நம்பித்தான் ஆகவேண்டும்!; இவ்வாறாக அபாயகரமான வீடுகளிலும் மக்கள் வாழ்கிறார்கள், தெரியுமா? | தினகரன் வாரமஞ்சரி

நம்பித்தான் ஆகவேண்டும்!; இவ்வாறாக அபாயகரமான வீடுகளிலும் மக்கள் வாழ்கிறார்கள், தெரியுமா?

கண்டுகொள்ளாத நிர்வாகம்

சப்ளி தோட்டத்தில் மூன்று தொழிலாளர் தொடர் குடியிருப்புகள் மண்சரிவு அபாயத்திற்குள்ளாகியுள்ளன. இதனால் இங்கு வாழும் சுமார் 40குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  100வருடங்கள் கடந்த இக்குடியிருப்புகள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் கண்டி இயற்கை அனர்த்த முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் இவ்விடத்திற்கு வந்து தொடர்ச்சியாக பல பரிசோதனைகளை மேற்கொண்டு ஆய்வின் முடிவில் இந்த இடம் வசிப்பதற்கு பொருத்தமானதாக இல்லை என்று  அறிவித்ததோடு  உடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவித்திருந்தனர். எனினும் மாற்றிடம் தரப்படாத நிலையில் தொடர்ந்தும் அதேகுடியிருப்புகளில் வாழ்கின்றனர்.  குடியிருப்புகளின் அத்திவாரம் தாழிறங்கியுள்ளது.  முழு கட்டடமும் சில அடிதூரம் அகன்றும் காணப்படுகிறது. மழைக்காலத்தில் வீட்டிற்குள் நீர் ஊற்றெடுக்கிறது.   இங்கு வசிக்கும் குடும்பங்களில் 8குடும்பங்கள் தனது சொந்த பணத்தில் காணியும்  வீடும் வாங்கிக் கொண்டு சென்று விட்டனர்.  தோட்ட நிர்வாகமோ, அரசோ இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த நேரத்திலும் மண்சரிவுக்கு உள்ளாகக் கூடும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு கவலையும் கண்ணீருமாக உயிரைக் கையில்பிடித்துக் கொண்டு வாழ்கின்றனர். அதிக மழைக்காலத்தில் உற்றார், உறவினர் வீடுகளில் தஞ்சமடைகின்றனர்.

வயதுக்கு வந்த மற்றும் படிக்கின்ற பிள்ளைகளை வைத்துக்கொண்டு எத்தனை நாள் மற்றவர்களுடைய வீட்டில் தங்குவது?   பூமியில் மணல் அதிகம் கலந்திருப்பதால்  மரங்கள் அடியோடு சாய்ந்து வீழ்கின்றன. பல சந்தர்ப்பங்களில் கூரையின் மீதும் விழுந்துள்ளன. கம்பளை பிரதேச செயலகம் கிராமசேவகர் அரசில் பிரமுகர் தோட்ட நிர்வாகம் என பலதரப்புகளுக்கும் கூறி பயனில்லை.

ஆர். நவராஜா
படங்கள்: தெல்தோட்டை தினகரன் நிருபர்

 

Comments