குழந்தை இலக்கியத்தை முன்னெடுக்கும் ஹைக்கூ கவிஞர் | தினகரன் வாரமஞ்சரி

குழந்தை இலக்கியத்தை முன்னெடுக்கும் ஹைக்கூ கவிஞர்

தமிழ் இலக்கியத் தளத்தில் கொண்டாடப்படும் எழுத்தாளர்கள் வரிசையில் கவிஞர் மு.முருகேஷூம் இடம்பிடித்திருக்கிறார் என்பது பெருமைப்படக்கூடிய விடயமாக எண்ணி மகிழ்கிறேன்

மத்திய அரசால் வழங்கப்படும் குழந்தை இலக்கியத்திற்கான ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’

மு.முருகேஷ் எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது

தமிழில் முப்பதாண்டுகாலமாக எழுதிவரும் மு.முருகேஷின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்ல வேண்டும். ஐப்பானிய வடிவமான ஹைக்கூ கவிதைகளின் வழியாக தமிழ் எழுத்துச்சூழலுக்கு நன்கு அறிமுகமாகியுள்ள மு.முருகேஷ், குழந்தை இலக்கியத்திலும் முத்திரை பதித்துள்ளார் என்பதற்கு சிறந்த அங்கீகாரத்தைத் தந்துள்ளது ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’.

குழந்தை இலக்கியம் படைப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் சூழலில் மு.முருகேஷுக்குக்கி டைத்துள்ள இந்த விருது மூலம் குழந்தை இலக்கியம் படைக்க இனி கூடுதலானோர் வருவார்கள் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.

படைப்புத்தளத்தில் இயங்க வருபவர்களை அரவணைத்து வழிகாட்டி ஊக்கப்படுத்தும் மு.முருகேஷ், குழந்தை இலக்கியம் படைக்க முன்வருபவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து, தமிழில் சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பாரென முழுமையாக நம்புகிறேன்.

இருபது ஆண்டுகளாக நான் பழகியவரையில், “நான் பெரிய படைப்பாளி; எனக்கு எல்லாம் தெரியும்” எனும் தலைக்கனம் இல்லாமலும், யார்மீதும் தேவையற்ற காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய விமர்சனங்களைப் பகிராமலும், யாரையும்பெரிய படைப்பாளி, சிறிய படைப்பாளி என்று பாகுபாடு பார்க்காமலும் அனைவருடனும் சமமாக நட்பு பாராட்டும் முருகேஷிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளவும் வேண்டும்.

இலக்கிய அரசியல் செய்யாத அல்லது செய்யத் தெரியாத எல்லோருக்கும் பிடித்தமான சிறந்த மனிதர் என்றும் சொல்லலாம்.

எழுத்தாளர் வல்லிக்கண்ணனைப்போல புதிய எடுத்தாளர்களைத் தட்டிக்கொடுத்து. வளர்த்தெடுப்பதில் மு.முருகேஷுக்கு தனி இடம் இருக்கிறது. தனக்கென்று ஒரு வாசகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருப்பது அவரது தனிச்சிறப்புகளுள் ஒன்று.

தமிழில் ஹைக்கூ வடிவத்தைப் பரவலாகக் கொண்டு செல்வதில் முன்னோடியான கவிஞர் மு.முருகேஷ், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹைக்கூ கவிதைகளுக்கென்றே ‘இனிய ஹைக்கூ’ எனும் இதழைத் தொடங்கி. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ‘ஹைக்கூ கவிதைத் திருவிழா, ஹைக்கூ கருத்தரங்கம், ஹைக்கூ பயிலரங்கு ஹைக்கூ கண்காட்சி என பலப்பல முயற்சிகளில் ஈடுபட்டதின் விளைவாக, இன்று தமிழில் ஹைக்கூ கவிதை நிலைத்த புகழினை அடைந்துள்ளது உண்மையே.

