சேவலின் விடியல் முழு சமூகத்துக்குமான விடியல் | தினகரன் வாரமஞ்சரி

சேவலின் விடியல் முழு சமூகத்துக்குமான விடியல்

கலை, கலாசார இலக்கிய வரலாறுகள் வளர்ந்த மண் எனப் புகழப்படும் மூதூர், சம்பூர் கிராமத்தின் செல்வாக்கு மிக்கதொரு கலைக் குடும்பத்தில் பிறந்தவர் கவிஞர் சுஜந்தினி யுவராஜா. ஓய்வுநிலை அதிபர் அமரர் செல்லக்குட்டி ஐயாவின் வாரிசாக தந்தையின் வழியில் கலை இலக்கியப் பணி செய்து வருகின்றார். மொழிப் புலமைத்துவமும் தேர்ச்சியும் பெற்று விளங்கும் இவர் ஆங்கில ஆசிரியராக இருந்து, தற்போது அதிபராக பதவி வகிக்கின்றார். பரந்துபட்ட ஆளுமைகள் பல இவரிடம் நிறைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

சம்பூரின் முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமையினைத் தனதாக்கிக் கொண்டுள்ள சுஜந்தினி யுவராஜாவின் முதலாவது கவிதை நூலாக சேவலின் விடியல் என்ற நூல் வெளிவந்திருக்கிறது. ஆன்மிகம், பெண்ணியம், வாழ்வியல், காதல் என இவரது தொடுகைகள் விரிந்து செல்கிறன. ஒரு கவிஞருக்கான குணாதிசயங்களை நிறைத்து வைத்திருக்கும் சுஜந்தினி முதலாவது கவிதை நூலிலேயே பிரபல்யம் பெற்றுத் திகழ்கின்றார். சேவலுக்கான விடியல் முழு சமுகத்துக்குமான விடியலாக நோக்கப்படுகிறது. மண் வாசனை, தமிழுணர்வு, விரிந்துபட்ட சிந்தனை, புதுமை வேட்கை என்பன இவரின் கவிதைகளை அழகுபடுத்துகின்றன.

இலக்கிய உலகில் தடம் பதித்து அதன் கவி வடிவங்களில் மிகப் பற்றுறுதியுடன் திகழும் இவர், கலை உலகின் ஏனைய வடிவங்களிலும் புகழ்பூத்த ஒருவராகத் திகழ்கின்றார்.  இவரது பணி மேலும் சிறப்புற்று விளங்க நிறையவே வாய்ப்புகள் தென்படுகின்றன. பல்வேறு வகையான எண்ணக்கருக்களை எடுத்துச் சொல்வதில் சுஜந்தினி யுவராஜாவின் கவிதைகள் முன்னிலை வகிக்கின்றன. நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகள் இந்நூலை அழகுபடுத்துவதுடன் நூலாசிரியரின் மன ஓட்டங்களையும் பிரதிபலிக்கின்றது. இறவாக் கவிஞர்களின் வரிசையில் தன்னையும் இணைத்துக்கொள்ள முனைந்து செயற்படுவார் என்பது அவரின் கவி வீச்சிலும் காத்திரமான எழுத்து நடையிலுமிருந்து தெளிவாகின்றது.

விடியலை நோக்கியதான சேவலின் விடியல் சேவலை மையமாகக் கொண்ட அழகிய அட்டைப் படத்துடன் 98பக்கங்களில் முதற் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. நூலுக்கான பின்னட்டைக் குறிப்பினை  சிவநேசன் பிரசாந்தன் தந்திருக்கின்றார்.

தனது தாய்க்கும், தந்தைக்கும் நூலைச் சமர்ப்பணம் செய்துள்ள நூலாசிரியை தனது ஆன்மிக நம்பிக்கையை 'அன்னையவள் எங்கள் காளியம்மா' (பக்கம் 01) என்ற கவிதையுடன் தொடங்குகிறார்.

பூர்வீகக்குடிவழி
பாரம்பரியத்தில் பூத்தவளே
தார்மீக வழியில்
எமைக் காப்பவளே
ஏர்பிடித்து ஏத்தாலையில்
நெல் விதைக்க
சீராய் விளைவை
தந்திடும் தாயே
தோணிக்கல்லில்
வந்தவளே
தொன்மையாய் காளியம்மா
ஏணியாய் எம்மூரை
உயர்த்திட்ட தேவியம்மா'

தான் வணங்கும் தெய்வத்தின் மீதுள்ள பற்றுதல், நம்பிக்கை, அன்புணர்வு மற்றும் வாஞ்சை என்பன இக்கவிதையில் விரிந்து செல்கிறது. காளியம்மாவின் கருணையும் பிரதிபலிக்கின்றது. ஆரம்பக் கவியே அமர்க்களமாய் அமைந்துள்ளது.

