
ஒரு தனி இலக்கிய படைப்பாளியின், படைப்புகளை மட்டுமே தாங்கியதாய் நூல் வெளியீட்டு விழா வரிசையில், முற்றும் முழுதுமாய் மாறுபட்ட மறக்கவொண்ணா நிகழ்வு.
ஆமாம் அடுத்த எழுத்தாளர்களின் அடைவுகளை, அவர்கள் தம் அற்புத சாதனைகளை, தேடித் திரட்டி, காழ்ப்புணர்ச்சி அணுவளவேனும் இன்றி, அடையாளம் போட்டுக் கொண்ட, ஆவண பொக்கிஷ வெளியீட்டரங்கு.
கண்களை குளமாக்கி, நெஞ்சை நெகிழவைத்த கனத்த சபை.
நம் தாய் நாட்டின், இஸ்லாமிய பெண் எழுத்தாளர்களின், காத்திரமான, கனதியான ஆளுமைகளை, அடுத்த சமூகத்துக்கும், கொண்டு சென்று இன ஐக்கியத்துக்கு, தூபமிட்ட "திதுலன தாரக்காவுக்கு" (மின்னும் தாரகைகள்) சிங்கார மொழியாம் சிங்களத்தில் நூல் வெளியீட்டு விழா.
தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர் தலைமையில் கடந்த சனியன்று (04,12,2021) காலை தலைநகரில் கண்கொள்ளா, நூல் வெளியீட்டு விழா மிக சீராய் நிகழ்ந்து, இலக்கிய இதயங்களை, கட்டிப்போட்டுக்கொண்டது.
இத்தனைக்கும், காரணமாயமைந்த "பெண்ணுலக தாரகை" கலாபூஷணம் சகோதரி நூருல் அயின் நஜ்முல் ஹுசைனின் ஆழமான அர்ப்பணிப்புகளும், அவரது வியர்வைத் துளிகளும், நம் கண்முன்னே ஒவ்வொரு பொழுதும், நிழலாடுகின்ற போது யாரது உளம்தான் நெகிழாமல் இருக்கப்போகிறது?.
மங்காப் புகழை இவருக்கு தேடிக் கொடுத்த, "மின்னும் தாரகை" எனும் ஆவணப் பொக்கிஷத்தை வெளியிட்ட, அந்த நினைவுகளின் ஈரத்தோடு, இன்னும் ஒரு புதையலாக, "திதுலன தாரக்கா" சிங்கள மொழியில், ஓர் ஆய்வு நூலுக்கு, உருப்போட்ட கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைனின் இந்த அபார சாதனையினை, இலக்கிய உலகும், காலமும் எப்படி மறந்து போகும்? எப்படி இதை மறைத்து கடந்துபோகும் ?
விழாத்தலைவர், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர், செந்தில் வேலவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர், "திதுலன தாரக்கா" நூல் ஆசிரியை கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைனின், சிறப்பான பங்களிப்புகளை, அவரது வளமான ஆற்றல்களை மிகத் தெளிவாக, சபையில் வெளிகொணர்ந்த அதே வேளை, பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மாலா பஸ்நாயக்க, முன்னாள் "தெசத்திய" பிரதம ஆசியர், அரசாங்க தகவல் திணைக்கள அதிகாரி சுமித் மாயாதுன்னே, இலங்கை எழுத்தாளர் அமைப்பின் செயலாளர் கமல் பெரேரா ஆகியோர் சிங்கள மொழியில், சகோதரி நூருல் அயினின் சிறப்புகளை மிகச்சிறப்பாக மனநிறைவாக சொல்லி சபையோரை ஆனந்த களிப்பிலாழ்த்தினர். பயங்கர வாத காலப் பகுதியில் தனது உயிரைப் பணயம் வைத்து பல தமிழ்த் தலைவர்களை பேட்டி கண்டு தெசத்திய சஞ்சிகையில் நூருல் அயின் பிரசுரித்தார் என்று கூறி சுமித் மாயாதுன்னே அவரின் புகழை ஓங்கச் செய்தார்.
