கொவிட் நெருக்கடியினால் பாதிப்படைந்த மக்களுக்கு கைகொடுத்த நிவாரணப்பொதி | தினகரன் வாரமஞ்சரி

கொவிட் நெருக்கடியினால் பாதிப்படைந்த மக்களுக்கு கைகொடுத்த நிவாரணப்பொதி

இலங்கையின் பொருளாதாரம்சேவைத்துறையில் குறிப்பாக சுற்றுலாத்துறைபோன்றவற்றில் அதிகம் தங்கியிருந்தது.எனினும், கடந்த இரண்டு வருடங்களாக உலகம்முழுவதிலும் நிலவும் கொரோனா வைரஸ்பெருந்தொற்று காரணமாக இத்துறை பாரியபின்னடைவைச் சந்தித்தது.

ஒப்பீட்டளவில் சுகாதார நிலைமைகளில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும், கடந்த காலத்தில் ஏற்பட்ட தாக்கங்களின் விளைவாக இத்துறை மாத்திரமன்றி பல துறைகளும் பாதிக்கப்பட்டன. 2020ஆம் ஆண்டிலும், 2021ஆம் ஆண்டிலும் தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முடக்கங்களுக்குச் சென்றமையால் பொருளாதாரப் பின்னடைவுகள் ஏற்பட்ட போதும், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் இலங்கையில் குறைவென்றுதான் கூற வேண்டும்.

முடக்கங்களை முடிவுக்குக் கொண்டு வந்து பொருளாதாரத்தைத் திறப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும், டெல்டா திரிபு மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்தது. இதனால் மறுபடியும் முடக்கங்களுக்குச் செல்லும் நிலைமை அரசுக்கு ஏற்பட்டது.

ஆனால் எவ்வாறான தடைகள் ஏற்பட்ட போதும், அனைத்துக்கும் வெற்றிகரமாக முகங்கொடுத்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தன்னாலான முயற்சிகளை அரசு எடுத்து வந்ததையும் மறுக்க முடியாது. இரண்டு ஆண்டு கால தேக்க நிலைமையானது அந்நிய செலாவணி இருப்புகளை தக்க வைப்பதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது, இது பொருளாதாரத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் கடந்த சில மாதங்களாகப் பொதுவெளிகளில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமூக ஊடகங்களும் இவை  குறித்த உள்ளடக்கங்களில் மூழ்கிப் போயுள்ளன. இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலையொன்று காணப்படுகிறது. இவ்வாறான நிலையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கடந்த ஆண்டு இறுதியில், அதிகரித்த வெளிநாட்டுப் பணம் மற்றும் பிற வருமானங்களால் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பானது 3.1பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது என அறிவித்தார்.

இதுபோன்ற பின்னணியில், இந்த வாரம், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், பொதுமக்களின் நிதி அழுத்தங்களைப் போக்குவதற்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பல்வேறு அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டிருந்தார்.

229பில்லியன் ரூபா செலவில் பல்வேறு சலுகைகளைக் கொண்ட 'நிவாரணப் பொதி' ஒன்றை அவர் அறிவித்தார். இதில் அரசாங்க ஊழியர்களுக்கு மாதாந்தம் 5,000ரூபா சலுகைக் கொடுப்பனவு, விவசாயிகளுக்கான சலுகை உள்ளிட்ட விடயங்களை அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

'இந்த பாரிய நிவாரணப் பொதிக்கான நிதி வரவுசெலவுத் திட்டத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக எந்தவிதமான வரியோ அல்லது மேலதிக வரிகளோ மக்களுக்கு விதிக்கப்படாது' என நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இந்த நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது

அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படவிருக்கும் மாதாந்த உதவித் தொகையான 5,000ரூபா ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கும் வழங்கப்படும்.  24வருடங்களின் பின்னர் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ததன் மூலம் அவர்கள் ஏற்கனவே சம்பள உயர்வைப் பெற்றிருந்தனர். இந்த நடவடிக்கையின் மூலம் 1.45மில்லியனுக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், பெருநிறுவனங்களைச் சேர்ந்தோர் உட்பட பலர் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் விளக்கினார்.

