பெருந்தோட்டங்களில் குளவிக்கொட்டு: குளவிக் கூடுகளை அகற்றுவதே ஒரே தீர்வு | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்டங்களில் குளவிக்கொட்டு: குளவிக் கூடுகளை அகற்றுவதே ஒரே தீர்வு

பெருந்தோட்டங்கள்  உரியமுறையில் பராமரிக்கப்படாமையால் அவை காடுகளாக  மாறி வருகின்றன. மலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அட்டைக்கடி,  குளவிக்கொட்டு, விஷப்பூச்சிகளின் கடிகளுக்கும் சிறுத்தை, காட்டுப்பன்றி,  பாம்பு போன்ற உயிரினங்களின் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஒரு  நாள் சம்பளத்திற்காக  உழைக்க வேண்டியிருக்கிறது. தொழிலாளர்களின் வேலைநாள்  குறைக்கப்படுவதால் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க  வேண்டியிருக்கிறது.

மலையக மக்களின் பிரச்சினைகளில் மிக முக்கியமாக பேசப்படும்  விடயமாக குளவி கொட்டு மாறியிருக்கிறது. இது மலையகத்தின் சில பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாட பிரச்சினையாகவும் மாறியுள்ளது. அடிப்படை வசதியின்மை, சம்பளப் பிரச்சினை, கல்வி, தொழில் ரீதியான உரிமைகள் மீறப்படுகின்றமை போன்றவை காலங்காலமாக பேசப்பட்டு வரும் நிலையில், குளவி கொட்டு பிரச்சினையும் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக பேசுபொருளாக மாறிவிட்டது.

டிக்கோயா  பகுதி தோட்டமொன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த 9பெண்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர். இதில் ஒரு பெண் உயிரிழந்தார்.  கொட்டகலை, பொரஸ்கிறீக் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு 10தொழிலாளர்கள் இலக்காகினர். இதில் ஒரு பெண் தொழிலாளியின் காதில் இருந்து பல குளவிகள் வெளியே எடுக்கப்பட்டன. ஹப்புத்தளைப் பகுதியில் தோட்டத் தொழிலில் ஈடுபட்டிருந்த 27பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்.

இத்தகைய செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி வெளியிடப்பட்டாலும் இது தொடர்பான நிரந்தர த்தீர்வு எதுவும் இதுவரையிலும் எட்டப்படவில்லை.   இந்தக் குளவிப்  பிரச்சினையை தோட்ட நிர்வாகங்களோ, தொழிலாளர்களைச் சார்ந்துள்ள தொழிற்சங்கங்களோ  கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களைக் கொண்டு  எப்படியாவது வேலையை வாங்கி இலாபத்தை பெற்றுக்கொள்வதே அவர்களின் நோக்கமாக  இருக்கிறதே தவிர குளவிக் கூடுகளை ஒழிப்பதற்கான எந்த நடவடிக்கையும்  எடுத்ததாகத் தெரியவில்லை.

இந்நாட்டில் தொழில் செய்யும் அனைவருக்கும் தொழில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதன்படி தொழில் நேர விபத்துகளுக்கு அந்தந்த நிறுவனங்கள் ஏற்பாடுகள் செய்துள்ளன. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழில் நேர விபத்துக்களுக்கு இக்கம்பெனிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருக்கின்றனவா என்ற கேள்வி எழுகின்றது.

அன்றாட உழைப்பில் வாழ்ந்துவரும் இவர்களுக்கு குளவி கொட்டினால் இரண்டொரு நாள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாலும் இவர்களுக்கு எந்த வகையிலான நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பளம் தொடர்பாக இருக்கின்ற கூட்டு ஒப்பந்தத்தில் வேலை நேரங்களில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் நட்ட ஈட்டு கட்டளைச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என்று ஏற்பாடு இருக்கின்றது. ஆனால் இதுவரையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி விடுமுறையில் இருந்தவர்களுக்கு எந்த நட்ட ஈடும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. 

மேலும் குளவிக் கொட்டுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வசதிகளில் குறைபாடு நிலவுவதாகவும் கூறப்படுகின்றது. பெருந்தோட்டங்களில் பணி புரியும் வேளையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகும் நேரத்தில் தோட்ட நிர்வாகத்தினால் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதால் சிகிச்சைகள் விரைவாக வழங்கப்படுகின்றன. ஆனால் வீடுகளிலோ அல்லது தனிப்பட்ட ஏனைய சூழ்நிலைகளிலோ குளவிக் கொட்டுக்கு உள்ளாகுபவர்களை விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது பெரும்பாலும் சாத்தியமாவதில்லை.  அவ்வாறான சந்தர்ப்பத்தில் விரைவாக சிகிச்சை வழங்குவது வைத்தியசாலை அதிகாரிகளுக்கு கடினமான விடயமாகவும் உள்ளது. பெரும்பாலும் தனி நபர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு தாமதமாக கொண்டு செல்லப்படுவதால் மரணங்கள் சம்பவிக்கின்றன. 

இப்படி குளவிக் கொட்டுக்கு உள்ளாகுபவர்கள் அதிர்ச்சியடைவார்களானால் அவர்களுக்கான உளரீதியான பாதிப்பு அதிகரித்து உயர்குருதி அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன. குளவி கொட்டு சில உபாதைகளின் வேகம் அதிகரிக்க உதவுகின்றது. சில நேரங்களில் ஒவ்வாமையும் ஏற்படும். இதன்போது சிலர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதை விடுத்து கை மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இது ஆபத்தானது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுதல் அவசியமாகும். 

இவ்வாறான நிலையில் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை உரிய தரப்பினர் கவனம் செலுத்தி பெற்றுத்தருமாறு பெருந்தோட்ட சமூகம் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து வருகிறது. இ.தொ.கா பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், குளவிக்கூடுகளை பாதுகாப்பாக அகற்றுவது தொடர்பாக சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் எஸ். எம். சந்திரசேனவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஒவ்வொரு தோட்டத்திற்கும் 5இளைஞர்களை தெரிவு செய்து குளவிக் கூடுகளை அகற்றும் பணிக்கு தயார்படுத்துவதாக குறிப்பிட்டார். 

இந்நிலையில் 2021ஏப்ரல் மாதம் குளவி கொட்டிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான பாதுகாப்பு அங்கிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. இது பாதுகாப்பான அம்சம் என்றாலும் குளவிக் கூடுகள் அகற்றப்பட்டமையால் பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்படுகின்ற சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் எலிபடை தமிழ்  வித்தியாலய  மாணவர்கள் 14பேர் அண்மையில் குளவி கொட்டுக்கு  இலக்காகிய நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு  சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியதாக வைத்தியசாலை  வட்டாரங்கள் தெரிவித்தன.    மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போது, மரத்தில்  இருந்த  குளவிக்கூடு  கலைந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர். பாடசாலைக்கு செல்லும் வழியில் குளவிக் கொட்டுக்கு உள்ளாக்கிய சம்பவம் ஓர் உதாரணம்.

இவ்வாறான நிலையில் பெருந்தோட்டத் துறை அதிகாரிகளும், தோட்ட நிர்வாகமும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து குளவிக் கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதன் மூலமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியும். வெறுமனே வன திணைக்களத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் இணைந்து செயலாற்றி இப்பிரச்சினைக்கு முடிவு காணலாம். 

ந. திஸ்னாகுமாரி
நான்காம் வருடம் 
ஊடகக் கற்கைகள் துறை, 
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

Comments