ஈழத்து இலக்கியத்துக்கு அளப்பரிய சேவையாற்றிய பேராசிரியர் கைலாசபதி | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்து இலக்கியத்துக்கு அளப்பரிய சேவையாற்றிய பேராசிரியர் கைலாசபதி

பேராசிரியர் க. கைலாசபதி மறைந்து (06.12.1982) முப்பத்தொன்பது ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆயினும், அவர் வாழ்ந்த நாற்பத்தொன்பது ஆண்டுகளில் ஆழ்ந்த அகலித்த அறிவுத் தளத்தில் நின்று அவராற்றிய பணிகள் காலத்தால் அழியாதவை. அவற்றுள்ளும் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு, தினகரன் பத்திரிகை வளர்ச்சிக்கும், ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் அவராற்றிய பணிகள் மகத்தானவை. அவை இங்கு சுருக்கமாக நோக்கப்படுகின்றன.

தினகரன் பத்திரிகையில் க. கைலாசபதி உதவியாசிரியராகவும் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றிய காலம் தினகரன் வரலாற்றிலும், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் குறிப்பிடத்தக்கக் காலமாக அமைந்துள்ளது.

1933 – 1982வரை வாழ்ந்த க. கைலாசபதி ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர் குறிப்பாகத் தமிழாராய்ச்சித் துறையிலே அவரது பங்களிப்பும், நல்ல தமிழ் இலக்கிய துறையின் திசையறி கருவியாக அவர் செயற்பட்டமையும் விதந்துரைக்கத்தக்கவை. இவ்விருதுறை இணைப்புக்கும் சில காலம் தினகரன் பத்திரிகை ஆசிரியராக அவர் வகித்த பதவி துணை செய்தது என்பதில் தவறில்லை.

பள்ளிப்பருவம் முதல் க. கைலாசபதி எழுதுவதில் ஈடுபாடு காட்டி வந்தாலும், தினகரன் பத்திரிகைக்குப் பிரதம ஆசிரியரான பின்பு தான் அவர் பெயர் பிரசித்தமாகத் தொடங்கியது என்கிறார் இளங்கீரன் எதிர்காலத்தில் தான் செய்ய வேண்டிய இலக்கியப் பணியைத் தீர்மானித்துக் கொண்ட கைலாசபதி, பல்கலைக்கழகப் படிப்பை முடித்து பட்டதாரியாக வெளியே வந்ததும் லேக்ஹவுஸ் பத்திரிகை காரியாலயத்தில் சேர்ந்து விட்டார்.

அன்றைய காலகட்டம் பத்திரிகையாளர் தொழில் யாழ்ப்பாணத்தார் மத்தியில் வரவேற்கத்தக்க, சமூகத்தின் மேல்மட்டத்தில் மதிக்கத்தக்கத் தொழிலாகக் கருதப்படவில்லை. ஆதலால் கைலாசபதியின் தகப்பனாரும் அதனை விரும்பவில்லை. மகனின் உறுதியான எண்ணத்தை அறிந்திருந்த கைலாசபதியின் தகப்பனார் ஒரு முறை இளங்கீரனிடம், 'உந்தப் பத்திரிகை வேலை வேண்டாம் மெட்ராஸூக்கு போய் எம்.ஏ. படிக்கட்டும் நீ உதை அவனுக்குச் சொல்லும்' என்று கூறியதாக நினைவு கூருகின்றார் இளங்கீரன்.

எண்ணத்தில் உறுதி கொண்ட கைலாசபதி எண்ணியதை முடிப்பதற்காக லேக்ஹவுஸில் சேர்ந்து ஆரம்பத்தில் ஒய்சோவர் பத்திகையின் ஆசிரியர் குழுவில் இருந்தார். டெய்லி நியூஸ் பத்திகையிலும் சிறிது காலம் கடமையாற்றியிருக்கிறார். அப்போது தினகரன் பத்திரகையில் பிரதம ஆசிரியராக வி.கே.பி. நாதன் இருந்தார்.

