எங்கள் சமூகம் கல்வியில் சிறக்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

எங்கள் சமூகம் கல்வியில் சிறக்க வேண்டும்

'இல்லை' பட்டியல்  

'மாணவர்கள் விளையாட மைதானம் இல்லை.  ஆசிரியர்கள் உணவு உட்கொள்ள இடமில்லை. பாதுகாப்பு வேலிகள் இல்லை. முறையான  குடிநீர் வசதியில்லை பாதுகாப்பு ஊழியர் இல்லை. விளையாட்டு திறமைகள்  இருந்தும் மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இல்லை. அதிபர்  காரியாலயத்திற்கான கட்டடம் இல்லை'

குறைபாடுகள் நிவர்த்திக்கப்படாத தூர பிரதேச பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகள் பல நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுவதுடன் குறைபாடுகளுடன் இயங்கும் பல பாடசாலைகளின் தொடர்பிலும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. உதாரணத்துக்கு நுவரெலியா மாவட்டம் ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்குட்பட்ட கந்தப்பளை, கோனகலை தோட்ட பாடசாலையான பாரதி தமிழ் வித்தியாலயத்தை எடுத்துக் கொள்ளலாம். 

மலையகத்தில் கோனகலை எனப் பெயர் கொண்ட பல தோட்டங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் கந்தப்பளை முகவரி கொண்ட கோனபிட்டிய பிரதேசத்தில் காணப்படும் கோனகலை தோட்டம்.  

இலங்கை சுதந்திரமடைந்த பின் கடந்து வந்த காலங்களில் பெருந்தோட்ட சமூகத்தின் பரிமாண வளர்ச்சியில் படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டு, அது 1977இன் பின்னர் கல்வி வளர்ச்சிக்கு பரவலாக வித்திட்டது.  

கால் வயிற்று கஞ்சி குடித்தாலும் எமது சந்ததியினர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று கோனகலை தோட்ட மக்கள் கருதுகின்றனர். கல்வியில் சிகரம் தொட எமது பிள்ளைகளுக்கு உற்சாகத்தை அளிப்போம், ஊக்குவிப்போம் என்ற நிலைப்பாட்டுக்கு இந்த சமூகம் தயாராகியுள்ளதைக் காணமுடிகிறது. ஆனால் கோனகலை தோட்ட தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் குறைப்பாடுகளுக்கு யார் முன்வந்து உதவப்போகிறார்கள் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. புாடசாலை சிறப்பாக இயங்கா விட்டால் ஒரு கல்விச் சமூகம் எப்படி உருவாகும்?   இது தொடர்பாக கோனகலை தோட்டத்திற்கு சென்று அங்கு நிலவும் நிலைமைகளை ஆராய்ந்தோம். இத்தோட்ட மக்களின் மூத்தவர்கள் மற்றும் ஏனையோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். 

சண்முகம் விஸ்வநாதன் (45)
பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர்: 

நு/ஹ/பாரதி தமிழ் வித்தியாலயம் கந்தப்பளை முகவரி கொண்ட கோனகலை தோட்டப்  பாடசாலையாகும். கடந்த 1959ஆம் ஆண்டில் கோனபிட்டிய அலக்கொல்ல தோட்டத்தில் ஆரம்ப பாடசாலையாக இயங்கி வந்த இப்பாடசாலை இப்போது கோனகலை தோட்டத்தில் இரண்டு மாடி கட்டடத்தில் தரம் ஒன்று முதல் தரம் 11வரை இயங்கி வருகின்றது. 

இப்பாடசாலையில் அலகொல்ல, கோனகலை, மெரிகோல்ட் போன்ற சுமார் 500மீட்டர் தொடக்கம் மூன்று கி.மீட்டர் தூரம் கொண்ட தோட்டங்களைச் சேர்ந்த 230மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 22ஆசிரியர்களில் 15ஆசிரியைகள், 07ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். இவர்கள் இராகலை,கந்தப்பளை, நானுஓயா, ஹைபொரஸ்ட் போன்ற தூரத்து பிரதேசங்களில் இருந்து போக்குவரத்து பிரச்சினைகளுக்கு பாரியளவில் முகம்கொடுக்க வேண்டியிருக்கிறது. 

இப்பாடசாலையில் காணப்படும் இரண்டு மாடி கட்டடத்தில் முதல்மாடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த அமரர் எஸ். அருள்சாமியினால் 2007.05.20அன்று திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டடத்தின் மேல்மாடி முன்னாள் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் அவர்களால் 2014.04.04அன்று திறந்து வைக்கப்பட்டது. 

சிறந்த பெறுபேறுகளை அடையக்கூடிய கல்வி கற்றல் நடவடிக்கையை முன்னெடுத்து செல்லக்கூடிய ஆசியர்களின் செயற்பாடுகள் அர்ப்பணிப்புடையதாக காணப்பட்டாலும் பாடசாலையில் ஆளணி பற்றாக்குறை காரணமாக அடிப்படைக் கல்வி முதல் உயர்தர கல்வி வரையில் திறம்பட முன்னெடுத்துச் செல்ல முடியாதுள்ளது.   11வகுப்புகளை நடத்தி செல்வதற்குரிய இடவசதி இப்பாடசாலையில் இல்லை. அதுவும் கொரோனா காலப்பகுதி என்பதால் சமூக இடைவெளியைப் பேணி வகுப்புகளை பிரித்து இட வசதிக்கமைய வகுப்புகளை நடத்துவதில் சிரமம் உள்ளது. இடவசதி பற்றாக்குறையினால் ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு அதிபர் தள்ளப்பட்டள்ளார்.  

