பட்ஜட்டுக்கான ஆதரவு அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட அரசியல் வியூகம் | தினகரன் வாரமஞ்சரி

பட்ஜட்டுக்கான ஆதரவு அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட அரசியல் வியூகம்

நான், பணத்துக்குச் சோரம்போனதாகக் கூறப்படும் விமர்சனங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சி கலந்துள்ளது, பணத்துக்காக இல்லை, மக்களின் அபிவிருத்திக்காகவே அரசிடம் சோரம்போயுள்ளதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்தவை.

கேள்வி: பட்ஜட்டுக்கு ஆதரவளித்த உங்களது செயற்பாடு, அரசியலில் எந்த இலட்சியத்தை அடையும் நோக்கிலுள்ளது?

பதில்: அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட பெரிய அரசியல் பின்புலம் இதிலுள்ளது. இது, இப்போது புரியாவிடினும் புத்தளம் மாவட்டம் இன்னும் சில மாதங்களில் அடையவுள்ள அபிவிருத்திகளைக் கண்டவுடன் பலரும் இதைப் புரிந்து கொள்வர். எந்த இலட்சியத்தை அடைய வேண்டுமானாலும், சில தியாகங்களை செய்துதான் தீரவேண்டும்.

கேள்வி: உங்களது புத்தளம் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு எந்த தியாகத்தை செய்திருக்கிறீர்கள்?

பதில்: சில கடப்பாடுகளை உடைத்து, கட்சியின் கட்டளையைப் பொருட்படுத்தாதுதானே, பட்ஜட்டுக்கு ஆதரவளித்தேன்.  இதனால், எவ்வளவு பழிச்சொல்லைச் சுமக்க நேரிடுகிறது. இதுவும் ஒருவகையில் தியாகம்தான்.  நல்ல நோக்கத்துக்கு செய்த பிரதிபலன், காலம் பிந்தித்தானே கிடைக்கிறது.

கேள்வி: பட்ஜட்டுக்கு ஆதரவளிக்காமல், இந்த அபிவிருத்திகளைச் செய்ய முடியாதா?

பதில்: அவ்வாறானால், இதற்கான நிதிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான் கிடைக்கும். எம்பிக்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகளை விடவும் அதிக வாய்ப்புக்கள் வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ள அரசாங்கத்தின் நல்லபிப்பிராயம் அவசியம். மேலும், வெல்லப்போகிறது என்று தெரிந்தும் பட்ஜட்டை எதிர்ப்பது தேவையற்ற வினைகளையே ஏற்படுத்தும். இதனால்தான், பட்ஜட்டை ஆதரித்து, அரசாங்கத்தை நெருங்கினேன். பெயரளவில் எதிர்க்கட்சி எம்பியாக இருப்பதை விட, அரசாங்கத்தில் இருப்பதுதான் எனக்கு ஆத்ம திருப்தி தருகிறது.

கேள்வி: கட்சியைப் பொருட்படுத்தாது பட்ஜட்டை ஆதரித்ததாகக் கூறுகிறீர்கள். ஒரு வகையில் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்குச் செய்த துரோகமாக இதைக் கருத முடியாதா?

பதில்: இல்லை,  நிச்சயமாக இல்லை. எனக்கு வாக்களித்த மக்களின் அனுமதியுடன்தான் பட்ஜட்டுக்கு ஆதரவளித்தேன். முப்பது வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் மாவட்டம் ஒரு எம்பியைப் பெற்றிருக்கிறது. எனவே, இப்பதவியை அலங்காரத்துக்காக வைத்திருக்க முடியாது. உள்ள காலங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தியில் புரட்சி செய்ய வேண்டும். கல்வியில் மேம்பாடு காண வேண்டும்.எம்பிக்களுக்கு வழங்கப்படும் அத்தனை சலுகைகளையும் புத்தளத்தின் கல்விக்காகவே, நான் செலவிடுகிறேன். பாராளுமன்றத்துக்கு செல்வது, தொலைபேசிச் செலவு, உணவு உள்ளிட்ட அனைத்துக்கும் வழங்கப்படும் நிதிகளை நான், கல்விக்காகவே செலவிடுகிறேன். எம்பிக்கான சலுகைகளை மக்களுக்ககாக ஒதுக்கிவிட்டு, சொந்த நிதியிலே எனது தேவைகளைப் பூர்த்தி செய்கிறேன். கட்சியின் உயர்பீடத்தில் நான் இருந்தபோதும், எந்த தீர்மானங்களிலும் என்னைக் கலந்தாலோசிப்பதும் இல்லை.  பொதுவாகச் சொன்னால், என்னை ஒரு பொருட்டாகவே கட்சி கருதுவதுமில்லை.  இந்நிலையில், அங்குள்ள சிலருக்காக நான் கட்டுப்பட வேண்டியதில்லையே!

