கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு-1   

முதலாவது கசப்பில் தந்தே ஆகவேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டில் வழங்குகின்றேன்.  

நாட்டில் ஒமிக்ரோன் கொவிட் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பயணக்கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டமையால் பண்டிகை காலங்களில் கொவிட் தொற்று மீண்டும் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

நாட்டில் கொவிட் தொற்று அதிக ஆபத்தை விளைவிக்கவும், அழிவை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக சங்கத் தலைவர் உபுல் ரோஹணவின் அறிக்கை பேசுகிறது.  

நேற்றையக் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்பேயே அதிகளவு தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டு விட்டதாகவும் ஊடகங்கள் மற்றும் உத்தியோகபூர்வ புள்ளி விவரங்களை விடவும் அதிகளவான தொற்றாளர்களின் எண்ணிக்கை உள்ளது என்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் உறுதிபடப் பேசுகிறது.  

எதிர்வரும் 2022புத்தாண்டைக் குதூகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டிருப்பவர்களுக்குப் பெரிய அபாய எச்சரிக்கை இது!  

அம்புட்டுத்தேன் கசப்பாக என்னால் வழங்க முடியும்.  

கசப்பு-2  

என்னைப் பொறுத்தவரை என் சொந்த வாழ்க்கையில் மலையகப் பந்த பாசம் அதிகமதிகம். அதை அறிந்திருப்போர் மிகச்சிலரே!  

போகட்டும் - அந்த அருமையான மலையகத்தின் மங்கையருக்கு இப்பொழுது என்னதான் ‘மனப்பிறழ்வோ’ புரியவில்லை.  

அதுவும் ‘செல்போன்’ என்கிற ஒரு ‘மாயமான்’ அவர்களில் பெரும்பாலானோரை ஆட்கொண்டுவிட்ட பிறகு  

அவர்களில் பலரும் கல்வித்துறையில் ஈடுபாடுகாட்டி நல்ல நல்ல பாடசாலைகளின் மாணவியராய் உயர்வகுப்புகளில் உலா வருகையில் ஏன் இப்படிப் புத்தி பேதலித்துப் போகிறது...?  

கடந்த 09ல் பேராதனை கறுப்புப் பாலம் அருகில் மகாவலி ஆற்றில் குதித்துக் காணாமல் போனார் ஒருமாணவி.

அவருக்கு ஒரு காதலன். அந்தப் பயலைப் பிடித்து விசாரித்ததில் கறுப்புப் பாலத்தில் சந்திப்பு நடந்த போது தன் தொலைபேசியைப் பிடுங்கிப் பரிசோதித்ததாகவும், தான் வேறொரு பெண்ணுக்கு அனுப்பிய குறுஞ் செய்திகளைப் பார்த்து விட்டு ஆத்திரமடைந்து ஆற்றில் குதித்து விட்டதாகவும் அந்தச் சம்பவத்தை யாருக்கும் சொல்லாமல் மறைத்ததாகவும் வாக்குமூலம்.  

மற்றொன்று கலஹா பிரதேசத்தில் 19வயது மாணவியின் முட்டாள்தனம்.  

இவர் தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் இரகசியமாக செல்போன் ஒன்றை பயன்படுத்தியுள்ள நிலையில், அதில் வந்த குறுஞ்செய்திகளைக் கண்டு மாணவியின் சகோதரன் எச்சரித்ததாகவும் இதனையடுத்து மாணவி வீட்டின் குளியலறையில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. செல்போன் மலையக யுவதிகளுக்கு சாபக்கேடு. எமதர்மனின் மாயத்தோற்றம். 

 இனிப்பு

கடந்த வாரத்தில் சிங்கள நாடகத்துறைச் செழிப்பையும் தமிழ் நாடக அஸ்தமனத்தையும் கசப்பாகத் தந்திருந்தேன்.  

இன்றும் நாடகம் சம்பந்தமான ஒரு வழங்கல். ஆனால் இது, வானொலி நாடகங்கள். இனிப்புச் சுவையுடையது.  

65ஆண்டுகளுக்கு முன் வானொலி நாடகங்கள் கேட்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம். ஒரு புறம் தமிழ் நாடக அரங்கில் ‘சானா’ சண்முகநாதன் தயாரிப்பில் நாடகங்கள். மறுபுறம், கலாநிதி எம்.எம். உவைஸ், ஏ.எம். காமில் மரைக்கார் ஏற்பாட்டில் சில கலைஞர்களின் ஒத்தாசையோடு முஸ்லிம் நாடகங்கள்.  

இங்கே முஸ்லிம் நிகழ்ச்சி நாடகங்கள் பற்றியே சில பதிவுகள்.  

1953 – 1955காலப்பகுதியில் உரைச் சித்திரங்களை அதிகம் ஒலிபரப்பிய கலாநிதி உவைஸ், அதில் நாடகக் காட்சிகளையும் சேர்த்தார்.  

1956ல் காமில் மரைக்கார் நியமனம் பெற்றபொழுது நாடகங்களை வேண்டா வெறுப்பாகவே வெள்ளிக் கிழமைகளில் ஒலிபரப்பத் தொடங்கினார்.  

