மனித நாகரிகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் காட்டுமிராண்டித்தனம்! | தினகரன் வாரமஞ்சரி

மனித நாகரிகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் காட்டுமிராண்டித்தனம்!

இனம், மதம் என்பன உலகின் பல நாடுகளில்அரசியலில் அதிகம் பயன்படுத்தப்படும்விடயமாக மாறியுள்ள நிலையில், உலகின்பல பகுதிகளில் மத அடிப்படைவாதம் பல்வேறு விதமான பாரதூரமான தாக்கத்தைச் செலுத்திவருகின்றது. மத ரீதியான அடிப்படைவாதக்கோட்பாடுகள் ஓர் எல்லையைத் தாண்டிச்செல்லும் போது, அது மதத் தீவிரமாதமாகவும்வெறித்தனமாகவும் மாறி விடுகின்றது. அங்கேகாட்டுமிராண்டித்தனமும் காடைத்தனங்களும்அரங்கேறுகின்றன.

அவ்வாறு உருமாறிய மதத் தீவிரவாத வெறித்தனச் செயற்பாட்டின் விளைவையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் நாம் கண்ணுற்றோம். இலங்கையரான பிரியந்த குமார தியவதன என்ற அப்பாவிப் பொறியியலாளர் பாகிஸ்தானில் மதவெறித் தீவிரவாதக் கும்பல் ஒன்றினால் பட்டப்பகலில், பலரும் பார்த்திருக்க வீதியில் வைத்து தாக்கப்பட்டு உயிருடன் தீயிட்டுக் கொழுத்தப்பட்டார்.

இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை உலகின் அனைத்து நாடுகளுமே வன்மையாகக் கண்டித்தன. இந்த நாகரிகமற்ற காடையர் கும்பலின் வெறித்தனத்தையிட்டு உலகமே வெட்கத்தினால் தலைகுனிந்தது. இவ்வாறான ஈனச் செயலில் ஈடுபட்டவர்களை மதத்தின் பெயரால் செயற்படும் வெறிபிடித்த கொடிய மிருகங்கள் என்பதே பொருத்தமாகும்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் உள்ள முன்னணி ஆடைத் தொழிற்சாலையில் முகாமையாளராகப் பணியாற்றி வந்த இலங்கையர் பிரியந்த குமார தியவதன என்ற பொறியியலாளர் மதவெறியாட்டத்தில் பலியான ஒரு அப்பாவி குடும்பஸ்தர் ஆவார்.

சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக அங்கு பணியாற்றி வந்த அவர், குறித்த தொழிற்சாலையின் வர்ணம் பூசும் பணிக்காக மதிலில் ஒட்டப்பட்டிருந்த மதம் சார்ந்த சுவரொட்டியொன்றைக் கிழித்ததாகக் கூறியே அவர் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் எரிக்கப்பட்டும் உள்ளார்.

உருது மொழியில் காணப்பட்ட சுவரொட்டியின் உள்ளடக்கம் குறித்து தெரிந்து கொள்ளாத நிலையில் அதனை அகற்றுவதற்கு அவர் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், அதன் பின்னர் அவர் மன்னிப்புக் கேட்ட போதும் அதனை ஏற்றுக் கொள்ளாத மதத் தீவிரவாத வெறிக்கும்பல் அவரை அடித்துக் கொன்று விட்டதாகவும் நேரில் கண்டவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.

மனித இனம்  நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. ஆனால் மதத்தின் பேரில் இவ்வாறான காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபடுவோர் தங்களை எக்காலத்திலும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணமாகக் காணப்படுகிறது.

மதம் குறித்த வெறி சாதாரண மனிதனுக்குக் காணப்படும் இரக்க குணத்தை முழுமையாகச் சாகடித்து விட்டது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. பிரியந்தகுமார வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட காட்சியை தொலைபேசிகளில் வீடியோ பதிவு செய்து கொண்டதன் மூலம் அக்கும்பலின் வெறித்தனம் நன்கு தெளிவாகின்றது.

மற்றொரு வன்முறையாளன், கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு பிரியந்தகுமார தீயிட்டுக் எரித்துக் கொல்லப்படுவதை ரசித்து செல்பி எடுத்துள்ளார். ஷெல்பி எடுப்பதிலும், வீடியோ பதிவு செய்வதிலும் அவர்கள் அனுபவித்த இன்பத்தைப் பார்க்கும் போது அவர்களது வெறித்தனம் நன்றாகவே புரிகின்றது.