இன்றைய நாகரிக வாழ்க்கையின் மனித ஆக்கிரமிப்பாக மாறியிருப்பது அலைபேசி என்றால் அது மிகைக் கூற்றல்ல என்பது எவருக்கும் புரிந்ததொன்று. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களிலும் அலைபேசியின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது.

இருந்த இடத்திலிருந்தே மனிதனின் பல்வேறு தேவைகளையும் நிறைவு செய்துகொள்ளும் பணியில் அலைபேசியின் பங்களிப்பு இன்றியமையாததே. வாழ்வியலோடு ஒன்றித்துவிட்ட அலைபேசியில் நன்மையைப் போல் தீமையும் கலந்தே இருக்கிறது

தேவைக்கு மட்டும் பாவித்து அளவோடு செயற்படும் போது அதன் பிரதிபலன் நன்மையையும் சந்தோசத்தையும் தருவதாய் அமையும். அளவுக்கு மிஞ்சிய பாவனை செய்யின் அனலாய் மாறி அல்லல்பட வைக்கும். செலவின் பெருக்கத்திற்கும் வழிவகுக்கும். அலைபேசி (பக்கம் 04) அழகான உபதேசக் கவிதை.

உலகம் எவ்வளவுதான் சந்தோசமாக ஆயிரம் சுகங்களை அள்ளித் தந்தாலும் விடியாத இரவுகளாகவே பலருடைய வாழ்க்கை இன்னும் நீண்டு செல்கிறது.

சொந்தமாக உழைத்து சுகமாக வாழ ஆசைப்படும் மனிதன் அதற்கான வாய்ப்பு வசதிகள் அரிதாவதால் அர்த்தமிழந்த கனவுகளுக்குள் அல்லலுருகிறான்.

விந்தையான உலகம்
விடியாத இரவுகள்
சிந்தனையில் மனிதர்கள்
சிரிப்பதற்கு நேரமில்லை
சொந்தமாய் உழைத்து வாழ
முதலாய் எதுவுமில்லை
நொந்துபோன நெஞ்சுடன்
களையிழந்து மனிதன்

காலச் சுவடுகளில் மனித உழைப்புகள் தடம் பதிக்கிறது. உழைப்பின்றி உயர்வில்லை. உயிர்வின்றி வாழ்வில்லை. எவ்வளவுதான் உழைத்தாலும் ஓடாகத் தேய்ந்தாலும் நிம்மதி என்பது கிடைப்பதில்லை. வாழ்க்கையின் தத்துவங்களில் இந்த உழைப்பானது முக்கிய பாத்திரமாய் அமைகிறது.

நிலமிருந்தும் வாழும் தளமிருந்தும், வளமிருந்தும் வாழும் வழியில் குறுக்கிடும் தடைக் கற்களில் பதியும் பாதங்களின் உறுதிப்பாடு வெற்றிப்படியில் இட்டுச் செல்லும் என்ற கருப்பொருளில் உழைப்பின் சுவடுகள் (பக்கம் 15) என்ற இக்கவிதை அமைந்துள்ளது.

பணம், பதவி, பொருள், பட்டம், ஆடம்பரம் போன்ற இன்னும் பலவற்றை அடைவதில் துளியளவும் ஆசைப்படாத இவரின் கனவுகள், முன்மாதிரியும் விசித்திரமும் மிக்கவை. அன்பான, அமைதியான, சந்தோசமான வாழ்க்கையினை அவர் விரும்புகிறார். அதனால்தான் இவ்வாறான கனவுகள் அவரில் தோற்றம் பெறுகிறது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் தனது காதல் மனைவி மும்தாஜுக்காக சாஜகானால் கட்டப்பட்டது. இது உலகம் முழுவதும் அறியப்பட்டதும் கூட. காதலர்கள் குறிப்பாக இளந்தலைமுறையினர் மத்தியில் இதன் மதிப்பும் முக்கியத்துவமும் இருந்துகொண்டே இருக்கும். காதல் உலகத்தில் இது ஒரு பேசுபொருள். நிலையான அழகுடன் நிமிர்ந்த மாளிகை இதன் சிறப்பியல்புகள் பற்றியும் கவிஞர் சுஜந்தினி யுவராஜா தனது தாஜ்மகால்|| (பக்கம் 66) என்ற கவிதையில் குறிப்பிடுகின்றார்.

காதலின் சின்னமாய்
மின்னிடும் பளிங்கு மண்டபம்
அதிசயங்களில் ஒன்றாய்
வலம் வரும் அற்புதம்
பார்ப்போரைகவர்ந்திடும்
ஆக்ராவின் பொக்கிசம்
சாஜகான் அன்பில்
விளைந்த நந்தவனம்
மும்தாஜ் அழகியின்
நிரந்தர உறைவிடம்
காதலனை விட்டுப்பிரிந்த
தேவதையின் ஆலயம்
தாஜ்மஹால்!

கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்,
கிண்ணியா - 07

Comments