‘விலக்கப்பட்டது’ ‘அனுமதிக்கப்பட்டது’ என்ற வகையில் ‘ஹராம்’ ‘ஹலால்’ பார்த்தவர்களுக்கு அவர் அடிக்கடி முகம் கொடுக்க வேண்டி இருந்தது. இதில் நாடகம் மட்டுமன்று இசையும் உள்ளடங்கும்.  

எவ்வாறாயினும், கலை – இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு அதிக இடம் கொடுத்தாக வேண்டும் என்ற உலகளாவிய வானொலி ஒலிபரப்பு நியதிகளின் படி (சட்டப்படி) அவர் நாடகம் ஒலிபரப்ப வேண்டியதாயிற்று.  

அவருக்குப்பின் வந்த மெளலவி இஸட் எல். எம். முகம்மது தர்மசங்கடத்திற்குள்ளானார்.  

ஆனால் அமைச்சர் கலாநிதி பதியுத்தீனின் கர்ஜனை, கலாநிதி ஸஹாப்தீன் கண்டிப்பு, மதக் கோட்பாடுகளுக்கு முரணாகாத முறையில் குத்தூஸின் தயாரிப்பு, பிரதிகள் இல்லா நிலையில் தானே எழுதியும், ஆசிரியர்கள், கலைஞர்களைக் கொண்டு எழுத வைத்தும், தட்டெழுத்துச் செய்தும், ஒத்திகைகள் பார்த்தும் சேவை புரிந்த மக்கீன் ஆகிய நால்வராலும் ‘ஹராம்’ என்ற வார்த்தை ஓரம் கட்டப்பட்டது!  

ஆனாலும் என்ன, குத்தூஸ், அப்துல் கபூர் (வியேஜி) அஷ்றப் கான் ஆகியோருக்குப் பிறகு முஸ்லிம் நாடகங்கள் மூச்சு இழந்தன. ஏற்கெனவே ஒலிப்பதிவு செய்யப்பட்டு தட்டாக இருந்தவை வானொலி நிலைய உள்வெளியில் வைத்து உடைத் தெறியப்பட்டன. அப்படியும் சில தப்பின, சம்பந்தப்பட்டவர்கள் அங்கேயே சேவையாற்றியதால்.  

உண்மையில் அவர்களது உள் மனங்களில் இருந்தவை “நாடகம் ஹராம்! ஒலிபரப்புக்கு அனுமதிக்கவே கூடாது!”   

சில மாதங்களுக்கு முன் இதை மாற்றித் தீர முன் குப்பை கொட்டிய மக்கீன் என்ற மானா மக்கீனும் நாடகக் கலைஞர், கவிஞர் எம்.எஸ். அப்துல் லத்தீஃபும் பணிப்பாளரை நேர்காணல் செய்து ஒரு கோரிக்கை வைத்தோம்.  

“ஒரு நாடக எழுத்துப் போட்டிக்கு மூன்று பரிசுகள் அளிக்க 50,000/= (ஐம்பதாயிரம்) வழங்குகிறோம். நாடகப் பிரதிகளை. நாங்களே தட்டச்சுச் செய்தும் தருகிறோம். மூத்த கலைஞர்களை எங்கள் செலவில் அழைத்தும் வருகிறோம். அனுமதி வழங்குங்கள்!” என்றோம். 

இதற்கிடையில் ஓர் அதிசயம், அதைப் பேரதிசயம் என்றே சொல்ல வேண்டும். 

கிழமைதோறும் முன்பு போல் அதே வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் நிகழ்ச்சியில் நாடகம் ஒலிபரப்பாகிறது.  

அபிமானிகளும் அறிகிற போது இன்ப அதிர்ச்சியே!  

இது எப்படி நடக்கிறது என்றால், “சுவடுகள்” என்று வரலாற்று நிகழ்வுகளை பத்துப் பதினைந்து நிமிடங்களில் அருமை அருமையாக “நாடக உருவில்” ஆம்! நாடகமாகவே கலைஞர்களைக் கொண்டு ஒரு பாணந்துறைப் பகுதி ஆசிரியர் ஷாக்கீர் முகம்மது என்பார் எழுதி, ஃபாத்திமா றீஸா ஹுசைன் என்ற பகுதி நேர அறிவிப்பாளரிடம் வழங்க அந்தக் ‘குடத்திலிட்ட விளக்கு’ (ரசிகர்களுக்கு அறிமுகமில்லாதவர்) அற்புதமாகத் தயாரித்து வழங்குகிறார்!  

அவருக்காகப் பல கலைஞர்கள் இலவசமாக நடித்துக் கொடுக்கிறார்கள். முக்கியமாக கலைஞர் எம்.எஸ். அப்துல் லத்தீப் பங்களிப்பும் சேர்கிறது.  

ஆக – முஸ்லிம் நிகழ்ச்சியில் நாடகம் இல்லாக் குறையை, அறிந்தோ அறியாமலோ (அதாவது ‘ஹராம், பேசுவோர்’ அறியாமல்) ஓர் ஆண் எழுத்தாளரும் ஒரு பெண் தயாரிப்பாளரும் தீர்த்து வருகிறார்கள்.  

வானொலி நாடக அபிமானிகள் இழந்து விட்ட ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள்.  

Comments