பூக்காத பூந்தோட்டத்தின் மீது வெளிச்சமிட்ட வெளியீட்டு விழா | தினகரன் வாரமஞ்சரி

பூக்காத பூந்தோட்டத்தின் மீது வெளிச்சமிட்ட வெளியீட்டு விழா

நீண்ட காலத்திற்குப் பிறகுகடந்த பௌர்ணமி தினம் (18.12.2021)  மயங்கும் அந்தி வேளை (5:30அளவில்)   தமிழ்ப் புத்தகமொன்றின் வெளியீட்டு விழா, தலைநகர் கொழும்பு கொட்டாஞ்சேவையிலுள்ள நிவ் வைஷ்ணவி விஹார் மண்டபத்தில், வெகுசிறப்பாக மண்டபம் முழுக்க ரசிகர்களும் - கலைஞர்களும் கூடியிருக்க நடைபெற்றதில், வருகை தந்தோர் வற்றாத மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இலங்கைத் தமிழ் கலைஞர் சங்கமும், சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்டேஜ் அமைப்பும் ஒன்றிணைந்து நடத்திய பிரஸ்தாப வெளியீட்டு விழாவில், கலைமாமணி பொன். பத்மநாதன் எழுதிய - பத்து சிறுகதைகளை உள்ளடக்கிய 'பூக்கள் பூக்காத பூந்தோட்டம்' என்ற கதைநூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து வழமையான நிகழ்ச்சிகளுடன் (நூல் அறிமுக உரை, நயவுரை என்பன) கலகலப்பாக நடந்த இவ்வெளியீட்டு விழாவுக்கு, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தலைமை தாங்கினார்.யார் இந்த கலைமாமணி பொன். பத்மநாதன்?

பாடசாலையில் படிப்பிக்கும் ஓர் ஆசிரியர் எழுத்தாளராக – பேச்சாளராக வரமுடியும். ஒரு தள்ளுவண்டி செலுத்தும் ஒரு தொழிலாளி மூடை தூக்க முடியும்,  பொதி சுமக்க முடியும். ஒரு வர்த்தகர் - அதுவும் நகை கடை வர்த்தகத்தில் தங்க ஆபரணங்களுடன் புழங்கும் ஒருவர், ஓர் எழுத்தாளனாக வரமுடியுமா? அதுவும் ஒரு சிறுகதை எழுத்தாளனாக...

'முடியும்' என நிரூபித்து, நம் மத்தியில் நெஞ்சை நிமிர்த்தி உலா வருகிறார் ஒருவர். அவர்தான்... சமாதான நீதவானும் - பரோபகாரியுமான கலைமாமணி பொன். பத்மநாதன். இவர் - கடந்த மூன்று தசாப்தகாலமாக தலைநகர் கொழும்பில் இயல் இசை நாடகம் என அலைந்து, சமயம் - சமூகம் - அரசியல் - எனப் பற்பல துறைகளில் தொட்டது துலங்கும் வண்ணம் துடிப்புடன் செயற்பட்டு வரும் சாதனையாளர். 'அட... நம்ம பத்மநாதன் அண்ணனா...? என்போருக்கு, 'சாட்சாத்... அவரேதான்' என்பதுவே பதிலாகும்.

பூக்கள் பூத்தாலே அது பூந்தோட்டமாகும்... இங்கு பூக்கள் பூக்காத பூந்தோட்டமா? அது என்ன தோட்டம்? என்றறியும் ஆவலில் தோட்டத்தில் நுழைகிறேன். ஆம்... நூலைத் தொட்டு, முகப்பட்டையைத் திறக்கிறேன். நூலாசிரியரை எமக்களித்த பெறற்கரிய பெற்றோரின் (தந்தை: அமரர். எஸ். வி. பொன்னையா – தாய் அமரர் திருமதி. பொ. அமராவதி) அமைதியான வதனங்கள் வரவேற்க, பெற்ற மகனின் சமர்ப்பண வரிகள் சந்தன மணங்கமழ்கின்றன.

கலைமாமணியின் கன்னி முயற்சியான இச்சிறுகதை தொகுப்பு பத்து சிறுகதைகளை தாங்கி வந்துள்ளது.

ஆசியுரை – வாழ்த்துரை – முன்னுரை – அணிந்துரை – என்னுரை கடந்து, கதைகளை ஒரே மூச்சில் படித்திடலாம்.

' அளவில் 88பக்கங்களைக் கொண்ட ஒரு சிறிய நூல் என்றாலும், கதையாசிரியரின் அனுபவங்களை அவை பேசுகின்றன. கதைகள் தரமானவையா? என்ற விமர்சனப் பார்வை இந்நூலைப் பொறுத்தவரை தேவையற்றது என்பேன். ஏனெனில் - நம் கலைமாமணியின் கன்னிப் படைப்பு இது என்பதால், படிப்போரின் விருப்பத்திற்கு – ரசனைக்கு விட்டு விடலாம்.

ஒருவருக்குப் பிடிக்கும் கதை, மற்றவருக்குப் பிடிக்காது. ரசனை உணர்வு ஆளுக்கு ஆள் மாறுபட்டிருக்கும். வேறுபட்டிருக்கும் என்பதால், படிப்போர் சுதந்திரமாக சிந்திக்க இடம் விடலாம். கன்னி முயற்சி என்பதால், நாம் நூலாசிரியரை உற்சாகப்படுத்தினால், நமக்கு எதிர்காலத்தில் நல்லதொரு சிறுகதை எழுத்தாளன் கிடைப்பான் என்ற நம்பிக்கையைத் தருகிறது ஒரு கதை. ஆம் நூலில் இடம்பெற்ற பத்து கதைகளுள் ஏழாவது கதையாக இடம்பெற்றிருக்கும் 'மனித நேயம்' என்பதாகும்.

'மனிதநேயம்' ஒரு தரமான சிறுகதை சமுதாயம் சிந்திக்க வேண்டிய ஆரோக்கியமான ஒரு கருத்தினை அது சொல்கிறது. கலைமாமணி பொன். பத்மநாதனுள்ளே ஒரு சிறுகதை எழுத்தாளன் ஒளிந்திருப்பதை மேற்படி 'மனிதநேயம்' சொல்லாமற் சொல்கிறது. அது போலவே ஏனைய சிறுகதைகளும் மற்றவர்களுக்குப் பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம்.

சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, சகோதரர் பத்மநாதன் எழுதாமல் விடலாமா? எழுத எழுத தரம் தானாக வந்து ஒட்டிக் கொள்ளும். செந்தமிழும் நாப்பழக்கம், சித்திரமும் கைப்பழக்கம் என்று தமிழன்னை நமக்கு அறிவுறித்தியுள்ளாளே! அதனால் சமாதான நீதவானாகிய கதாசிரியர் எதிர்காலத்தில் மென்மேலும் எழுதி, பல்வேறு படைப்புக்களைத் தமிழுக்குத் தரும்படி வேண்டுவோம். ஏன் தெரியுமா? கம்யூனிஷ பிதாமகன் லெனின் சொன்னான், 'எழுதும் ஆற்றல் உள்ளவர்கள் எழுதாமல் விட்டால், அதுவொரு சமுதாயத்தையே கொலை செய்ததற்கு சமன்' என்று.

இந்த பழிபாவம் நம் பத்மநாதனுக்கு வரவேண்டுமா? அதனால் அவரை எழுதும் என்றும் உற்சாகமூட்டுவோம்.

கலாபூஷணம்
எஸ். ஐ. நாகூர் கனி

Comments