பாடசாலைக்கு தினம் வருகை தரும் மாணவர்கள் தனித்தனியாக அமர்ந்து கற்க முடியாத நிலையில் தளபாட பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கென 150கதிரைகள் மற்றும் மேசைகள் அவசியம். பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் என்ற அடிப்படையில் பெற்றோர், நலன் விரும்பிகள் உதவியை நாடியதன் பலனாக அவர்களின் சொந்த செலவில் கதிரை மேசைகள் வழங்கப்பட்டுள்ளன. பற்றாக்குறை தொடர்கதையாகவே உள்ளது. 

மேலும் சாதாரண தரம் வரை உள்ள இப்பாடசாலையில் க.பொ.த.சாதாரண தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் இடவசதி குறைபாட்டை நிவர்த்தி செய்ய பெற்றோர் பணம் சேகரித்து சிறிய கட்டடம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

விஞ்ஞான, கணித சிறப்பு வகுப்புகளை கொண்டுசெல்ல ஆய்வு கூடங்கள் இல்லை, மனை பொருளியல் பாடங்களை கற்பிக்க இடம் இல்லை, அழகியல், சித்திரம், சங்கீதம், நடனம், விவசாயம் ஆகிய பாடங்களை கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. 

'இல்லை' பட்டியல்  

மாணவர்கள் விளையாட மைதானம் இல்லை, ஆசிரியர்கள் உணவு உட்கொள்ள இடமில்லை, பாதுகாப்பு வேலிகள் இல்லை, முறையான குடிநீர் வசதியில்லை, சமூகம் சார்ந்த குடிநீர் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது, பாதுகாப்பு ஊழியர் இல்லை, விளையாட்டு திறமைகள் இருந்தும் மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இல்லை. அதிபர் காரியாலயத்திற்கான கட்டடம் இல்லை. அலுவலக உபகரணங்கள் இல்லை, மல்டி மீடியா, கணினி, அச்சு நகல் இயந்திரம் இல்லை, இணைய வசதி இல்லை, ஆசிரியர் தங்குமிட கட்டடம் இல்லை,  இவ்வாறு இல்லை இல்லை என்ற வார்த்தை மிகுந்த இப்பாடசாலை காலநிலை மாற்றங்களின்போதும் பாதிக்கப்படுகிறது. கடும் காற்று வீசும்போது கூரை பறந்து விடுகிறது. திருத்த பணமில்லை, பாடசாலை கட்டட காணி உள்ளதால் மண்ணரிப்புக்கு உள்ளாகிறது. பாதுகாப்பு மதில் சுவர் ஒன்று அவசியம். 

இந்தப் பாடசாலை ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள போதும் கல்வி வலைய அதிகாரிகள் இப்பாடசாலை தோட்ட சமூக பாடசாலை என்பதால் ஓரம் கட்டி பார்க்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது என்கிறார் சண்முகம் விஸ்வநாதன். 

அதே நேரத்தில் உயர் வகுப்பு மாணவி ஒருவர் மற்றும்,தரம் ஐந்து மாணவியும் கூட தங்கள் பாடசாலை தொடர்பில் நிலவும் குறைபாடுகள் கண்ணீர்மல்க தெரிவித்தனர். 2020ஆண்டு க.பொ.த. சாதாரண தரத்தில் தோற்றிய மாணவர்களில் 15பேர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் படிப்படியாக கல்வி வளர்ச்சியடைந்து வரும் இப்பாடசாலை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டுமானால் நகர்வுக்கு செல்ல வழி சமைக்க 

ஹங்குராங்கெத்த வலயக் கல்வி அதிகாரிகள், மாவட்ட அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மனம் வைக்க வேண்டும். 

கோனகலை தோட்ட வீரய்யா திருச்செல்வம் (52) இப்பாடசாலைக்கு மேலும் ஒரு கட்டடம் அவசியம் என்றும் விளையாட்டு மைதானம், சுத்தமான குடிநீர் வசதி, ஆளணி விருத்தி, தளபாட வசதிகள், சுூழல் பாதுகாப்பு, தொழிநுட்ப அறிவுக்காக உபகரணங்கள் வேண்டும் என்று கூறியதோடு போக்குவரத்து சிக்கல் தீர்க்கப்படுமா? என கேள்வி எழுப்புகிறார். 

கோனகலை தோட்டத்தின் மூத்தவரான சின்னான் முனியாண்டி (91) கோனக்கலை தோட்டம் பெரியவில் வெளி வெளிச்சத்திற்கு வராத ஒரு தோட்டப்பகுதியாக காணப்பட்டது என்கிறார். 

