20 வருடங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் கலஹா குறூப் பாலம் | தினகரன் வாரமஞ்சரி

20 வருடங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் கலஹா குறூப் பாலம்

கலஹாவில் இருந்து ஹந்தான ஊடாக கண்டிக்கு செல்லும் பாதையில் கலஹா ஆற்றிற்கு குறுக்கே கலஹா குறூப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 60அடி நீளமான பாலம் 1880ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆங்கிலேயரால் கட்டப்பட்டதாகும். 

இது இரும்பு தூண்களின் மீது கொங்ரீட்டால் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் கடந்த 20வருடங்களுக்கு மேலாகவே பழுதடைந்து காணப்படுகிறது. பாலத்தை தாங்கும் இரும்பு தூண் உட்பட சகல பகுதிகளும் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.  

கடந்த வாரகாலத்தில் பெய்த தொடர் கடுமழைகாரணமாக பாலத்தின் கொங்ரீட் பகுதி ஒன்று தாழிறங்கி ஆற்றில் வீழ்ந்துள்ளது.

இதனால் பாதையின் ஊடாக பஸ்சேவை நடத்தமுடியாத நிலை உருவாகி உள்ளது. எனினும் இப்பாதையை 20ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். 

10கும் மேற்பட்ட தோட்டங்களை சேர்ந்த மக்களும, ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களும், கலஹா, தெல்தோட்டை, ஹேவாஹெட்ட, புப்புரஸ்ஸ, தலாத்து ஓயா, கண்டி நகரங்களை சேர்ந்தவர்களும் இப்பாதையை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். 

இப்பாதையின் ஊடாகவே தெல்தோட்டை மாவட்ட வைத்தியசாலை மற்றும் கலஹா கிராம வைத்தியசாலையின் அவசர நோயாளிகளை கண்டி பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்கின்றனர். தற்போது இந்தப் பாலம் சிதிலமடைந்து காணப்படுவதால் இதனுௗடாக அம்பியூலன்ஸ் வண்டியும் பயணிக்க முடியாதுள்ளது என்பது முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது.  

நாளொன்றுக்கு 2ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் இப்பாதையின் ஊடாக பயணிக்கின்றன.

தற்போது முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மட்டுமே பயணிக்கக் கூடியதாக உள்ளது. 

இலங்கையில் முதல் முதலாக தேயிலை பயிரிடப்பட்ட ஜேம்ஸ் டெய்லரின் லுௗல்கந்துரவுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்பாதையின் ஊடாகவே பயணிக்க வேண்டும்.  

கண்டி நகரில் இருந்து பேராதனை ஊடாக கலஹா நகருக்கு 27கிலோ மீற்றர் தூரம். ஆனால் கண்டி நகரில் இருந்து ஹந்தான ஊடாக 12கிலோ மீற்றர் தூரம் பயணித்தால் கலஹாவை அடையலாம்.

இத்தனைக்கும் இப்பாதை கார்பட் போடப்பட்டது. இப்பாலத்தால் இப்பாதை பயனற்றுக் கிடக்கிறது. இப்பாதையானது ஆங்கிலேயர் காலமுதல் போக்குவரத்து நடைபெற்றுவரும் பாதை.  

வியாபார தேவைகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்லமுடியாதபடியால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

வீடுகட்டுவதற்கான பொருட்களை எடுத்து செல்ல முடியாது பரிதவித்துப் போயுள்ளனர்.  

கலஹா இராமகிருஷ்ணா மத்திய கல்லுௗரி, பத்ராவதி சிங்கள பாடசாலை உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு செல்லும் ஆயிரத்துக்்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். 

இப்பாதை 600கோடிக்கும் அதிக பண செலவில் கார்பட் இட்டு புனரமைக்கப்பட்ட பாதை. குறுகிய நேரத்தில் கண்டி கலஹா நகரங்களுக்கு இடையே பயணிக்க கூடிய இந்தப் பாதையே இப்பகுதி வாகன சாரதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

தயவு செய்து இப் பாலத்தை புனரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.    

ஆர்.நவராஜா

Comments