கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

பரந்த பாரத (இந்திய) மக்களும், சின்னஞ்சிறு நம் மரகதத் தீவினரும், போர்த்துக் கேயர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பில் அல்லாடியதும் வீரசுதந்திரம் வேண்டிப் போராட்டங்கள் நடத்தியதும் மிகப் பசுமை. 

ஒரு வழியாக அந்நியர்களை வழிபார்த்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கி முக்கால் நூற்றாண்டு (75ஆண்டுகள்) நெருங்குகிற இந்தச் சமயத்திலும் ‘போராட்டம்’ என்ற ஒரு வார்த்தை சாகாவரம் பெற்றுள்ளது. 

நம் காலத்தில் கடந்தாண்டு நவம்பரில் பாரதத்தின் தலைநகர் டெல்லியில் தொடங்கிய ஒரு போராட்டம், அத்தேசத்தின் வரலாற்றுப்பக்கங்கள் சிலவற்றை காலா காலத்திற்கும் கசப்பாக்கிவிட்டன. முன்னைய சுதந்திரப் போராட்டங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல என்றும் வர்ணிக்க வேண்டியுள்ளது. 

இப்பொழுது ஓராண்டுப்பூர்த்தி இந்த டிசம்பரில் முடிவுக்கு வந்த மாதிரியும் இருக்கிறது வராத மாதிரியும் இருக்கிறது. 

நடந்தது என்ன என்பது நம்ம சின்னஞ் சிறுசுகளுக்கு அதுவும் முகநூல், வாட்ஸ் அப்புகளுக்கு தெரியவே தெரியாது. 

‘இந்தியப் பிரதமர் மோடி வேளாண்மைத் துறையை மேம்படுத்தவும் சீர்த்திருத்தவும் என தன் விவசய அமைச்சரைக் கொண்டு மூன்று சட்டங்களை எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்ற  

சட்டமாவதும் பட்டமாவது என்று பலபகுதிகளிலுமிருந்தும் டெல்லிமா நகருக்கே படையெடுத்து வந்து விட்டனர் விவசாயப் பெருமக்கள்! 

இது வரையில் மொத்தமாக 700பேர்.  பலிகடாக்களாக மாண்டு மண்ணாகினர் என்றும் பேனை வர்ணிக்க விருப்பம். 

ஆளும் பிரதமர் மோடி அரசு நெருக்கடி பொறுக்க முடியாமலோ அல்லது நல்ல தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டோ போடப்பட்ட மூன்று சட்டங்களையும் இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை வாபஸ் வாங்கி (திரும்பப் பெற்று) தலையைத் தொங்கப் போட்டு நிற்கிறது. 

விவசாயிகளிடம் ஆதரவை பெற முடியவில்லை. எங்களால் வேளாண் சட்ட நலனை அவர்களுக்கு புரியவைக்க முடியவில்லை. எங்களால் நலன்களை விளக்க முடியாதது எங்களுடைய தவறு, வேளாண் சட்ட விவகாரத்தில் மக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்.

எனப் பிரதமர் கோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மன்னிப்பும் கேட்கும் அளவுக்கு நிலைமை போயே போய் விட்டது. 

இனி, திரும்பப் பெற்ற சட்டமூலம் இந்தியக் குடியரசுத்தலைவர் (ஜனாதிபதி) ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர் அங்கீகரித்துக் கையொப்பம் இட்டபிறகே அதிகாரபூர்வமாக ரத்தாகும். 

அதுவரை விவசாயப் பெருமக்கள் டெல்லி நகர் எல்லையில் வாட்டும் குளிரில் முகாம் வீடு நோக்கிப் போகாமல்! 

இதேவேளை, சோனியா – ராஜீவ் காந்தி கூட்டில் இயங்கும் அகில இந்திய காங்கிரஸ் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல், தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவர முனைய பச்சைக் கொடி காட்டப்படவில்லை.  

அதுமட்டுமன்று, 31கட்சிகளின் சார்பில் 42பிரதிநிதிகள் பங்குபற்றிய கூட்டத்தில், வேளாண் போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த 700விவசாயிகளின் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கவும் கோரிக்கை வைத்தார்கள். 