1957ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் உதவியாசிரியராக இணைந்து கொண்ட கைலாசபதி, பின்னர் குறுகிய காலத்திலேயே 1959இல் அப்பத்திகையின் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

1950களில் ஒரு சில ஈழத்து எழுத்தாளரின் படைப்புகளே தினகரனிலும் வீரகேசரியிலும் வெளிவந்தன. பெரும்பாலான படைப்புகள் இந்திய பண்டிதர்கள், இலக்கியவாதிகளின் சமயக் கட்டுரைகளும் இந்திய எழுத்தாளர்களின் கதைகள், கவிதைகள் மட்டுமே இடம் பெற்று வந்தன. இத்தகைய சூழலில் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகள் ஈழத்துப் பத்திரிகைகளில் இடம்பெற வேண்டுமெனும் கருத்தை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வலியுறுத்தியது. இதன் விளைவாக முன்னைய நிலை சிறிது மாறி ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளும் அவ்வப்போது தினகரனிலும் வீரகேசரியிலும் வெளிவரத் தொடங்கின. இதுவும் யானை பசிக்குச் சோளப் பொரியாகவே அமைந்தது.

இத்தகைய சூழ்நிலையில் தினகரனின் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட கைலாசபதி, தான் பதவி வகித்த குறுகிய காலத்தில் (1961வரை) பத்திரிகையாளராக ஈழத்திலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பாற்றினார். குறிப்பாக, ஈழத்து இலக்கிய முயற்சிகளுக்கு வளமூட்டியமை, பிரதேச இலக்கிய வளர்ச்சிக்கு ஊக்கமளித்தமை, இலங்கை எழுத்தாளர்களுக்கு உற்சாகம் அளித்தமையும் கௌரவத்தைப் பெற்றுக் கொடுத்தமையும், இந்நாட்டுத் தமிழ்ப்பத்திரிகைகளின் தரத்தை உயர்த்தியமை, வாசகர் வட்டத்தைப் பெருக்கியமை, பத்திரிகை சுதந்திரத்தைப் பேணியமை, பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டமை, கலை இலக்கியத்துக்கு வழங்கிய முக்கியத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூகம் முதலான விடயங்களுக்கு வழங்கிய முக்கியத்துவம், முதலியவற்றைக் குறிப்பிட முடியும். இவற்றின் ஊடாக தமது ஆற்றலையும் ஆளுமையையும் சமூக நல நாட்டத்தையும் வெளிகாட்டிய விதமும் விதந்துரைக்கத்தக்கவை.

ஈழத்து எழுத்தாளர்களின் படைப்பாற்றல் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர் கைலாசபதி. ஈழத்து எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் தமது படைப்புத்திறனையும் காத்திரமான பங்களிப்பினையும் தமிழுலகிற்கு எடுத்துக்காட்டுவர் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கைலாசபதிக்கு  இருந்தது. மேலும், இலைமறை காயாக இருந்த எழுத்தாளர்களையும் ஊக்குவித்து அவர்களது படைப்புகளையும் வெளிக்கொணர வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கிருந்தது. அதற்கு செயல் வடிவமும் கொடுத்தார்.

அத்தோடு தாகம் தணியாத கைலாசபதி இலக்கிய ஆராய்ச்சி, விமரிசனம், பரிசோதனை, இந்திய, மேலைநாட்டு எழுத்தாளர்களின் அறிமுகம், அறிவியல் என பல விடயங்களையும் இடம்பெறச் செய்தார்.

இளங்கீரனின், 'நீதியே நீ கேள்' தொடர், ஓவியர் மூர்த்தியின் சித்திரங்கள், சிரித்திரன் சிவஞான சுந்தரத்தின் 'சவாரித்தம்பர்' போன்ற கேலிச்சித்திரங்கள், பேசாத பேச்சு, அரசியல் விமரிசனம் (முன் பக்கத்தில் நாளாந்தம் வெளிவந்தது) ஞாயிறு தோறும் சிறுதொடர் சரித்திர நாடகம், நூலும் மதிப்பும், செல்லும் வழி இருட்டு தொடர்கதை, இது எங்கள் ஊர் (ஊரின் பெயர் வந்த வரலாறு) மலையகச் செய்திகள் என பல்வேறு அமிசங்களும் வெளிவந்தன.

