படுமோசமான நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் | தினகரன் வாரமஞ்சரி

படுமோசமான நிலையில் தோட்டத் தொழிலாளர்கள்

'சமயாசமய ஊழியர்களாக தோட்டத்தில் தொழில் செய்பவர்களுக்கும் தினச்சம்பளம் 750ரூபா மட்டுமே வழங்கப்படுகின்றது. மேலும், தோட்ட நிருவாகங்களினால் சட்டரீதியாக வழங்கப்பட்ட சேமநலன்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்பட்டு வந்த தொழிற்சங்க அங்கத்துவ நிதி, மரண சகாய நிதி, ஆலயத்திற்கான நிதி உள்ளிட்ட எந்தவொரு நிதியும் கழிக்கப்படுவதில்லை'                

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய நிலையில் தத்தம் வாழ்வாதாரங்களையும் முன்னெடுக்க முடியாமல் சொல்லொணா துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய துர்ப்பாக்கிய நிலையில் இருந்துவரும், தொழிலாளர் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டுமானால், பெருந்தோட்டங்களை தொழிலாளர் குடும்பமொன்றிற்கு தலா இரண்டு ஏக்கர் என்ற அடிப்படையிலாவது, பிரித்துக்கொடுத்து, அவர்களை நில உடமையாளர்களாக மாற்றினால் மட்டுமே முடியும் என்கிறார் விவசாயத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி.  

விவசாயத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி, பிரதமர் மகிந்தராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.  

பெருந்தோட்டத் தொழிலாளர்களை நில உடமையாளர்களாக மாற்றி, அவர்களிடமிருந்து தேயிலை உற்பத்தியினைப் பெற்றுக்கொள்வதன் மூலம், பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகம் எதிர்நோக்கும் பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும். அத்துடன் அத்தொழிலாளர்கள் தத்தமது வாழ்வாதாரங்களையும் வளமாக மேற்கொள்வர். தாம் 'தோட்ட உரிமையாளர்' என்ற பெருமையுடன், தேயிலை உற்பத்தியை பெருமளவில் அபிவிருத்தி செய்வர் என்பதை அவர் அழுத்தமாக தன் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.  

நில உடமையாளர்களாக தொழிலாளர்களை மாற்றும் வேலைத்திட்டம், எமது நாட்டில் பல வருடங்களுக்கு முன்பு காலி, மாத்தறை, கேகாலை போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் தற்போது ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் தேயிலை உற்பத்திக்கான பங்களிப்பினை, நில உடமையாளர்கள் வழங்கி வருகின்றனர். சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் என்று அத்தொழிலாளர்கள் பெருமையுடன் கூறிக்கொள்கின்றனர். இதுபோன்று, பெருந்தோட்டங்களையும் தலா இரண்டு ஏக்கர் என்ற அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுத்து, அவர்களை நில உடமையாளர்களாக மாற்றியமைக்க கவனம் செலுத்துவீர்களென்று எதிர்பார்க்கின்றேன்.  

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணயசபை மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்ட ஆயிரம் ரூபா சம்பள உயர்விற்குப் பின்னர், தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கத் தொடங்கியுள்ளனர். வழமையாக ஒருநாள் சம்பளத்திற்கு 18கிலோகிராம் தேயிலைத் தளிர்களைக் கொய்ய வேண்டியிருந்தது. ஆனால், தற்போது ஆயிரம் ரூபா சம்பள உயர்விற்குப்பின் ஒருநாள் சம்பளத்திற்கு 20கிலோகிராம் தேயிலைத் தளிர்களை கொய்ய வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. தவறின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு மறுக்கப்பட்டு 750ரூபாவே வழங்கப்படுகின்றது.  

ஞாயிறு, போயா தினங்களில் வேலை வழங்கப்பட்டால் ஒன்றரை நாளுக்குரிய சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்பது நியதி. அந்நியதி தற்போது மீறப்பட்டுள்ளது. அக்குறிப்பிட்ட நாட்களில் தொழிலாளர்கள் கொய்யும் தேயிலைத்தளிர்கள் ஒரு கிலோ கிராமுக்கு 40ரூபா என்ற அடிப்படையில் வழங்கும் திட்டம், தோட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.  

சமயாசமய ஊழியர்களாக தோட்டத்தில் தொழில் செய்பவர்களுக்கும் தினச்சம்பளம் 750ரூபா மட்டுமே வழங்கப்படுகின்றது. மேலும், தோட்ட நிருவாகங்களினால் சட்டரீதியாக வழங்கப்பட்ட சேமநலன்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்பட்டு வந்த தொழிற்சங்க அங்கத்துவ நிதி, மரண சகாய நிதி, ஆலயத்திற்கான நிதி உள்ளிட்ட எந்தவொரு நிதியும் கழிக்கப்படுவதில்லை.  

தோட்டங்களில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளுக்கும், தோட்ட நிருவாகத்தினர் பொலிசாரை நாடுகின்றனர். பொலிசார் தோட்டங்களுக்குள் நுழைந்து எடுக்கும் நடவடிக்கைகள் கட்டுமீறி செல்வதால், தோட்டங்களில் அமைதியற்ற சூழல் ஏற்படுகின்றது. இதனால் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிருவாகத்தினருக்குமிடையே முறுகல் நிலை தோற்றுவிக்கப்படுகின்றது. இருதரப்பினருக்குமிடையே ஏற்படும் தாக்குதல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.  

இவ்வாறான நிலை தொடரும்போது, பெருந்தோட்டத்துறை பொருளாதாரத்தில் பாரிய தாக்கங்கள் ஏற்படவே செய்யும். அத்துடன், பெருந்தோட்டத்துறையை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் பாரிய எதிர்விளைவுகளை எதிர்நோக்க வேண்டியேற்படும். அரசின் வருமானமும் வீழ்ச்சியடைவதுடன், தொழில் திணைக்களமும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாத திணைக்களமாக மாற்றமடையுமென்பதில், சந்தேகமேயில்லை.  

பெருந்தோட்டப்பகுதிகளில் 37ஆயிரம் ஹெக்டயர் நிலப் பிரதேசங்கள் தரிசு நிலங்களாக இருந்து வருகின்றன. இதை விவசாயத்திற்காகவும், கால்நடை, கோழி வளர்ப்புகளுக்கும் பயன்படுத்த முடியும். இதன்மூலம் படித்த இளைஞர், யுவதிகள் ஆகியோருக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கலாம். அல்லது தோட்டங்களில் தொழில்வாய்ப்பற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு மேற்படி 37ஆயிரம் ஹெக்டயர் நிலப்பிரதேசங்களை பகிர்ந்தளிக்க திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.  

கொழும்பு போன்ற பிரதேசங்களில் தொழில் செய்தவர்கள் அனைவரும், கோவிட்19தொற்றின் தாக்கத்தினால் தமது தோட்டங்களுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இவர்களுக்கும் தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டியுள்ளது. மேலும், பெருந்தோட்டங்களில் மூடப்பட்டிருக்கும் தேயிலை தொழிற்சாலைகளை கைத்தொழில் பேட்டைகளாக மாற்றியமைக்கும்பட்சத்தில், பெருமளவிலானோருக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்று தன் கடிதத்தில் தெரிவித்துள்ள கிருஷ்ணசாமி, இவற்றை பரிசீலிக்க ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுக்கும்படி பிரதமரிடம் கேட்டுள்ளார்.  

Comments