கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு-1

அபிமானிகளின் தொலைக்காட்சிப் பெட்டிகளில் தமிழகத்தமிழ் ஒளிபரப்புகள் என்னென்ன வெல்லாம் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கின்றன?

இங்கே தரப்பட்டிருக்கும் தலைப்புகளைக் கண்டிருக்கிறீர்களா?

* லைட்ஸ் ஒன்

* டயலாக்

* விசுவல் பேஸ்ட்

* புக் ஷெல்ஃப்

* பயோ டேட்டா

* ரீடர்ஸ் ஒபீனியன்

* ஆட்டோ கிராப்

* ரேசன் கார்ட்

* டவுன் லோடு மனசு

* ஃப்ளாஷ் பேக்

* ப்ளாக் அண்ட் வைட்

* டொப் ஏங்கிள்

* ரிலாக்ஸ் ப்ளீஸ்

* டொப்டென் மூவிஸ்

* சூபர் சிங்கர்

* டிரைலர் டைம்

* சோங் ஃபார் யூ

* கிரைம் டைம்

* கிரைம் ஸ்டோரி

* ப்ரைம் டைம்

* பயோ கிராபி

* ஹலோ டாக்டர்

* கிச்சன் டைம்

* பிக் பாஸ்

* கனெக்சன்ஸ்

* ஜீன்ஸ்

* மியூசிக் ட்ராக்ஸ்

* மிக்ஸ் மசாலா

* மிட்நைட் மசாலா

* செம காமெடி

* கொலிவூட் ஹிட்ஸ்

* சினி டைம்

அப்பாடா! பட்டியலிட்டு மூச்சு வாங்குகிறது.

இவை அத்தனையும் தமிழ் மொழி காட்சி ஊடகங்களில் (தொ.கா) மட்டும் அன்று அச்சு ஊடகங்களிலும் அன்றாடம். தமிழ் நாட்டவர் பார்க்கிறார்கள், நம்மில் பலரும் சேர்ந்து அர்த்தம் ‘கிர்த்தம்’ எதுவும் புரியாமலேயே! ஆங்கில அறிவே இன்றி அன்னையர் விழி விழி!

தமிழ் மக்களை தமிழ்ப் பற்றாளர்களாக பரிணமிக்கும் பணியில் முனைந்துள்ள முதல்வர் முத்துவேல் கருணாநிதியாரின் மகனார் இந்தத் ‘தமிழாங்கிலத்திலும் ஒரு பார்வை செலுத்த வேண்டும்.

இவற்றை சிரத்தையுடன் தொகுத்து, ‘இந்து இதழ்’ நாளேட்டில் ‘தமிழ்த் திசைப்பகுதியில் வெளியிட்டுள்ள அருள் செல்வனுக்கும் முகநூலில் பதிவிட்டிருக்கிற சுகுமார் சண்முகத்திற்கும் நன்றியறிதல்கள்.

ஓர் அடிக்குறிப்பு:

இங்கே நம்ம தொ.கா. தமிழ் ஊடகங்களில் கண்டு கொண்டிருப்பவற்றையும் நானே தொகுத்துக் கொண்டிருக்கிறேன். சற்று அவகாசம் அளியுங்கள்.

கசப்பு-2

நாளும் பொழுதும் ‘ஹராம்’, ‘ஹலால்’ பேசித்திரிந்த பென்னம் பெரிய இஸ்லாமிய தேசமான சவூதி அரேபியா, 2021க்கு விடை கொடுக்க ஒரு பிரம்மாண்டமான, இசைவிழாவை நடத்தி முடித்திருக்கிறது. கேட்டவர்களும் பார்த்தவர்களும் பல்லாயிரமாம்.