நாடுகள் பலவற்றில் மத அடிப்படைவாதம் காணப்படுகின்றமை நாம் அறிந்த விடயமாக இருக்கின்றது. அதன் பேரில் கொடிய தாக்குதல்களும் அடிக்கடி இடம்பெறுகின்றன. தற்போது தெற்காசிய பிராந்திய நாடொன்றில் இவ்வாறான வெறியாட்டம் நிகழ்ந்திருக்கின்றது.

அடிக்கடி மாறி வரும் இராணுவ ஆட்சி, பயங்கரவாதக் குழுக்களின் செயற்பாடுகள் எனப் பல்வேறு உள்ளகச் சிக்கல்களைக் கொண்ட நாடாகவே பாகிஸ்தான் காணப்படுகிறது. பாகிஸ்தானில் காணப்படும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அங்கு ஆட்சிக்கு வரும் எவரும் உறுதியான நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. ஆயுத ரீதியிலான பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அப்பால் தற்பொழுது மதரீதியிலான மிருகத்தனங்களும் அங்கு தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன.

இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளால் பாகிஸ்தானில் இலங்கை எதிர்கொண்ட துர்ப்பாக்கியமான இரண்டாவது சம்பவம் இது என்று கூற வேண்டும். பல வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருந்தனர். எனினும் அதிர்ஷ்டவசமாக எமது வீரர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம் பாகிஸ்தானுக்கு சர்வதேச ரீதியில் பாரியதொரு அவப்பெயரை அவ்வேளையில் ஏற்படுத்தியது மாத்திரமன்றி, அதன் பின்னர் எந்தவொரு நாடும் பாகிஸ்தானுக்குக் கிரிக்கெட் விளையாடச் செல்லவில்லை. இது அவர்களுக்குப் பாதிப்பாக அமைந்தது. இலங்கை கிரிக்கட் அணியானது அத்தாக்குதலில் இருந்து தப்பிக் கொண்டது. ஆனால் அப்பாவியான பிரியந்த குமாரவின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முடியாமல் போயுள்ளது.

பாகிஸ்தானில் இடம்பெற்று வந்த ஊழல் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த இம்ரான் கானை கடந்த பொதுத் தேர்தலில் அந்நாட்டு மக்கள் பிரதமராகத் தேர்ந்தெடுத்தனர். அவருடைய ஆட்சியில் பாகிஸ்தானின் மறுமலர்ச்சி எதிர்பார்க்கப்பட்டது. சமாதானப் பிரியரும், மனித உரிமைகள் ஆர்வலருமான இம்ரான் கானின் ஆட்சியில் ஒப்பீட்டளவில் முன்னேற்றங்கள் தென்பட்டாலும், மதவாத அடிப்படையில் அங்கு இடம்பெறுகின்ற வன்முறைகளுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படவில்லை என்பதால் தற்போதைய ஆட்சி தொடர்பிலும் சந்தேகங்கள் காணப்படுகின்றன.

பிரதமர் இம்ரான் கான் மனித உரிமை ஆர்வலர். பண்பும் நாகரிகமும் நிறைந்தவர். பிரியந்த விடயத்தில் அவரது பிரதிபலிப்பு பாராட்டத்தக்கது. ஆனால் மதஅடிப்படைவாதமும், அரசியலில் இராணுவத்தின் மறைமுக பிரசன்னமும் காணப்படுகின்ற பாகிஸ்தானில் பிரியந்தவுக்கு நீதி கிடைப்பதில் முட்டுக்கட்டைகள் அதிகம்!

‘பிரியந்தவின் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் வெட்கம் அடைகிறது’ என இம்ரான் கான் கருத்துத் தெரிவித்திருந்ததுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உச்ச தண்டணை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அவர் சில நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்த போதும் இவ்வாறான வன்முறைகள் சாதாரணமாக இடம்பெறுபவை என அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது பலரையும் விசனத்துக்குள்ளாக்கியுள்ளது. அவரது கூற்று தொடர்பாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