இலங்கை வானொலி பிரதி பணிப்பாளர் நாயகம் திருமதி மயூரி அபேசிங்க, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் ஆகியோரும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர். தமிழ் மணி மானா மக்கீன், சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி, காவ்யாபிமானி கலைவாதி கலீல் ஆகியோரும் மேடையை அலங்கரித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொஹிதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுவும் இந் நூல் வெளியீட்டு விழாவுக்கு சிறப்புச் சேர்த்தது. அவருடன் மௌலவி ஜலீல் சுல்தான், ஊடகவியலாளர் சாஹுல் ஹமீத் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
நூல் நயவுரையினை முஸ்லிம் மீடியா போரம் தலைவர், முன்னாள் நவமணி பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் கனகச்சிதமாக சிங்கள மொழியில் நிகழ்த்தினார்.
இசைகோகிலம் நூர்ஜஹான் மர்சூக், ஈழத்து இசைமுரசு கலைக்கமல், ஆசிரிய ஆலோசகர் ரக்வான அனீஸா பேகம் ஆகியோர் தமது காந்தக் குரல்களால் நூருல் அயின் புகழ் பாட சென் அந்தனீஸ் கல்லூரி மாணவர் ரிஹாம் றியாழ் தனது மழலைக் குரலால் தமிழிலும் சிங்களத்திலும் வாழ்த்துப் பாடல் இசைத்து சபையை தன் வசமாக்கினார்.
தமிழ்த்தென்றல் அலி அக்பர், நூலாசிரியரின் மகள் சட்டத்தரணி நூருஸ் ஷப்னா சிராஜுதீன் ஆகியோர் கலாபூஷணம் நூருல் அயினை தம் கவி வரிகளால் வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.
இந் நிகழ்வில் முதல் பிரதியை அக்கரைப்பற்றிலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியையான பன்னூலாசிரியர் கவிதாயினி திருமதி மதீனா உம்மா பெற்றுக் கொண்டார். ஒரு பெண் பிரமுகர் நூல் வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை பெற்றுக் கொண்டதும் ஒரு புதுமையே. தனக்காக அவ்வாறு பயணம் செய்து தன்னை கௌரவப் படுத்திய மதீனா உம்மாவை நூலாசிரியர் நூருல் அயின் சும்மா விடவில்லை. அவருக்கு மேடையிலேயே பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்ததோடு மட்டும் நிற்காமல் நூலாசிரியர் நூருல் அயின் முதல் பிரதி பெற்ற மதீனா உம்மாவுக்கு தங்க மோதிரம் அணிவித்து அவரையும் சபையோரையும் பிரமிக்கச் செய்தார். இதனை மற்றொரு சிறப்பம்சமாகவே நான் கருதுகிறேன்.
மன நிறைவோடு கலைந்து சென்ற அனைவருக்கும் பகல் உணவு "திதுலன தாரக்கா" பொறித்த கைப் பையில் வைத்து வழங்கப்பட்டது.
கொழும்பு டீ. எஸ். சேனாநாயக்க மற்றும் குணசிங்கபுர மஸ்ஜிதுன் நஜ்மி மாணவன் ஷிராப் ஸாஹிர் கிராஅத் ஓதினார். சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் வரவேற்புரை வழங்க ஆரம்பமான இவ்விழா " மின்னும் தாரகை", "திதுலன தாரக்கா " நூல் ஆசிரியை கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைனின் ஏற்புரையோடு, இனிதே நிறைவுபெற்றது. இந் நூலில் உள்வாங்கபட்ட காலஞ்சென்ற எழுத்தாளர்கள் உட்பட கொரோனா தாக்கத்தால் இறையடிசேர்ந்த எழுத்தாளர்களுக்காகவும் மௌனப் பிரார்த்தனை இடம்பெற்றது.
பல அமைப்புகள், தனிப்பட்ட முறையில் எழுத்தாளர்கள் நூலாசிரியரை பொன்னாடை போர்த்தி, பரிசுகள் வழங்கி கௌரவித்தமையும் கண் கொள்ளா காட்சியாக இருந்தது.
விழா நிகழ்வுகள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை தயாரிப்பாளர், இஸ்பஹான் ஷாபி நளீமீயின் தொகுப்பில் முஸ்லிம் சேவையில் நேரடியாக ஒலிபரப்பாகியமை குறிப்பிடத்தக்கது.
எம். எஸ். எம். ஜின்னா