கேள்வி: அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

பதில்:  தேர்தல் வந்ததும் அதைப்பற்றி தீர்மானிக்கலாம். வெற்றிக்காக உழைப்பது வேறு, மக்களின் வாழ்வை முன்னேற்ற உழைப்பது வேறு.  முந்தியது தேர்தல் காலத்தில்  செய்வது, பிந்தியது பதவிக்காலத்தில் செய்வது அவ்வளவுதான்

மக்களின்   எதிர்பார்ப்புக்களை  குழிதோண்டிப் புதைத்துவிட்டு கட்சியிலுள்ளவர்களைத் திருப்திப்படுத்த எனது மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை.

கேள்வி: ஒரு மாவட்டத்துக்காக, ஒரு சமூகத்தின் கட்சியையே பொருட்படுத்தாமல் செயற்படுகிறீர்கள். புத்தளம் மாவட்டத்துக்கு அவ்வளவு அவசரமாக நீங்கள் செய்யவுள்ளவை என்ன?

பதில்:  வீதிகளைப் புனரமைக்க வேண்டும், இளைஞர்களுக்கு தொழில் முயற்சிகளுக்கான வழிகளைக் காட்ட வேண்டும்,  இம்மாவட்டத்தில் காணிப்பிரச்சினைகள் நிறையவுள்ளன  இதற்கு தீர்வு காணல் அவசியம். அதிகளவான அகதிகளைத் தாங்கியுள்ள மண் புத்தளம். இங்கு, எதிர் கொள்ள நேரும் நெருக்கடிகளுக்கு நிச்சயம் அரசாங்கத்தின் உதவிகள் அவசியப்பட்டேயாகும். இதனால்தான், ஜனாதிபதி, பிரதமர், பொருளாதார அமைச்சர் உள்ளிட்ட அரசின் உயர்மட்டத்தினருடன் உறவுகளை வளர்த்து வருகிறேன்.

கேள்வி: முஸ்லிம் அரசியல் தலைமைகள் பற்றி மிகச் சுருக்கமாகக் கூற விரும்புவது என்ன?

பதில்:  காலக்கழிகைள் இருக்கிறதே, இதுதான் கொள்கைகளை வகுப்பதில் பிரதான பங்காற்றுகிறது. ஒரு காலத்தில் அடையாள அரசியல் சிறுபான்மை சமூகங்களுக்கு தேவைப்பட்டிருக்கலாம். இதை, அடைவதற்கு பயன்படுத்தப்பட்ட வழிகளில் சில, வெற்றியையும் சில தோல்வியையும் தந்துள்ளன.                எனவே, வெற்றி தந்த வழிகளைப் பயன்படுத்துவதுதான் இன்றைய காலத்துக்குப் பொருந்துமென நான் நினைக்கிறேன். இதுபற்றி இன்றைய சிறுபான்மை தலைமைகள் சிந்திப்பது அவசியம். பிரதேச அபிலாஷைகளும், பிராந்திய நலன்களும், சமூக உரிமைகளும் வெவ்வேறு தர்க்கங்களில் முரண்படுவதால் சிலவேளைகளில் சுயமாகச் சிந்தித்து தீர்மானம் எடுப்பதுதான் வாக்களித்த மக்களுக்குப் பிரயோசனமாக இருக்கும். இதைத்தான் செய்திருக்கிறேன்.

ஏ..எம்.தௌபீக்

Comments