'ஓய்வூதியம் பெறுவோர் மாதாந்த உதவித்தொகையாக ஒரு வருட காலத்திற்கு ரூபா 5000ஆயிரம் ரூபாவைப் பெறவுள்ளனர். 600,000க்கும் மேற்பட்ட ஓய்வூதியக்காரர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். இந்த நடவடிக்கைக்கு 87பில்லியன் ரூபாதேவைப்படுகிறது. 42,000க்கும் மேற்பட்ட ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும்' என அமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சமுர்த்தி பயனாளிகள் தற்போது 1000ரூபா கொடுப்பனவைப் பெற்றுக் கொள்கின்றனர். இந்தத் தொகை தற்பொழுது 3500ரூபாவாக வழங்கப்படும். இந்த மாதத்தில் இருந்து 1,000ரூபாவை இயன்றவரை சம்பள உயர்வாக வழங்குமாறு தனியார் துறையினரையும் அரசாங்கம் கோரும் என்றார் அமைச்சர். தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஏற்கனவே இது தொடர்பாக தனியார் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த தொகுப்பின் மற்றுமொரு முக்கிய அம்சம் விவசாயிகளுக்கான   நெல்லின் உத்தரவாத விலையாகும். இதற்கு முன்னர் அரசு சான்றளிக்கப்பட்ட விலையாக ஒரு கிலோ நெல்லுக்கு 50ரூபாவை அறிவித்திருந்தது. இனிமேல் ஒரு கிலோவுக்கு மேலதிகமாக 25ரூபா வழங்கப்படவுள்ளது. இதற்கமைய ஒரு கிலோ நெல்லுக்கான உத்தரவாத விலை 75ரூபாவாகும்.

விவசாயிகள் மற்றும் அரிசி நுகர்வோர் ஆகிய இருதரப்பினரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே  அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

'அறுவடையில் 20முதல் 30சதவீதம் குறையும் என எதிர்பார்க்கிறோம், எனவே ஒரு கிலோ நெல் 75ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுவதால் இது விவசாயிகளுக்கு நிவாரணமாக இருக்கும். மானியம் என்பது சந்தையில் அரிசி விலை கடுமையாக உயராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என்று அவர் விளக்கினார்.

பல வருடங்களாக நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருந்து உழைத்து வரும் பெருந்தோட்டத்துறை ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் பதிவு செய்யப்பட்ட பெருந்தோட்டத்துறைக் குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 15கிலோ கோதுமைமா கிலோ 80ரூபா விலையில் வழங்கப்படும். அத்துடன், 20பேர்ச்சுக்கு குறைவான நிலப்பரப்பில் வீட்டுத் தோட்டங்கள் செய்பவர்களுக்கு 5000ரூபாவும், ஒரு ஹெக்டெயருக்கு மேற்படாத நிலப்பரப்பில் வீட்டுத் தோட்டம் செய்பவர்களுக்கு 10,000ரூபாவும் மானியமாக வழங்கப்படவுள்ளது.

கிராம சேவை உத்தியோகத்தர்களின் அனுசரணையுடன் பிரதேச செயலாளர்களினால் இந்த வேலைத்திட்டம் கண்காணிக்கப்படும். திருப்திகரமான முடிவுகளைப் பொறுத்து ஆறு மாத இடைவெளியில் இரண்டு கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு அரசுக்கு ரூ.31பில்லியனுக்கு மேல் செலவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்களிக்கப்படுவதாக  அவர் அறிவித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இது செயல்படுத்தப்படவுள்ளது. இந்த நடவடிக்கைகள் கொவிட் தொற்றுநோயின் பொருளாதார தாக்கம் குறித்த அரசாங்கத்தின் அக்கறையை பிரதிபலிப்பதுடன், இதனைச் சரிசெய்யும் முயற்சியாகவும் அமைகிறது.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்புகள் நாட்டு மக்களுக்கு நிவாரணமாக அமைவது ஒருபுறமிருக்க, எதிரணியினருக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை. கொவிட் காரணமாக நாட்டில் பாவனைப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள விலையேற்றத்தை துரும்பாக வைத்து அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் எதிரணியினர் சமீப காலமாக  பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர். அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்த அதிரடி அறிவிப்புகளால் எதிரணியினர் இனிமேல் விலைவாசி அதிகரிப்பு குறித்து மக்கள் மத்தியில் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

சம்யுக்தன்

Comments