அன்னை தெரேசா | தினகரன் வாரமஞ்சரி

அன்னை தெரேசா

அன்பும் நேசமும் பாசமும் கருணையும் தான் என இத்தனைக்கும் ஒட்டுமொத்த  இலக்கணமாக வாழ்ந்து கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் அன்னை தெரேசா. இவரது வாழ்க்கை உலகில் பலபேருக்கு முன்னுதாரணமாகும். அநாதைகளுக்கும்  ஆதரவற்றவர்களுக்கும் தாயாக இருந்து தனது வாழ்வை மகா உன்னதமாக மாற்றியவர். இவர் 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் திகதி யூகோஸ்லாவியாவில் பிறந்தார்.  அப்போது அவருக்கு   இட்ட பெயர் அக்கினீஸ். பிற்காலத்தில் குழந்தைகளின் அன்பின்  முகவரியாக விளங்குவார் என்பதை அன்று எவரும் அறிந்திருக்கவில்லை.  இவர் ரோமன் கத்தோலிக்க ஆலயத்தில் கன்னியாஸ்திரியாக சகோதரி தெரேசா என    தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

1929இல்  இவர் தனது 19ஆவது வயதில் இந்தியாவின் கல்கத்தாவிற்கு புறப்பட்டார். சுமார் 68ஆண்டுகள் இந்திய தேசத்துக்கு சேவையாற்றினார்.   17ஆண்டுகளாக இவர் கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இக்காலப்பகுதியில் கல்கத்தாவில் புறநகர் பகுதிகளில் வாழ்ந்துவந்த  ஆதரவற்ற குழந்தைகளை பார்த்து மனம்நெகிழ்ந்தார். பின்   அக்குழந்தைகளுக்கு  சேவை செய்வதை தனது வாழ்நாள் பணியாக கொண்டு செயற்பட்டார்.

1950ஆம் ஆண்டு  மிசனரி ஆப் சாரிட்டி என்ற அமைப்பினை உருவாக்கி ஆதரவற்ற  மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். 1952இல் நிர்மல் றீடி என்ற இல்லத்தை  திறந்தார்.     இதுவே பல ஆதரவற்றோரை பராமரிக்கும் கருணை இல்லமாக தொழிற்பட்டது. 48,000ஆதரவற்ற மக்கள் இவ்இல்லத்தில் வைத்து காப்பாற்றப்பட்டனர்.

சகமனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு அடைக்கலம் தந்தவர் ஆவார். இவரது வாழ்வில் ஒரு சந்தர்ப்பம் இவர் ஒருமுறை ஒரு செல்வந்தரிடம் தனது  சேவைக்காக உதவி கேட்க சென்றிருந்தார்.  அப்போது அந்த செல்வந்தர் அன்னை  தெரேசாவின் கைகளில் காறி உமிழ்ந்தாராம்.கைக்குள் விழுந்த எச்சிலை கைக்குள்  மூடிக்கொண்டு எனக்கு இந்த எச்சில்  போதும் என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். இதனைக் கண்டு மனம் கலங்கிய  செல்வந்தர் அன்னையின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டாராம்.

இவ்வாறு பிற உயிர்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த மிகச்சிறந்த  பெண்மணியாவார். 1933இல் அன்னை இல்லத்தையும் 1957இல் தொழுநோயாளிகளுக்கான  ஒரு இல்லத்தையும் உருவாக்கினார்.  பலரும் வெறுத்து ஒதுக்கிய தொழுநோயாளர்களுக்கு அன்பையும் ஆதரவையும் இவர் வழங்கினார்.

12கன்னியாஸ்திரிகளோடு ஆரம்பித்த இவரது   'மிஷனரி ஆப் சாரிட்டி' அமைப்பு  500க்கு மேற்பட்ட நிலையங்கள் 131நாடுகளில் இயங்கி வருகிறது.   இவரது சேவைக்கு பாராட்டுக்களும் பட்டங்களும் விருதுகளும் தேடிவந்தன. 1979இல் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு கிடைத்தது.  1980இல் இந்தியாவின் பாரத ரத்னா விருது கிடைத்தது. 1985இல் அமெரிக்க அதிபரின் தங்கப்பதக்கம் என இவரது சேவைக்கு பரிசாக கிடைத்தது.

அன்பினால் இவ்வுலகத்தை அரவணைத்த இவர் 1997இல் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

எஸ். துஷாந்த்,
பசறை.

Comments