பிரியந்தவை மதவெறிக் கும்பல் தாக்கும் போது, அவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஒரேயொரு நல்லுள்ளம் மாத்திரம் போராடியுள்ளது. அந்த பாகிஸ்தானியர் தனித்து நின்று கெஞ்சிய போதும், அது பலனளிக்கவில்லை. பிரியந்த கொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த நகரில் உள்ளவர்கள் ஒரு இலட்சம் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை சேகரித்து பிரியந்தவின் குடும்பத்தினருக்கு வழங்கவுள்ளனர். அது மாத்திரமன்றி பிரியந்தவின் குடும்பத்தினருக்காக அவருடைய சம்பளத்தைத் தொடர்ந்தும் வழங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஒருவரை உயிருடன் அடித்து எரித்துக் கொன்று விட்டு என்னதான் நஷ்டஈடுகள் வழங்கினாலும் அவரது உயிர் மீண்டும் வரப் போவதில்லை. குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் துயரம் தீரப் போவதுமில்லை.

பிரியந்த விவகாரம் இலங்கை முழுவதும் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சக இலங்கையர் ஒருவர் மதவெறிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளமை பலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இதனை இனம் ஒன்றுக்கு எதிரான குற்றச்சாட்டாக மாற்றாமல் விடயம் கையாளப்படுகின்றமை பாராட்டத்தக்கதாகும். பெரும்பான்மையின மக்களின் உளப்பண்பையே அவர்களது உணர்வுகள் புலப்படுத்துகின்றன.

பாகிஸ்தானில் இடம்பெற்ற இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து அமைதி வழியிலான போராட்டங்கள் சில முன்னெடுக்கப்பட்டாலும் குரோதம் தூண்டி விடப்படவில்லை என்பது ஆறுதலான விடயம். மறுபக்கத்தில் ஒரு சிலர் மதத்தை முன்னுரிமைப்படுத்தி சமூக ஊடகங்களில் இந்தச் சம்பவத்தை நியாயப்படுத்த முயலுவதையும் காணக் கூடியதாகவுள்ளது. சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ரிசானா கழுத்து வெட்டப்பட்டு  மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்திய ஒரு மனமுதிர்ச்சியற்ற தரப்பினரே தற்பொழுது பிரியந்த மீதான கொலைவெறித் தாக்குதலையும் நியாயப்படுத்த முயற்சிப்பதை சமூக ஊடகங்களில் காண முடிகின்றது. ஆனாலும் பிரியந்த விவகாரத்தை குறித்த இனத்துக்கு எதிரான விடயமாகத் தூண்டி விடாமல் பெரும்பான்மை இனத்தவர்கள் நேர்மையான முறையில் கையாண்டு வருவதும் பாராட்டுக்குரியதாகும்.

அதேநேரம், பிரியந்தவின் படுகொலைக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் பலரினாலும் எழுப்பப்படுகிறது. மதத்தை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற பல வன்முறைகளுக்கு பாகிஸ்தான் இன்னமும் நீதியைப் பெற்றுக் கொடுக்காமையே இந்த சந்தேகத்துக்குப் பிரதான காரணமாகவுள்ளது. பாகிஸ்தானில் முன்னர் இந்து ஆலயங்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்து மக்களும் தாக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அவற்றுக்கெல்லாம் அங்கே நீதி கிடைக்கவில்லை.

இருந்த போதும் பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையில் காணப்படும் இராஜதந்திர ரீதியிலான நெருக்கம் பிரியந்தவின் கொலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்புக்களை அதிகமாக்கியுள்ளன. இறுதி யுத்தமாக இருக்கட்டும், அண்மையில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுப்பதாக இருக்கட்டும்... இக்கட்டமான சூழ்நிலைகளில் இலங்கைக்கு உதவிய நட்பு நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது. இந்த நெருக்கமான புரிந்துணர்வு பிரியந்தவின் கொலைக்கான நீதியையும் நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பாக அமைய வேண்டும். அதுவே இன, மத ஒருமைப்பாட்டை நேசிக்கின்ற மக்களின் கோரிக்கை ஆகும்.

அதேவேளை மதஅடிப்படைவாதத்தின் பேரில் இடம்பெறும் வெறித்தனங்கள் பாகிஸ்தானில் முடிவுக்குக் கொண்டு வரப்படாத வரை, அந்நாட்டில் வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே பிரியந்த மீதான கொலைவெறித் தாக்குதல் உறுதிப்படுத்துகின்றது.

சம்யுக்தன்

Comments