வெள்ளைக்கார ஆட்சியில் அமைக்கப்பட்ட நூறு வருடங்கள் பழமையான லயத்தில்தான் இன்றும் வசிக்கின்றோம். கோப்பி மற்றும் தேயிலை தோட்டங்களில் பொழுது சாயும் வரை ஓயாது உழைத்து இன்று 91வயதாகிவிட்டது. 

எங்கள் காலம் வெள்ளைக்காரன் ஆட்சியோடு முடிந்து விட்டாலும் வெள்ளையர்கள் ஆட்சியில் அனுபவித்த சலுகைகளை இன்று தோட்டங்களை வழிநடத்தும் கம்பணி காரர்களிடம் எமது மக்கள் இழந்து வருவதை அவதானித்து வருகின்றேன். 

வெள்ளையர்கள் இந்திய தொழிலாளர்களை கண்டிப்புடன் நடத்தினாலும் சுகாதாரம், கல்வி, தொழில் விடயங்களில் கவனிக்கப்பட்டனர். அப்போது உரிமைகளை தட்டிக்கேட்க வழியில்லாத போதிலும் நிம்மதியான வாழ்ந்தோம். கால மாற்றம், கல்வி கற்று அறிவு வளர்ந்தால் மாத்திரமே நமது சமூகம் தலை நிமிர்ந்து வாழமுடியும். ஒரே மாதிரியான வாழ்க்கைச் சக்கத்தில் இருந்து விடுபட முடியும் என்ற ஆர்வம் அக்காலத்தில் எங்கள் மனதில் ஆணியடித்தது போல இருந்தது. 

கல்வியை இலக்காக கொண்டு இரவு பாடசாலை, திண்ணைக் கல்வி, கலை, கலாசார ஆர்வம், மேடை நாடகங்கள் என படிப்படியாக ஒரு வகையான கல்வியை தந்தோம்.

இன்று பாடசாலை கல்வி வரை எங்கள் சமூகம் வந்துள்ளது. எங்களை வழிநடத்திய மலையக மூத்த அரசியல் வாதிகள், இந்திய வம்சாவளி மக்களை கல்வியில் உயர்ச்சி பெற வைக்க வேண்டுமென பல நடவடிக்கைகளை எடுத்தனர்.  

உயர் படிப்பு வசதி இருந்தாலும் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் இல்லை, விளையாட மைதானம் இல்லை, கட்டட வசதிகள் இல்லை என பல குறைபாடுகள் காணப்படுகின்றன. எனக்கோ வயதாகிவிட்டது. இளைஞர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் கோனகலை தோட்ட பாடசாலையை அபிவிருத்தி செய்ய முடியும் என்பது இவரது அபிப்பிராயம்.   அதேநேரத்தில் கோனகலை தோட்டத் தொழிலாளர்கள் இன்று தேயிலை தொழிலில் வசதிகள், அபிவிருத்திகள் இல்லாததால் வருமானம் இல்லாமல் அவதிப்படுகின்றார்கள். இருந்தும் பிள்ளைகளை படிக்க வைக்கும் முயற்சிகள் இவர்களிடம் காணப்படுகிறது. பெற்றோர்படும் அவதியை பார்த்து பாடசாலைக் கல்வியை நிறுத்தி விடக்கூடாது. தொடர்ந்தும் படிக்க வேண்டும் என்பது இவரது வேண்டுகோள். 

கதிர்வேல் பெரமாயி (81):
கோனகலை

தோட்டத்திற்கு விராளிகலை தோட்டத்திலிருந்து குடிவந்த எங்கள் குடும்பம் சிறிது காலம் மட்டக்களப்பில் வாழ்ந்து பின் மீண்டும் இங்கேயே வந்துவிட்டோம். வெள்ளையர் காலத்தில் கோனகலை தோட்டம் செல்வாக்காக இருந்தது. தொழிலாளிகளாக இருந்த எமக்கு மரியாதையும் இருந்தது. 

அடுத்துவரும் பரம்பரை கல்வி அறிவுள்ள பரம்பரையாக மாற்றம் பெறவேண்டும் என்று நினைக்கிறேன். பிள்ளைகளைப் படிக்க வைக்கிறேன் பிள்ளைகளும் படிக்கின்றனர். விலைவாசி உயர்வு காரணமாக சத்தான உணவுகள் கிடைப்பதில்லை. இளம் சமூகத்தினர் மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது இல்லை: இது இந்த தோட்டத்தில் மாற்றம் பெறவேண்டும். கல்வியால் உயரும் சமூகம் குறைபாடுகளை நீக்கி அபிவிருத்தி அடையும். 

இங்கு இரண்டு மாடி கொண்ட பெரிய பாடசாலை இருந்தபோதிலும் பிள்ளைகள் கல்வி கற்க குறைப்பாடுகள் நிலவுவது உண்மை. அரசியல்வாதிகள் முன்வந்து பாடசாலை குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வார்களானால் கோனகலை தோட்ட மக்களின் கல்வியில் உயர்வோம் என்ற கனவு நனவாகும் என்கிறார் பெரமாயி. 

ஆறுமுகம் ரமேஸ்

 

Comments