கல்வி வசதிக்காக ஏங்கும் வங்கி ஓயா தோட்டக் குடும்பங்கள் | தினகரன் வாரமஞ்சரி

கல்வி வசதிக்காக ஏங்கும் வங்கி ஓயா தோட்டக் குடும்பங்கள்

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா பிரதேச சபைக்குரிய நானுஓயா பகுதியில் ரதல்ல எனும் இடத்தில் அதி உயரமான மலைப்பகுதி ஒன்றில் இயற்கை வன பிரதேசத்தை அண்டி மலைத்தோட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள்.  

சுமார் 214ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட மலைத்தோட்டம்,  வங்கியான எனவும் இத்தோட்டம் அழைக்கப்படுகிறது. கிக்கிரிகந்த இயற்கை மலை அடிவாரத்தில் இந்த மலைத்தோட்டம் வங்கிஓயா மேல்கணக்கு என்ற பெயரில் அமைந்துள்ளது.  

நான்கு புறங்களிலும் உயரமான மலைகளும் நடுவில் மக்கள் குடியிருப்புமாக விளங்கும் மலைத்தோட்டம் மேற்பிரிவு தோட்டத்தில் இருந்து சிவனொளிபாத மலையை கண்டு தரிசிக்க முடியும்.  

இத்தோட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து சேலம், தஞ்சாவூர், மேட்டூர், தென்னாட்டு ஆகிய பல இடங்களில் இருந்து பெரியங் கங்காணிமார்களால் கொண்டுவரப்பட்டவர்களின் வழித்தோற்றல்களே இங்கே வசிக்கின்றனர்.  

இத் தோட்டத்தைச் சுற்றி பாரிய மண்மேடு வங்கிகள் அக்காலத்தில் காணப்பட்டதாகவும் இதனிடையே ஓடையொன்று  ஓடுவதால் வங்கி ஓயா என பெயரிடப்பட்டதாகவும் இத்தோட்டத்தின் முதியவரான சின்னப்பன் வீரன்  (79) என்பவர் தெரிவித்தார்.   

இத்தோட்ட மக்கள் பிரதான நகருக்கு செல்ல வேண்டுமானால் நானுஓயா மற்றும் தலவாக்கலை நகரங்களுக்கு ரயில் மூலம் மாத்திரம் செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. இப்போது போக்குவரத்துக்காக பாதைகள் சீர்செய்யப்பட்டு வாகனங்கள் ஊடாக பயணிக்கும் வாய்ப்புகள் இம்மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

இந்த தோட்டத்தில் மக்கள் வழிபடும் ஆலயம் மிகவும் சக்திவாய்ந்தது என்கிறார் மூத்தவரான வீ. அண்ணாமலை. வங்கிஓயா மேல் கணக்கு தோட்டத்தில் ஆதியம்மன் ஆலயம் இன்று அம்மன் ஆலயமாக வழிபாடு செய்யப்படுகிறது. வருடாந்த திருவிழாக்கள் தவறாது நடத்தப்படும் இவ்வாலயம் இரண்டு முறை திருப்பணிக்கு ஆளாகியிருக்கிறது.   சோதனைகளிலும் வேதனைகளிலும் இருந்து ஆதியம்மன் காத்து வருவதாக இம்மக்கள் நம்புகின்றனர். மலையகத்தில் வேறு தோட்டங்களில் காணப்படாத காவல் தெய்வங்கள் இந்த தோட்டத்தில் காணப்படுகின்றன. ஒவ்வொரு தேயிலை மலையிலும் காவல் தெய்வங்கள் உள்ளன.  பெரியங்காந்தி அம்மன், கருமாரியம்மன், கல்லாறு கங்கையம்மன், பழனி ஆண்டவர் என வழிபட்டாலும், காவல் தெய்வங்களாக எல்லை முனி, ரோதை முனி, மலைமுனி, சென்டாகட்டி, கம்பியடியான், மகாமுனி, கன்னியம்மா ஆகிய தெய்வங்களின்  

ஆலயங்களும் இங்குள்ளன. இத்தோட்டத்தின் தெய்வ கலாசார நிகழ்வுகளாக பொன்னர் சங்கர், காமன் கூத்து, பறையிசை, மேடை நாடகம் போன்ற கலைகள் இன்றும் இளம் சமூகத்தின் மத்தியில் காணப்படுகிறது.  

இத்தோட்டம் வெளியுலகத்திற்கு  பெரியதாகத் தெரியாது. எனினும்  சகல வளங்களும் கொண்ட தோட்டப் பாடசாலை உள்ளது. ஆளணி பற்றாக்குறை காணப்பட்டாலும் தரம் ஐந்து வரையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலையில் இத்தோட்ட மாணவர்கள் கற்கின்றனர்.

இப்பாடசாலையில் கல்வி கற்றவர்களில் சிலரே பொலிஸ் அதிகாரியாக , ஆசிரியர்களாக மற்றும் வேறு சிறப்பான தொழில்களில் ஈடுபட்டிருப்பதாக இத்தோட்டத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி வீ. பழனிமுத்து தெரிவிக்கிறார்.  

கலைக்கு முக்கியத்துவம் வழங்கும் தோட்டத்தில்  பாரம்பரிய கலை வளர்ச்சிக்கு வித்திட்ட சடையன்       பாக்கியநாதன்    (87) இன்றும் இங்கு வசித்து வருகிறார்.  அதேபோன்று இத்தோட்டத்தின்   வயது முதிர்ந்த பெண்ணாக பெரியண்ணன் நாகம்மா  (89) இங்கே வசித்து வருகிறார்.

இங்குள்ள குடியிருப்புகளில் 02, 03ஆகிய இரு லயங்கள்    இயற்கை     அனர்த்தத்திற்கு உள்ளாகும் நிலையில் உள்ளன. 

மண்சரிவு ஏற்படக்கூடிய அறிகுறிகள் இருப்பதால் இந்த இரண்டு லயக் குடியிருப்புகளைச் சேர்ந்த  மக்களும் இத்தோட்டத்தில் வேறு  இடத்தில் தமக்கு வீடுகட்டி தரும்படி நிர்வாகத்தைக் கேட்டு வருகின்றனர். மேலும்  நானு ஓயாவிலிருந்து ரதல்ல   வழியாக வங்கிஓயா மேல் கணக்கு தோட்டத்திற்கு பஸ் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அதுவே  எதிர்கால சந்ததியினரின் சபீட்சத்துக்கும் வழிவகுக்கும் என்றும் எனவே கல்வி அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கல்வி வசதியை அதிகரிக்க உதவ வேண்டும் என்பதும் இவர்களின் பிரதான கோரிக்கை. 

ஆறுமுகம் ரமேஸ்

Comments