மலையகக் கவிதைகளில் பெண்களும் சிறுவர்களும் | தினகரன் வாரமஞ்சரி

மலையகக் கவிதைகளில் பெண்களும் சிறுவர்களும்

நூல் அறிமுகம்

தமிழ் இலக்கிய ஆய்வுத் துறையில் புதிய ஆய்வுகளைத் தேட வேண்டும் என்று முனைப்புடன் செயற்படுபவர் தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித் துறைத் தலைவரும் முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி ஸாதியா பௌஸர். அவரது இவ்வாய்வு நூலானது மலையகத்தில் இதுவரையிலும் செய்யப்படாத மலையக நவீன கவிதைகள் பற்றிய நுண் ஆய்வு நூலாகும். அவரது ஆய்வு எழுத்துக்களில் மலையக ஆரம்ப வரலாறு முதல் இற்றை வரை மலையகத்தில் காண நேர்ந்த அவலங்களையும் கொடூரங்களையும், அவர்கள் அல்லல்படுவதையும் அவற்றில் மாறுதல்களையும் மலையகம் வேண்டி நிற்கும் இலட்சியங்களையும் மலையக கவிஞர்கள் நிதர்சனப்படுத்தி படைத்த கவிதைகளையும் ஆழ ஊடுருவி அலசி ஆராய்ந்து சிறுகதை, நாவல் இலக்கியம் போன்றவற்றுடன் ஒப்பிட்டு மிகவும் நிதானமான முறையில் ஆய்வு நூலை வெளிக்கொணர்ந்துள்ளார் கலாநிதி ஸாதியா பௌஸர்.

இயந்திரமயப்பட்ட வாழ்க்கை, அளவுக்கதிகமான குடும்பச் சுமைகளைச் சுமத்தல், கணவன் மாரால் துன்புறுத்தப்படல் குடும்பத் திட்டமிடலின்மை எனச் சிறு தலைப்பில் கீழ் றசீனா, றசீனா, தமிழோவியன், குறிச்சித் தென்னவன், குறிஞ்சி நாடன் ஆகிய கவிஞர்களுடைய கவிதைகள் எடுத்து ஆராயப்பட்டு மலைகயகப் பெண்களினதும் பிள்ளைகளினதும் வாழ்வியலை இந்த ஆய்வு நூல் அம்பலப்படுத்துகிறது. மலையகப் பெண்களும் தேயிலை தோட்டத் தொழிலும் எனும் முதலாவது தலைப்பின் கீழ் வரும் இரண்டாவது உப தலைப்பு இதுவாகும்.

தோட்டத் தொழிலில் பெண்கள் படும்  அவஸ்தைகளை துயரங்களையும் புலப்படுத்தும் கவிதை வரிகளை முழுமையான மதிப்பீடுகளுடன் பதிவு செய்துள்ளார், கவிஞர்கள் தாம் வாழும் சூழல் பற்றிய புரிதலையும் மற்றும் மண்ணோடும் மக்களோடும் உள்ள உறவையும் மிக நேர்த்தியாக தம் ஆய்வு நூலில் வெளிக்கொணர்ந்துள்ளார் நூலாசிரியர் கலாநிதி ஸாதியா பௌஸர். சமூக மாற்றத்திற்கான விழிப்புணர்வூட்டும் கவிஞர்களின் கவிதைகளைத் தொட்டுக் காட்டியுள்ளார்.

அந்த வகையில் இரா. நித்தியானந்தன், தமிழோவியன், பூண்டுலோய தர்மு, பன்னீர் செல்வம்,, சி. வி. வேலுப்பிள்ளை, குமார்.சி. சிவ. இராேஜந்திரன், இ. தம்பையா, சிவசேகரம். சி, சந்தனம் சத்தியபனந்தன், இக்பால் அலி ஆகியோரது முக்கிய கவி வரிகள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே போன்று மலையக விதவைகள், வயது முதிய பெண்கள், பாலியல் தொழிலாளர்களின் நிலை குறித்து தனியாக சிறு தலைப்புகளில் கவிதைகளை தரம்பிரித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டுள்ளது, இத்தகைய பெண்கள் படும் அவஸ்தை நம்மில் எத்தனை பேருக்கும் தெரியும். உண்மையிலேயே மலையகக் கவிஞர்கள் மலையகப் பெண்கள் அனுபவிக்கும் சொல்லொண்ணாத்துயரத்தையும் அவர்கள் எதிர் நோக்கும் சவால்களையும் கவிஞர்களின் கவி வரிகளில் இருந்து உணர்த்தக்கூடிய கருத்துக்களையும் புரியாதவர்களும் புரிந்து கொள்ளுமளவு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

எளிமையான மலையக மண் வாசனையுடன் கூடிய மொழி வழக்கின் மூலம் எழுதப்பட்ட அற்புதமான கவிதைகளை தொட்டுக் காட்டி தம் ஆய்வினைத் திறம்படச் செய்துள்ளார் நூலாசிரியர்.

அந்த வகையில் சந்தனம் சத்தியானந்தன், அல் அஸுமத், வீ. கே. பெரியசாமி, சி. வி. லேலுப்பிள்ளை. சி. சிவசேகரம், இ.தம்பையா, சிவ. இராஜேந்திரன், றசினா, சண்முகநாதன், பன்னீர் செல்வம், வி. நித்தியாந்தன். கணபதி. இரா நித்தியானந்தன், சு. முரளிதரன், ஏ. செல்வராஜ் ஆகியோரின் கவி வரிகள் எடுத்தியம்பப்பட்டுள்ளன.

மூன்றாவது அத்தியாயத்தில் 'மலையகக் கவிதைகளும், மலையகத்தின் அண்மைக்கால போக்குகளும் என்ற தலைப்பில் ஆறு உப தலைப்புக்கள் வந்துள்ளன. நான்காவது அத்தியாயத்தில் 'மலையகக் கவிதைகளும் மலையக பிரச்சினைகளுக்கான தீர்வுகளும்' என்ற தலைப்பில் 10உப தலைப்புக்களில் முன்னோடிக் கவிஞர் சி. வி. வேலுப்பிள்ளை மற்றும் குறிஞ்சித் தென்னவனின் மலையக மக்களின் வலியைப் பிரதிபலிக்கும் முகமாக எழுதப்பட்ட கவிவரிகளோடு ஏனைய கவிஞர்களுடைய கவிதைகளை ஒப்பிட்டு வழங்கியுள்ள இந்நூல் மலையகத்தின் பெண்கள், சிறுவர்களுடைய வாழ்வை நோக்கி நம் கவனத்தை ஈர்த்துள்ளது.

கலாநிதி ஸாதியா பௌஸர் கண்டி. கெலிஓயாவை பிறப்பிடமாகக் கொண்டவர் தனது தமிழ்ச் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தையும் முதுகலைமாணிப்பட்டத்தையும் பேராதனை பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டவர். அப்பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியர் க.அருணாசலம், பேராசிரியர் துரை. மனோகரன் ஆகியோரின் வழிகாட்டலில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பேராசிரியர்களான வ. மகேஸ்வரன், றமீஸ் அப்துல்லா ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டவர். இவர் தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகவும் மொழித்துறைத் தலைவராக கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்பால் அலி

Comments