நடக்கவில்லையே, நடக்கவில்லையே இந்த எழுத்துக்களை அச்சுப்பதிவுக்கு அனுப்புகிற வரையில்! 

நூற்றாண்டுகளுக்கு முன் அந்நிய தேசத்தினர் காட்டிய அடாவடிகளே திரும்பவும் எதிரொலிப்பது போல் தோன்றுகிறது. 

மற்றுமொரு ‘புதிய போராட்டம்’ தொடங்காதிருக்க எதிர்பார்ப்போமா?  

இனிப்பு

 

கிழக்கிலங்கைத் தேனகத்தில் ‘ஏறாவூர்’ என்றொரு ஊர். ‘ஏரூர்’ என்றே அன்பாக ஆசையாக அழைப்பர். 

அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்நான் அறிந்து கொண்ட கிழக்கின் முதல் ஊர். 

அப்பொழுது எழுத்தும் வாசிப்புமே உயிர் மூச்சு என்றான பொழுது, கொழும்பு வந்து சந்தித்து நெருக்கமானவர்கள் ‘புரட்சிக்கமால்’ சாலிஹ், யூ.எஸ்.தாவூத் இருவரும் சில பல ஆண்டுகளுக்குப்பிறகு அறிமுகம் கொள்ளாமலேயே, தொடர்புகள் வைத்துக் கொள்ளாமலேயே, நான் தமிழகத்தில் வெளியிட்ட நூல்களில் மூழ்கித் திளைத்த ஒரு வாசகர். 

இன்று இதைப்பதிவிடுகிற பொழுது ஊர் அறிந்த கவிஞர். புகழ் பெற்ற ஓய்வு நிலை விஞ்ஞான ஆசிரியர். 

அன்னவர் 75அகவை ‘ஏறாவூர் தாஹிர்”! 

இரண்டு மூன்று கிழமைகளுக்கு முன், கவிஞர் பாடகர் ‘மாத்தளை கமால்’ வழங்கிய என் தொ.பே.க்கு திடீர் அழைப்பு! 

“மறக்க மறந்த மனிதன் நான்! உங்கள் ‘வரலாற்றில் வள்ளல் ஹபீபு அரசர்’ நூல் வாசிப்பு மூன்று தடவை! இந்திய – இலங்கைப் பாலம் போட்டிருக்கும் மனிதர் நீங்கள்! என் நூலையும் வாசிக்களும்!” 

“பெயர் என்ன? கதையா? கட்டுரையா?”  

“மறக்க மறந்த மனிதம்” தலைப்பு. 

இரண்டாவது கவிதை நூல்!” 

“மன்னிக்கனும் மரபுக்கவிதை மட்டும் தான் பார்ப்பேன். அனுப்பாதீர்கள்”  

இல்லை, அப்படிச் சொல்லப்படாது புதுக்கவிதைகளுடன் சில மரபுக்கவிகளும் தொகுத்திருக்கிறேன். ஆள் மூலம் அனுப்பியும் விட்டேன். மறுக்காமல் பெற்றுக் கொள்ளுங்கள்” 

அவர் சொன்னது போலவே ஒரு லத்தீஃப் சந்திப்பு நூல் அவ்ரும் வாசக அபிமானி. 

கனதியான 193பக்க நூலைப் பெற்றுக் கொண்டு கவிஞர் ஏறாவூர் தாஹிர் பற்றிப் பூரணமாகப் புரிய அறிய பின்னடையைத் திருப்பினால் ஒரு மூதாட்டியின் படம்! 

“சமர்ப்பணம்” என்றுவேறு தலைப்பு! கவிஞரைக் காணோம். 

சுதாகரித்துக் கொண்டு, வந்த அதிதி லத்தீபை. உபசரித்து வழியனுப்பி விட்டு மிக ஆவலாய் பின்னடடை வாசகங்களில் லயித்தேன். அபிமானிகளும் லயிக்கலாம். அல்லது முக நூல் போல் ‘லைக்’ போடலாம். போடுவீர்கள். 