மு.முருகேஷின் ஹைக்கூ குறித்த பங்களிப்புகள் அத்தனையையும் தொகுத்து,’ தமிழ் ஹைக்கூ நூற்றாண்டில் மு.முருகேஷ்’ என்ற நூலை முனைவர் சு.சேகர் வெளியிட்டுள்ளார். ஹைக்கூ எழுத வரும் புதியவர்களுக்கு சிறந்த வழிகாட்டி நூலாக இந்நூல் திகழ்கிறது

தற்போது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர், இதுவரை 10புதுக்கவிதைகள் நூல்கள், 10ஹைக்கூ நூல்கள். 10கட்டுரை நூல்கள், 18குழந்தை இலக்கிய நூல்கள், 3புதுக்கவிதைத் தொகுப்பு நூல்கள், 5.ஹைக்கூ தொகுப்பு நூல்களை வெளியிட்டு தமிழ் எழுத்துலகத்திற்கு சிறந்த பங்காற்றியுள்ளார்.  இவரது நூல்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் சிறந்த கவிதை நூலுக்கான பரிசினை மூன்று முறையும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் செல்வன் கார்க்கி விருதினை இரண்டு முறையும், தியாகதுருக்கம் பாரதியார் தமிழ்ச் சங்கம் மற்றும் திருப்பூர் தமிழ்ச் சங்கம் வழங்கிய குழந்தை இலக்கியத்திற்கான பரிசுகளையும் பெற்றுள்ளார்.

குழந்தை இலக்கியத்திற்காகச் சிறப்பாக பணியாற்றியமைக்காக பல்வேறு அமைப்புகள் வழங்கிய சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான விருதும் பெற்றதோடு, மலேசியா, சிங்கப்பூர், குவைத், இலங்கை போன்ற நாடுகளுக்குப் பயணித்து இலக்கியப் பங்களிப்பையும் செய்துள்ளார்.

இவரது  ஹைக்கூ மற்றும் புதுக்கவிதைகளை முன்வைத்து 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக  மாணவர்கள் முனைவர் மற்றும் இளமுனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளனர். இவர் எழுதிய 160ஹைக்கூ கவிதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘நிலா முத்தம்’ என்ற நூலாக வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘அம்மாவுக்கு  மகள் சொன்ன உலகின் கதை’ நூலிலுள்ள 16சிறுவர் கதைகளை எட்டாம் வகுப்பு  படிக்கும் மாணவி சைதன்யா ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, ‘The First Story told by a Daughter to her Mother ‘ எனும் ஆங்கில நூலாக வெளியாகியுள்ளது.

2011-இல்  வெளியான தமிழக அரசின் ‘சமச்சீர் கல்வி’க்கான பாடத்திட்டத்தில் ஒன்றாம்  வகுப்பு தமிழ், அறிவியல், கணிதப் பாடப் புத்தகத்தில் தலா ஒரு பாடலும், 6-ஆம்  வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 3பாடங்களையும் இவர் எழுதியுள்ளார். 

ஜப்பானிலுள்ள அகிதா இண்டர்நேஷனல் ஹைக்கூ அமைப்பு, இவரது 10ஹைக்கூ கவிதைகளைத்  தேர்வுசெய்து, ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்துள்ளது. இவரது 100ஹைக்கூ  கவிதைகள்  தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில்

'Let Haiku Blossom' எனும் நூலாக வெளிவந்துள்ளது.

தமிழ் மொழியின் செறிவோடும், காட்சி அழகியலோடும் எழுதப்படும் இவரது ஹைக்கூ கவிதைகளைப் படித்து, பலரும் பாராட்டுவதோடு, தமிழ் ஹைக்கூவின் அடையாளமாகவும் இவரது கவிதையைக் காண்கின்றனர்.  குழந்தை இலக்கியத்தை முன்னெடுக்கும் ஹைக்கூ கவிஞர் மு.முருகேஷ்,  ’தூண்டில்’ ஹைக்கூ இதழின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வருகிறார்.

இன்னும் பல நூல்களைப் படைக்கவும், தமிழிலக்கியப் பயணத்தைத் தடையின்றி தொடரவும் மனதார மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.

நந்தவனம் சந்திரசேகரன்

Comments