பட்டணம் பி.ஆர். பெரியசாமியின் தோட்டத் தொழிலாளரின் வீரப் போராட்டம் | தினகரன் வாரமஞ்சரி

பட்டணம் பி.ஆர். பெரியசாமியின் தோட்டத் தொழிலாளரின் வீரப் போராட்டம்

அமரர்  பீ.ஆர். பெரியசாமியின்  'தோட்டத்தொழிலாளரின் வீரப்போராட்டம்' எனும் நூலின் மீள் பிரசுரம் பிரசவமாகியிருக்கிறது. இதற்கு மருத்துவச்சியாக வினையாற்றிய கலை, இலக்கிய மலையக ஆய்வாளர் எச். விக்கிரமசிங்கவின் பணி பாராட்டத்தக்கது. 

நூலின் தலைப்பே உற்சாக வீச்சாக மிளிர்கின்றது. துன்பக் கேணியில் துவண்டு நடுங்கும் தொழிலாளர் படை துடித்தெழுந்து போராடிய வரலாற்று தொகுப்பாகவுள்ளது இந்நூல். நூலொன்று எதனைக் கூறுகின்றது. எவ்வாறு கூறுகின்றது என்ற இரு விமர்சன அளவீட்டில் இந்நூலில் கூடிய மதிப்பெண்ணைப் பெறுகின்றது. இதற்கு வலுசேர்க்கும் காரணிகள் சுட்டிக்காட்டத்தக்கவை. 

1914ல் தமிழ் நாட்டில் பிறந்த பெரியசாமி தனது 14வயதில் 1928ல் இலங்கைக்கு வந்தார். முதலாம் போர்க்களத்தில் உதித்து உலகப் பொருளாதார பின்னடைவுக் கட்டத்தில் புலம்பெயர்ந்து, தனது பதின்மபராயத்து கள நிலைமைகளை அனுபவித்தவர். இந்த அனுபவம் - அவரது வாழ்நிலை - அவரது சிந்தனைத் தூண்டலாக செயற்பட்டுள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைப் போராட்டத்திலே கடந்தகால நிகழ்ச்சிகளைக் கவனத்திற் கொண்டுவந்து, நிகழ்கால சம்பவங்களை மனதில் எடுத்துக்காட்டி, வருங்காலத்தின் இலட்சியப் போராட்டத்திற்கு வழிகாட்டிச் செல்வதே எழுத்தாளனின் கடமைஎன்ற ஆசிரியரின் பிரகடனம் இந்நூல் எழுதப்பட்டதற்கான தூண்டலை வெளிப்படுத்துகின்றது.

துரைமாரின் கெடுபிடிகளுக்கெதிராக செயற்பட்டு தூக்குமேடை ஏறிய வேலாயுதம், வீராசாமி ஆகியோரை உச்சியில் வைத்துப் பேசும் ஆசிரியர், இந்நூலின் மூலம் தொழிலாளர்களுக்கு சிறிதளவு பயன் கிட்டுமாயின் அதுவே என் பெருமுயற்சிக்கு மகிழ்ச்சியைத் தரும் என கூறுவதனூடாக தனது நோக்கினைத் தெளிவாக்கியுள்ளார். 

சமுதாயத்தினை இயக்குகின்ற, தூக்கிநிறுத்தும் தூண்களான பாட்டாளிகளின் மீட்சிக்கு தனது எழுத்து பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற வேட்கை அவரை ஆட்கொண்டுள்ளது. இதன் வழியாக அவர் ஒரு செயற்பாட்டு வெளிக்குத் தள்ளப்பட்டுள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளரின் மீட்சிக்காக தொழிற்சங்க இயக்கத்திற்கு வித்திட்ட கோ. நடேசஐயரோடு சங்கமிக்கின்றார். 