ஒரு காலத்தில் இசையையும் நாடகத்தையும், இவை உள்ளடங்கிய திரைப்படங்களையும் தூக்கி வீசி எறிந்திருந்த தேசம் அது! அந்த அறபு தேசத்தையே பின்பற்றி, 1990களில் (21)ஆண்டுகளுக்கு முன்) ஆப்கான் நாட்டை ஆண்ட தலிபான்கள் ‘ஷரீயத்’ ‘இஹ்லாஸ்’ என இஸ்லாமியக் கோட்பாடுகளை வாய்வலிக்கப் பேசிக்கொண்டு அபின் போதைப் பொருளை உலகெல்லாம் கடத்திக் காசு பார்த்துக் கொண்டிருந்தவர்கள், கடந்தாண்டு மறுபடியும் ஆள வந்துவிட்டார்கள்.

ஆனால் சவூதி அரேபிய வழியில் செல்லத் தயாரில்லை!

இசையும் நாடகமும் பொது இடங்களில் கிடையாது என்பது மட்டுமன்று, தொ.காகளில் பெண்கள் நடிப்பது தடை. இசை நிகழ்ச்சிகள் இல்லை.

அத்தோடு, அவசியம் கருதி சில நிகழ்ச்சிகளைப் பெண்கள் தயாரித்து வழங்க நேர்ந்தால் ஹிஜாப் உடை அணிந்திருக்கவேண்டும்.

கண்மணிகளாம் பெண்மணிகள் உயர் கல்வி கற்க மேல் நிலைக்கல்லூரிகளில் அனுமதி இல்லை.

முன்பு பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கவனிக்கவும் மேம்பாட்டுக்குமென ஒரு தனியான அமைச்சு செயல்பட்டது. இப்பொழுது மூடு விழா!

அதே சமயம், ஆண் துணையில்லா பயணம் செய்யப் பெண்களுக்கு அனுமதி மறுப்பு!

அதாவது, குடும்ப உறுப்பினர், உறவினர் துணையின்றி 75கிமீ தூரத்திடத்திற்கு மேல் பிரயாணம் நஹி ஹே!

இந்தத் தலிபான் வாலாக்கள் நடுத்தெருவில் அபின் போதை விற்பனை செய்து கொண்டே பெண்களையே குறிவைப்பது புதிரோ புதிர்!

இனிப்பு-1

‘கர்நாடகம்’ என்றதொரு வார்த்தைக்குச் சரி பொருத்தமான ஆசாமிகள் பழம் பேனை கொண்டு எழுதும் என் போன்றவர்களே! “மாறிவரும் சமுதாயப்பழக்க வழக்கங்கல்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்ள விரும்பாத பழைய மரபு வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருபவர்” எனப் பொருள் கூறிகிறது ‘நர்மதாவின் தமிழ் அகராதி’

அச்சொட்டான விளக்கம் ஆயினும் அந்த வார்த்தையில் பரந்த பாரத் (இந்திய) நாட்டில் ஒரு மாநிலமே உள்ளது என்றதகவலை அகராதி அளிக்கவில்லை. என் பேனையே அளிக்கிறது.

‘கர்நாடகா’ என்றதொரு மாநிலம், தமிழகத்தை ஓட்டியதாக உள்ளது. மாவீரர் திப்பு சுல்தான் அணட பிரதேசம். பெங்களூருவும், மைசூரும் அங்கே பிரபலமான சுற்றுலா நகரங்கள்.

இங்கே ‘விஜயப்புரா’ என்றோர் இடம். சமூக நல்லிணக்கத்திற்கு புகழ்பெற்றது.

மெஹபூப் மஸ்னவி என்ற பெயரில் ஒரு மனிதர் அங்கே! கடந்தாண்டு ஆகஸ்ட் பொழுதில் அவரும் துணைவியாரும் செய்திருக்கிற காரியம் இன்ப அதிர்ச்சியோ அதிர்ச்சி!

தங்கள் பராமரிப்பில் பத்தாண்டுகளுக்கு மேலாக வளர்ந்த குமரிப் பெண்ணொருத்திக்கு ஜாம் ஜாம் எனத் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர்.

