புசல்லாவ சங்குவாரி தமிழ் வித்தியாலயம்; மண்சரிவில் பாழடைந்த கட்டடம் மறுசீரமைப்பு செய்து தரப்படுமா? | தினகரன் வாரமஞ்சரி

புசல்லாவ சங்குவாரி தமிழ் வித்தியாலயம்; மண்சரிவில் பாழடைந்த கட்டடம் மறுசீரமைப்பு செய்து தரப்படுமா?

மலையகத்தில் கடந்த 150ஆண்டுகளாக தமிழ் சமூகம் வாழ்ந்து வந்தாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 7பேர்ச் காணிக்கு கூட உரிமைப் பத்திரம் இல்லை என்பது விசித்திரமானது, வெட்கக் கேடானது.  

அந்தக் கட்சி இந்தக் கட்சி என எந்தக்கட்சியும் காணி உரிமை தொடர்பில் முழுமையான தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை. 7பேர்ச் காணியுடன் கூடிய பல வீட்டுத்திட்டங்கள் வந்தாலும் வீடுகள் கட்டுவதற்கான பொருத்தமான நிலப்பகுதிகளை பெற்றுக்கொடுக்க வில்லை. மண்சரிவுக்கு உள்ளாகக் கூடிய, தேயிலைகூட நடமுடியாத சேற்று நிலப்பகுதிகளையே வீட்டு மனையாக ஒதுக்கி தருகிறது நிர்வாகம்.  

மலைச்சரிவான பகுதிகளிலேயே 90சதவீதமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஏன் சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் அவ்வாறான இடங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மண்சரிவு ஏற்படக்கூடிய நிலப்பகுதியாகவும். காற்று கடுமையாக வீசும் ஏற்றமான இடமாகவும் இருக்கின்றன. உங்கள் கண்ணில்பட்ட வீட்டுத்திட்டங்களையும் சிறுவர் நிலையங்களையும் கொஞ்சம் உங்கள் மணக்கண்ணுக்கு கொண்டு வாருங்கள், நான் சொல்வதி சரி என்பது புரியும்.   இப்படியாக என் கண்ணில்பட்ட பாடசாலை. ஒன்றை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றேன். மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திக்ற்குள் கம்பளை தேர்தல் தொகுதியில் கம்பளை கல்விவலயத்திக்கு உட்பட்ட புஸ்சலாவ க/சங்குவாரி தமிழ் வித்தியாலத்துக்கு வருவோம்.  

இது பிரபல மூத்த அரசியல்வாதி அமரர் இராசலிங்கத்தின் ஊராகும். இந்த பாடசாலையில் தற்போது 100க்கு மேற்பட்ட மாணவர்களும் 10க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் உள்ளனர். தரம் 9வரையில் வகுப்புகள் உள்ளன. 

இப்பாடசாலை மிக பழமையான கட்டடம் ஒன்றில் இயங்கி வந்தது 2005ஆண்டு காலப்பகுதியில் 11025அளவுடைய புதிய பாடசாலைக் கட்டடம் ஒன்று கட்டடம் ஆரம்பிக்ப்பட்டது. பெருந்தொகை பண செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் மிகநேர்த்தியாகவும் உறுதியுடையதாகவும் அமைக்கப்பட்டது. ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் புதிய கட்டடத்தையும் அதன் நேர்த்தியையும் கண்டு மகிழ்ந்திருந்தனர். கம்பளை கல்வி வலயத்தில் கட்டட இடவசதி கொண்ட ஒரு பாடசாலையாக இது இருந்தது.  சங்குவாரி பாடசாலை, கண்டி நுவரெலியா ஏ5பிரதான பாதை அருகில் சங்குவாரி தோட்டத்திக்கு செல்லும் உள்வீதியின் மேல்பக்கத்தில் அமைந்துள்ளது. 2018ஆண்டு பெய்த கடும் தொடர் மழையின்போது 2018ம் ஆண்டு மே 9ஆம் திகதி பி.ப 2.30இந்த பாடசாலை கட்டிடத்தின் பின்புறம் உள்ள பாரிய மண்மேடு ஒன்று சரிந்து கட்டிடத்தில் வீழ்ந்தது.  அச் சமயத்தில் பாடசாலை பிற்பகல் 1.30மணியளவில் முடிந்திருந்தது. மேலதிக வகுப்புகள் வழமையாக நடக்கும் அன்றைய தினம் ஏதோ ஒரு காரணத்தால் அல்லது அதிர்ஷ்டவசமாக மேலதிக வகுப்புகள் நடைபெறவில்லை. தரம் 5புலமைப் பரிசில் பரீட்சைக்காக மாணவர்களை ஆயத்தப்படுத்தும் வகுப்பறையும் கடுமையாக பாதிப்படைந்திருந்தன. வருடா வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் இப்பாடசாலையில் மாணவர்கள் சித்தியடைந்து வருகின்றனர். 

அன்று இந்த வகுப்பு நடந்திருந்தால் அல்லது பாடசாலை முடியுமுன் இந்த அனர்த்தம் நடந்திருந்தால் விளைவுகள் படுமோசமாக இருந்திருக்கும். இது நடந்து இன்றைக்கு 3வருடங்கள் கடந்தும் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்குள் கல்விகற்பித்தல் சாத்தியம் அல்ல.

இந்தக் கட்டடம் பாழடைந்து பயனற்று கிடக்கிறது. ஆசிரியர் ஓய்வறை, விஞ்ஞான ஆய்வு கூடம் என்பனவற்றில் இடநெருக்கடிகளுக்கு மத்தியிலும் 

கொரோனா தொற்று அபாயத்திற்கு மத்தியிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பெற்றோர் அதிபர் ஆசிரியர் சகல தரப்புக்கும் பிரச்சினைக்கு முடிவுகட்டித் தரும்படி கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் பயன் இல்லை. 

ஆர்.நவராஜா
படங்கள்: தெல்தோட்டை தினகரன் நிருபர் 

Comments