பெருந்தோட்டத் தொழிலாளரின் உரிமைக் குரலுக்கும், போராட்ட உணர்விற்கும் நெம்புகோலாக செயலாற்றிய கோ. நடேசஐயர் இன்று கூட பீறிட்டெலாத பிரகடனத்தினை 1930களில் எழுப்பியுள்ளார். கண்டியைக் கைப்பற்றியதனூடாக முழு இலங்கைக்கும் சொத்தக்காரர்களான ஆங்கிலேயர், மனித சஞ்சாரமற்ற மத்திய மலைநாட்டில் பாதைகளை அமைத்தவேளையில் ஆள் அரவமற்ற சூழ்நிலை நிலவியதாக குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக, மேஜர் ஸ்கின்னர் இலங்கையில் ஐம்பது ஆண்டுகள் என்ற அவரது நூலில் குறிப்பிடுகின்றார். இத்தகைய ஈரவலய அடர்காட்டினை வர்த்தகப் பயிர்களின் பசுமை மேடாக மாற்றியோர் பெருந்தோட்டத் தொழிலாளர்கள். இதனை மனதிற் கொண்டு நடேச ஐயர் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைப் பிரதேசங்களின் ஒவ்வொரு அங்குல நிலமும் எம் சமூகத்தாருக்கு உரியது எல்லா கட்டடங்களும் அவர்களுக்குரியவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய ஆளுமை ஒன்றின் ஆற்றுப்படுத்தலில் செயலாற்றிய பெரியசாமி,  லங்கா சமஸமாஜக் கட்சியின் தொழிற்சங்க செயற்பாட்டாளராகப் பரிணாமம் பெறுகின்றார்.   இதன் வழியாக வர்க்க அரசியல் போதனை பெற்று புடம்பெறுகின்றார். இதுவே லேபர் கமிஷனரும், பொலிஸாரும், நீதிவானும், சட்டமும், அவைகளைப் புரட்டும் நியாயத் துரத்திரரென செப்பித் திரியும் அட்வகேட்டும், பிற்போக்கு சட்டஞ்செய்து பிரஜைகளின் உரிமையைக் கருவறுக்கும் பார்லிமென்டும் முதலாளி வர்க்கத்தின் சொத்துரிமையை பாதுகாக்கும் சத்தான சாதனங்கள்என்று மிகத் தெளிவாக முதலாளித்துவ அரசின் தன்மையை அவரால் விளக்க முடிந்துள்ளது.

இன, மத, நிற, தேச பேதங்களைக் கடந்து, கிராமிய, நகர, தோட்டத் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த திரட்சியே மீட்சிக்கு வழி என குறிப்பிடும் அவர்,  வர்க்க போதனையின் அணியிலே மக்களுக்கு அறிவூட்டி தயார் செய்யவேண்டும். அதுதான் சமுதாய மாற்றத்தை உண்டாக்கும். சமுதாய மாற்றத்தை உண்டாக்க சமர் புரியாதவரை தொழிலாளர்களின் துயர் போக்க முடியாது என்று கூறுவதன் மூலம் போராட்டமே பாட்டாளி வர்க்கத்தின் திறவுகோள் என்ற உண்மையைத் தெளிவாக்குகின்றார்.

வர்க்க அடிப்படையிலான அரசின் சாராம்சத்தை விளக்கிய அவர், முதலாளித்துவ அரசின் தன்மை, அது இயங்கும் விதிமுறைகளை தெளிவுபடுத்தும்  இன்றைய சமுதாய அமைப்பு முறையானது சொத்துரிமையை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. முதலாளி வர்க்க அரசாங்க அமைப்பென்றால் அது தனித்தனி சொத்துரிமையைப் பாதுகாக்கும் சட்டதிட்டங்களால் ஆளப்படுவது என விளக்குவதோடு, சோஷலிச அரசாங்க அமைப்பைத் தோற்றுவிக்காத வரையில் தொழிலாளர் வர்க்கத்தின் துன்பமும், துயரமும் நீங்கவே நீங்காது என்று முழங்கியுள்ளார். 

