என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டார். ஐரோப்பாவிலிருந்து ஒலிபரப்பாகிய தமிழ் வானொலிகளில் இவரது படைப்புகள் பல ஒலிபரப்பாகி மக்கள் மனங்களைக் கவர்ந்தன.

இலக்கியத் தாகத்திற்கு ஆட்பட்டு 'காகம்' என்ற பெயரில் ஒரு மாத இதழையும் 1996வரை வெளியிட்டு வந்தார்.

இந்த இதழில் கதைகள் - கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வந்தார்.

2002 -ம்  ஆண்டு கொழும்பில் 'மல்லிகைப் பந்தல்' வெளியீடாக இவரது சிறுகதைத் தொகுதியான 'சேலை' வெளியாகியது.

''முல்லையூரான் கதை சொல்வதில் ஒரு புதுமையிருக்கிறது. புதுப்புனல் ஊற்றின் குளிர்மை பிரவகிக்கின்றது. பலவித 'இசங்'களால் மூளை குழம்பிப் போயிருக்கும் இளைய இலக்கியச் சந்ததிக்கு இது ஒரு மாற்றீடு எனலாம். பல கதைகளில் உருவம் சார்ந்த சில உத்திகளைக் கையாண்டிருக்கிறார். சிலவற்றில் குறிப்பிடக்கூடிய வெற்றியும் அடைந்துள்ளார்.

ஒரு சிறுகதை எப்படி அமைய வேண்டும் என்று சில வார்த்தைகளில் கூறிவிட முடியாது. ஆனால் ஒரு சிறுகதையைப் படித்து முடித்ததும் அது தரும் உணர்வுகள் நல்ல விகிதாசாரத்தில் படிப்பவர்கள் சிந்தனையில் தொற்றி, மனத்தில் தொங்கி நிற்குமாயின் அதுவே சிறந்த சிறுகதை என மதிப்பிட வைக்கிறது. முல்லையூரானின் கதைகளைப் படித்து முடித்ததும் எமது சிந்தனை விரிகின்றது. பல விடயங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் தூண்டப்படுகின்றது. வாதப் பிரதி வாதங்கள் எழுகின்றன."

- என்றவாறு முல்லையூரானின் 'சேலை' சிறுகதைத் தொகுதிக்கு அணிந்துரை வழங்கிய எழுத்தாளர் - டாக்டர்  புலோலியூர் க. சதாசிவம் குறிப்பிட்டுள்ளமை மனங்கொள்ளத் தக்கது.

முல்லையூரானின் பார்வையில் சிந்தனைத் தெளிவு இருக்கிறது.

புலம்பெயர் மக்களின் எரியும் பிரச்சினைகள், எதிர்காலம் பற்றிய ஏக்கங்கள், இளைய சந்ததியின் போக்குகள்  எனப் புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தின் வாழ்வியலைப் பல கோணங்களிலும் இவரது படைப்புகள் சுட்டி நிற்கின்றன எனலாம்.

முல்லையூரான் பல்துறை ஆற்றலாளர். சிறந்த ஓவியர். ஓவியக் கண்காட்சியை நடாத்திப் பாராட்டுப் பெற்றவர்.

1990 -ம் ஆண்டு ஓவியக் கண்காட்சியில் இவரது ஓவியம் ஒன்று பத்தாயிரம் குரோண் கொடுத்து வாங்கப்பட்டது எனத் தெரிகிறது.டென்மார்க்கிலுள்ள நகரசபை ஒன்று இவரது ஓவியத்தை வாங்கிக் கௌரவித்ததாகத் தெரிகிறது. சிறந்த படைப்பாளியாக வளர்ந்த நண்பர் முல்லையூரான்,  2006 -ம் ஆண்டு 51வயதில் காலமாகியமை அவரை அறிந்த படைப்பாளிகள், மக்களுக்கு மிகுந்த கவலையளித்தது. 2000ஆண்டளவில் ஒரு சில தடவை  தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாயகத்து ஞாபகங்களை நீண்ட நேரம் அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டமை ஞாபகத்திலுண்டு.

10 - 10 - 2010 -ல் டென்மார்க் நாட்டில் ''இனி" வாசகர் வட்ட ஏற்பாட்டில் இலக்கிய விழா  சிறப்பாக நடைபெற்றது.

''முல்லையூரான்" அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில்  நூல் வெளியீடு - கருத்தரங்கு - கவியரங்கு -  புத்தகக் கண்காட்சி  என்பன இடம்பெற்றன. இவ்விழாவில் யான் கலந்துகொண்டு நண்பர் முல்லையூரானை நினைவுகூர்ந்து உரையாற்றியமை நினைவில் நிற்கிறது. முல்லையூரான் படைப்புகள் மூலம், அவரது நாமம் நிலைத்து நிற்கும்..!

வி. ரி. இளங்கோவன்

Comments