பங்காளிகளுக்குள் கருத்து முரண்பாடுகள் நிலவுவது உலக அரசியலில் புதுமையல்ல! | தினகரன் வாரமஞ்சரி

பங்காளிகளுக்குள் கருத்து முரண்பாடுகள் நிலவுவது உலக அரசியலில் புதுமையல்ல!

ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னரான   இலங்கை அரசியல் வரலாற்றில் இரு பிரதான கட்சிகள் மாறி மாறி ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும், அவ்வப்போது பங்காளிக் கட்சிகளை இணைத்து கூட்டணி அரசாங்கங்கள் அமைத்த வரலாறு உண்டு. பல தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் தலைமையில் கூட்டணிக் கட்சிகள் உருவாகி வந்த போதும், கடந்த ஐந்து வருடத்தில் உருவான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது,  தான் போட்டியிட்ட முதலாவது பொதுத் தேர்தலிலேயே மத்தியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

இந்தக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய விடுதலை முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ரீலங்கா கொம்யூனிஸ்ட் கட்சி போன்ற பங்காளிக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு கூட்டணி அரசை உருவாக்கியது. இந்த அரசாங்கத்தில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன.

வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட கட்சிகள் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் போது அனைவரும் ஒரே கருத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றோ, எடுக்கப்படும் முடிவுகள் குறித்து தமது சொந்தக் கருத்துக்களை முன்வைப்பதற்கு இடம் இல்லையொன்றோ அர்த்தம் ஆகாது.

கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவும் போது, அது உரிய முறையில் கலந்துரையாடப்பட்டு தீர்க்கப்படுவதே ஜனநாயக நடைமுறையாகவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும் சரி, அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்திலும் சரி கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த பங்காளிக் கட்சிகள் மாறுபட்ட தமது கருத்துக்களை முன்வைத்திருந்தன.

பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறைமையின் தாயகமாக விளங்கும் பிரித்தானியாவில் கூட பல அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைத்த சந்தர்ப்பங்களிலும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவிலும் பல கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்த சந்தர்ப்பங்களிலும் கூட இவ்வாறான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஏனெனில் ஒவ்வொரு கட்சியும் தம் கொள்கை கோட்பாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியபடி ஆட்சியில் அங்கம் வகிப்பது சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு அதில் அங்கம் வகித்த இரு பிரதான கட்சிகளும் கயிறுழுக்கும் நிலைக்குச் சென்று பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிக்கும் நிலைமை காணப்பட்டது. இது ஒரு துரதிர்ஷ்டமான அரசியல் நிகழ்வாக இருந்தது. நல்லாட்சி எனக் கூறப்படும் அரசு பதவியில் இருந்த காலம் தவிர்ந்த வேறெந்த காலப் பகுதியிலும் கூட்டணி அரசுகள் பிளவுபடும் நிலைக்குச் சென்றதில்லை.

இந்த வரிசையில் தற்பொழுது ஆட்சியில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் குறித்து தமது அதிருப்தியைப் பகிரங்கமாக முன்வைத்துள்ளனர். குறிப்பாக யுகதனவி அனல் மின்நிலைய விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் அவர்கள் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளனர்.

அதேநேரம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்த முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொள்வதில் தமது கட்சியின் கணிசமான பங்கிருப்பதைச் சுட்டிக் காட்டியிருந்தார்.

 விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் ஜனாதிபதியை விமர்சிக்கும் வகையில் கூறிய கருத்துக்களுக்குப் பதில் வழங்கும் வகையிலேயே மைத்திரிபால சிறிசேன இந்தக் கருத்தைக் கூறியிருந்தார். தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் திருப்பித் தாக்குவதற்கு தம்மாலும் முடியும் என்ற அர்த்தத்தில் அவர் கூறியிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.

மறுபக்கத்தில், ‘கூட்டணி அரசாங்கத்தில் இருக்க விருப்பமில்லாதவர்கள் வெளியேறிச் செல்லமுடியும். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குக் குழப்பம் ஏற்படுத்தாது எவரும் வெளியேற முடியும்’ என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் அடிக்கடி கூறி வருகின்றார். இவ்வாறான கருத்துப் பரிமாற்றங்கள் ஒருவகையில் கூட்டணி அரசாங்கத்துக்குள் காணப்படும் ஜனநாயகத் தன்மையை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது.

பொதுஜன பெரமுன கட்சியைப் பொறுத்த வரையில் சுதந்திரக் கட்சி என்பது அவர்களுக்கு ஒரு தாய்வீட்டைப் போன்றதாகவே அமைகிறது.

பொதுஜன  பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அனைவரும் சுதந்திரக் கட்சியிலிருந்தே தமது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தவர்கள். எனவே இந்தக் கட்சியுடனான கருத்து முரண்பாடுகள் நீடித்துச் செல்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

அது மாத்திரமன்றி பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான ஒன்றுமையின் பலமாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ காணப்படுகின்றார். இவர் தலைமையில் பல சந்திப்புக்கள் பங்காளிக் கட்சிகளுடன் நடைபெற்றுள்ளன.

அவருடைய அரசியல் அனுபவம் கூட்டணி அரசாங்கத்தில் எவ்வித பிளவுக்கும் இடமளிக்கப் போவதில்லையென்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றார்கள்.

அதேநேரம், கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கூட்டணி அரசாங்கம் தோல்வியடைவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க  அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.     

கொவிட் பெருந்தொற்று காரணமாக நாடு இன்று எதிர்கொண்டிக்கும் சவால் மிக்க சூழலில் அரசாங்கம் வீழ்ச்சியுறும் வகையில் தமது செயற்பாடுகள் அமையாது. முரண்பாடுகள் குறித்து பேசித் தீர்த்துக் கொள்ளப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து தமது பயணத்தை முன்னெடுத்துச் செலும் விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றார். யுகதனவி அனல் மின்நிலைய விடயம் குறித்த ஒப்பந்தம் இன்னமும் இறுதிப்படுத்தப்படாதிருப்பதால் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டுமாயின் அதனை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனவே கூட்டணி கட்சித் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் நீண்ட தூரம் செல்லப் போவதில்லை என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்ற அபிப்பிராயம் ஆகும். இருந்த போதும் எதிர்க் கட்சியினர் பகல் கனவு கண்டு வருவதைக் காணக் கூடியதாகவுள்ளதாக அரச தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகள் அதிகரித்து, அரசாங்கம் வீழ்ச்சியுறும் என்பது அவர்கள் காணும் கனவாகவே அமைந்துள்ளது.

 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த 22ஆம் திகதி நடைபெற்றது.

இதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளை விட அதிகமான வாக்குகளை அரசாங்கம் பெற்றிருந்தது.

பங்காளிக் கட்சிகள் தமக்கிடையில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்த போதும், அரசாங்கம் என்ற ரீதியில் பங்காளிக் கட்சிகள் கூட்டுப்பொறுப்புடன் செயற்படுகின்றன என்பதையே இந்த வாக்கெடுப்பு முடிவு எடுத்துக் காட்டுகிறது.

எனவே, பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசாங்கம் பிளவுபட்டு விடும் என்பது எதிர்க் கட்சியினரின் கனவு மாத்திரமேயாகும் என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்ற அபிப்பிராயம் ஆகும்.

சம்யுக்தன்

Comments