நெடுஞ்சாலை அமைச்சுக்கு 4 மில். டொலர்களை வழங்குகிறது கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் | தினகரன் வாரமஞ்சரி

நெடுஞ்சாலை அமைச்சுக்கு 4 மில். டொலர்களை வழங்குகிறது கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்

கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், (KOICA) நெடுஞ்சாலை அமைச்சின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு நான்கு மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மானியத்தை வழங்கியது. இந்த திட்டம்   கடந்த நவம்பர் 30ஆம் திகதியன்று கையெழுத்தானது.

KOICA இலங்கை வதிவிடப் பணிப்பாளர் திருமதி Kang Youn Hwa, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் வீரகோன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிநிதிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் சிறந்த போக்குவரத்து உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக தேசிய மட்டத்தில் போக்குவரத்து தரவு பகுப்பாய்வு மற்றும் முகாமைத்துவ அமைப்பை தயாரித்து நடைமுறைப்படுத்துவதே இத் திட்டத்தின் நோக்கமாகும். வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தை  2025ஆம் ஆண்டு பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரியாவின் மேம்பட்ட வீதிப்  போக்குவரத்து அமைப்பு மற்றும் விதிப் போக்குவரத்து தரவு மேலாண்மை நிபுணத்துவத்தின் அடிப்படையில், KOICA பல கொரிய போக்குவரத்து நிபுணர்களை அனுப்பும், அவர்கள் இந்த திட்டத்தின் பல்வேறு கூறுகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

தேசிய அளவிலான போக்குவரத்து தரவு மேலாண்மை திட்டத்தை உருவாக்குதல், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர்களுக்கான திறனை மேம்படுத்துதல், போக்குவரத்து தரவுத்தளம் மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவ அமைப்பை நிறுவுதல் மற்றும் போக்குவரத்து தரவுத்தள முகாமைத்துவ முறைமைக்கான உபகரணங்களை வழங்குதல் ஆகிய திட்டங்களின் விளைவுகளில் அடங்கும்.

 

Comments