இது தவிர இளைஞர்களையும் மாணவர்களையும் எழுதத் தூண்டும் விதமாக புதன் கிழமை இதழ், 'புதன் மலர்' என்ற பெயரில் வெளிவந்தது. மலர்களில் சிறுகதை போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு படம் பிரசுரிக்கப்படும் அப்படத்தைப் பார்த்து அதன் பின்னணியில் கதை எழுத வேண்டும். முதல் மூன்று இடங்களைப் பெறுபவருக்குப் பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சனி இதழ்களில் 'செல்லும் வழி இருட்டு' எனும் தொடர் கதை இடம் பெற்றது. புதிய நாவல் தொடங்குகிறது என்றால் அதற்கு முந்திய கிழமைகளில் வாசகர்களின் எதிர்ப்பார்ப்பைத் தூண்டும் விதமாக அந்நாவல் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் சிறுகதை பிரசுரிக்கப்பட்டால் அச்சிறுகதையின் முக்கிய அமிசங்கள் ஒரு கட்டத்துக்குள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

சுகாதாரம் தொடர்பான கட்டுரைகளும் பெண்கள் தொடர்பான பகுதிகளும் அவ்வப்போது வெளிவந்திருக்கின்றன. மலை நாட்டைப் பிரதிபலிக்கும் பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு  ஸி.வி. வேலுப்பிள்ளை எழுதிய வேடிக்கை விநோதமும் காட்டுவோர் தொடர் வெளிவந்ததும் இவரது காலத்தில் தான்.

கைலாசபதி பிரதம ஆசிரியராகவிருந்த காலத்தில் தினகரனில் கலை இலக்கியம் பெற்ற செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. அவர் எழுதிய ஆசிரியத் தலையங்கங்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை. அவற்றிலும் கூட கலை இலக்கியங்களின் செல்வாக்கை காண முடியும்.

கடமைக்காக பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்ப வேண்டும் என்று விடயங்களைப் பிரசுரிக்காமல் வையகம் பயனுறும் விடயங்களைப் பிரசுரித்தார். அத்தோடு, எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் வரவேற்றார்ளூ ரசித்தார், பாராட்டினார் இதன் மூலம் எழுத்தாளர் வாசகர் உறவு பெருகியது.    தினகரனில் காத்திரத்தை மேம்படுத்துவதற்காக  எழுத்தாளர் சந்திப்புகளையும் வாரந்தோறும் நடத்தினார். இச்சந்திப்புகள் வெள்ளவத்தையில் இருந்த பேராசிரியர் சிவத்தம்பியின் அறையில் இடம்பெற்று வந்ததாக இளங்கீரன் குறிப்பிடுகின்றார்.

இதன் விளைவாக வெளிவந்ததே தினகரன் வார மஞ்சரியில் இடம் பெற்ற 'நான் விரும்பும் நாவலாசிரியர்' எனும் தலைப்பில் அமைந்த கட்டுரைகளாகும். உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியர் பற்றிய கட்டுரைகளாக இவை அமைந்தன. இச் சந்திப்பின் போது இடம்பெற்ற விமரிசனங்களும் விவாதங்களும் தினகரனின் காத்திரத்தன்மைக்கு வழிசமைத்ததோடு, தரமான படைப்புகளையும் வாசகர்களையும் உருவாக்கியது.

தினகரன் பத்திரிகையில் கைலாசபதி பிரதம ஆசிரியராகப் செயற்பட்ட காலத்தில் அவராற்றிய காத்திரமான பங்களிப்பு காரணமாக வாசகர் வட்டம் பெருகியதுடன் விற்பனையும் அதிகரித்தது. 2000இல் தொடங்கிய அதன் விற்பனை 12000வரை பெருகியது.

க.கைலாசபதி தினகரன் பத்திரிகையில் பிரதம ஆசிரியராகவிருந்த காலத்தில் மானுடம் பயனுறும் வகையில் செயற்பட்ட காரணத்தினால் க.கைலாசபதி பணியாற்றிய காலத்தை 'இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் பொற்காலம்' என்பர். அத்துடன் இலங்கைப் பத்திரிகை முன்னோடிகளில் ஒருவராகவும் அவர் போற்றப்படுகின்றார்.

(லேக்ஹவுஸ் நூலகத்தில் தினகரன் பத்திரிகை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு க. கைலாசபதி பிரதம ஆசிரியராக விருந்த பத்திரிகைகளையும் பார்வையிட முடியும்.)

சர்மிளாதேவி துரைசிங்கம்

Comments