இதுயாரும் செய்வது தானே இதற்கேன் ஜாம் ஜாம் போடுகிறீர்கள் என்பீர்கள்!

அங்கே தான் ஒளிந்திருக்கிறது பெரும் சமூக நல்லிணக்கம் எடுத்துக் காட்டு!

வளர்ப்பு மகள் பதினெட்டு அகவை பூஜா என்ற இந்துப் பெண்! தனது வீட்டையே திருமண நிகழ்விடமாக்கி இந்து முறைப்படியே கல்யாணக் காட்சி நடத்திவிட்ட முஸ்லிம் தம்பதி பெரிய ஆச்சரிய குறிகள்!

இன்னும் விரிவாக விவரித்து விடுகிறேன்.

கர்நாடக மாநிலம், விஜயப் புராவை வதிவிடமாகக் கொண்டவர் பூஜா என்ற பருவப் பெண். அவர் அநாதை ஆக்கப்பட்டார். வறுமை காரணமாக பெற்றோர்களால் கைவிடப்பட்டாள்.

இந்த அநியாயத்தைக்காணப் பொறுக்காத மெஹபூப் மஸ்னவி தம்பதி, தங்கள் பராமரிப்பில் பூஜாவைத் தத்து எடுத்தனர் என்றாலும்.

முஸ்லிம் பெயர் சூட்டி பிறப்புப்பதிவுப் பெயரை மாற்றவில்லை! பத்தாண்டுகள் பறக்க, பதினெட்டு வயதை எட்டும் வரையில் பூஜாவுக்குத் தந்தையும், தாயும் அந்த முஸ்லிம் தம்பதியே!

இந்நிலையில், திருமண வயது வந்த அந்த பெண்ணுக்கு இந்து மதமுறைப்படி, மணமகனை தேடி பிடித்து திருமணம் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றனர்! மணமகன் வீட்டினர் வரதட்சணை இன்றி மகிழ்ச்சியுடன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர்.

இந்த அற்புத நிகழ்வு குறித்து ஜனாப் மெஹபூப் மஸ்னவி என்ன கருத்தைச் சொல்கிறார் என்பதைக் கேட்கும் பொழுது அதுவும் ஓர் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

“10ஆண்டுகளுக்கும் மேலாக அந்த சிறுமி எனது வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். எங்களுடைய மதத்திற்கு மாறவோ அல்லது முஸ்லிம் நபரை திருமணம் செய்யவோ நான் ஒருபோதும் கட்டாயப்படுத்தியது இல்லை. சமூகம் வேறாக இருப்பினும் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டியது இன்றைய காலகட்டத்தின் மிக மிக அவசியமாகும்!”

இதைப் பதிவிடுகிற சமயத்தில் தனிக்குடித்தனம் நடத்துகிற பூஜாவும் ஒன்றைச் சொல்கிறார்.

“இப்படியொரு நல்லுள்ளம் கொண்ட ஒரு வளர்ப்புத் தந்தையையும் தாயையும் பெற நான் பாக்கியசாலி. அனைத்திற்கும் மூலகாரணம் நம் எல்லோருககும் பொதுவான கடவுளின் திட்டங்களும் ஆசிகளுமே!

ஆம்! என் பேனையும் நானும் அடிக்கடி சொல்வது போல, ‘அனைத்தும் அவன் எண்ணப்படியும் திட்டப்படியும்!’

மேலும் சில தகவல்கள்:

ஜனாப் மெஹபூப் அந்த அழகிய கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் ஒரு பிரபல சமூகசேவையாளரும், சமூகநல்லிணக்கவாதியுமாவார். அவருக்கு ஆசை ஆசையாக மகன்கள் இருவர், மகள்மார் இரண்டு பேர் உள்ளனர். வாழ்த்தி மகிழ்வோம்.

Comments