நகரப்புறத் தொழிலாளர்களை முதன்முதலாக அணிதிரட்டி ஸ்தாபனப்படுத்திய ஏ.ஈ. குணசிங்க, அடுத்த கட்டத்தில் இந்திய (மலையாள) தொழிலாளருக்கெதிராக கோஷம் எழுப்பியபோது, இலங்கைவாழ் ஒட்டுமொத்த தமிழ்த் தொழிலாளர்களும் இந்தியாவின் ஆதரவினை யாசிக்க, தொழிலாளர்கள் ஓரமைப்பின் கீழ் செயற்படுவது பாதுகாப்பானது என ஜவகர்லால் நேரு ஆலோசனை கூறினார். இதன் அடிப்படையில் பிறந்ததே இலங்கை இந்திய காங்கிரஸ். சமூகப் பிரக்ஞையும், முற்போக்கு நோக்கும் கொண்ட இளைஞர் படை இதில் இணைந்து வீறுநடை போட்ட வரலாற்றினை பெருமிதத்தோடு குறிப்பிடும் பெரியசாமி, காலவோட்டத்தில் குள்ளமதியுடையோரால் முடக்கப்பட்ட விதத்தினை வேதனையோடு குறிப்பிடுகின்றார்.

தொழிலாளரின் விமோசனத்திற்காகப் போராட்டப் பாதையில் பயணித்த ஓர் அமைப்பினை குறுமதியினர் முடமாக்கிய விதத்தினை ஆவேசத்தோடு எடுத்துரைத்த பெரியசாமியின் செயற்பாட்டிலிருந்து நாம் பல போதனைகளைப் பெற்றுக் கொள்கின்றோம்.

பெருந்தோட்டத் துறைதொழிற்சங்க இயக்கத்திற்கும், அரசியலுக்கும் இடதுசாரி கண்ணோட்டத்தினைக் கொடுத்ததாக பேராசிரியர் குமாரிஜெயவர்தன குறிப்பிடும் ஏ.அகிஸ் நேர்மையான தொழிற்சங்கப் பணியினை சிலாகிக்கும் பெரியசாமி சேவையாளர்களையும், போராட்டக்காரர்களையும் சரியாக இனங்காட்டுகின்றார். 

இத்தகைய விழிப்புணர்வு போராட்டங்களைப் பட்டியலிடும் பெரியசாமி, கம்பளையில் முதன்முதல் கூட்டப்பட்ட  மாநாடு பின்னர் கண்டி, பதுளை, ஹட்டன், கொழும்பு, நுவரெலியா, நாவலப்பிட்டி, இரத்தினபுரி, மாத்தளை, வத்துகாமம் ஆகிய இடங்களில் 1955வரை நடத்தப்பட்ட மாநாடுகளைப் பற்றி உற்சாகத்தோடு குறிப்பிடுகின்றார்.

ஒடுக்குமுறையால் துவண்ட தொழிலாளர்கள் போராடத் தொடங்கிய 1940களில் அவர்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்பிய பாவாணர் குழுவொன்று தோற்றம் பெற்றது. பாட்டாளிகளின் போராட்டங்களுக்குப் பரணிபாடிய பாவாணர்களில் பெரியசாமியும் ஒருவர். நவஜீவன், வீரகேசரி, தினகரன், சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் அவரது கவிதைகள் (பாடல்கள்) பிரசுரிக்கப்பட்டுள்ளன. பாரதிதாசனின் கம்பீரக் குரலாக ஒலிக்கும் இக்கவிதைகள் ஆவேசத் தொனி கொண்டவை.

ஐம்பத்திரெண்டுஆண்டுகளே வாழ்ந்துள்ள பெரியசாமி பெருந்தோட்டப் பகுதிகளின் பல பகுதிகளிலும் தொண்டாற்றியுள்ளார். இதன் மூலம் தொழிலாளர்களின் துன்ப துயரங்களையும், தன்னெழுச்சிப் போராட்டங்களையும் களங்களில் நேரடி அனுபவங்களாகப் பெற்றுள்ளார். அவர் யாசித்த, எதிர்பார்த்த சமத்துவ சமுக மலர்ச்சிக்கான குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

பீ. மரியதாஸ்

Comments