சமர்ப்பணம் 

இக்கவிதைச்சரம்  

2018 – 08-09வியாழன் 

(பிறை 26, துல் கஃதா,

ஹிஜ்ரி 1440)தொடக்கம் 

மண்ணறையில் கண்ணுறையும் 

எங்கள் அன்புத்தாயார் 

மர்ஹும் ஹாஜியானி மீ.லெ. ஹதீஜத் உம்மா அவர்களுக்கு 

அதிசயமாகவும் ஆனந்தமாகவும் அமைந்து வீட்டிருந்தது ஒரு நூலின் பின்னட்டை! 

புது அனுபவமாகவும் இருந்த்து. இதுவரை நூலொன்றின் பின்னட்டையில் தாயின் நிழற்படம் பிரசுரித்து, நிறைவேந்தல் செய்து, நூலைச் சமர்ப்பித்த கவிஞரோ, கவிதாயினியோ யாராவது? தென்படுகிறார்களா சொல்லுங்கள். 

நல்ல உயர் நிலையிலிருந்தும், இலக்கியத் துறையில் கொடிகட்டிப்பறந்தும் தந்தையையும் தாயையும் மறந்து திரிகிறவர்கள் மத்தியில் இந்த 75அகவை ‘ஏறாவூர் தாஹிர்” மிக மிக வித்தியாசமானவராகத் தென்படுகிறார். 

தம் வாழ்நாளில் இரண்டே இரண்டு நூற்களையே வெளியிட்டிருக்கிறார். இரண்டாவதை தாயாருக்குச் சமர்ப்பித்திருக்கிறார். தன்படம் இருக்க வேண்டிய இடத்தில் (பின்னட்டை) தாயை இருத்தியிருக்கிறார். 

பெரும் பாராட்டுக்குரியவராகிறார் “ஏறாவூர் தாஹிர்” 

அத்தோடு நூலில் தொகுத்துள்ள 101கவிதைகளில் மூன்றில் ‘உம்மா’ வைப் பற்றியே பிரலாபிக்கிறார். 

‘உம்மா எங்கே?’ ‘ஒளி தந்த விளக்கெங்கே?’ ‘நீங்கா நினைவில் உம்மா’ என்ற மூன்று தலைப்புகளில் 75அகவை மகனார் அன்னையாரை நினைத்து ஏங்குகிறார். 

ஒவ்வொரு கவிதையிலுமிருந்தும் ஒருசில வரிகளை மட்டும் வழங்கவே வசதிப்படும்.  

* புள்ளம்மா... நம், 
உம்மா எங்கே? 
சயனித்திருந்த அறை 
மௌனித்துவிட்டது ஏன்? 
தலையணை, பாய், மெத்தை... 
தத்தெடுத்த பேர்வழி யார்? 

- ‘உம்மா எங்கே?’ 
அழகு தமிழ் வாயெங்கே 
அன்புமிகு தாயெங்கே? 
காசிம் படைப்போரை, 
கலிவத்து நாயகத்தை 
குறவஞ்சிப் பாடல்களில் 
தனக்கென்றோர் தனித்துவத்தை, 
கோலாட்டப் பாடல்களின் 
சொண்டுகளில் வண்டெங்கே? 
- ‘ஒளிதந்த விளக்கெங்கே?’ 

* முந்நாளில் ஊஞ்சலிலே, 
முற்றத்துப் பந்தலின் கீழ் 
முன்னிரவு வேளைகளில் 
மகவுகளை மடிகிடத்தி, 
மதுரக்குரல் எழுப்பி, 
தாலாட்டில் மனம் நிறையும் 
கானத்தில் நனைதலெப்போ? 
- நீங்கா நினைவில் உம்மா’ 

கவிஞர் ‘ஏறாவூர் தாஹிர்’ தாயார், ஹாஜியானி ஹதீஜத் உம்மா ‘தாலாட்டு’ பாடுவதில் வட்டாரத்தில் பெரும் புகழ்பெற்றவர் என்பது மிக இனிப்பு. 

மேலும் விவரங்களுக்கு- இல் – 14, புளியடிக்கு குறுக்கு வீதி, ஏறாவூர் – 06 

தொ.பே. 0779878860 

Comments