குரலற்றவர்களின் குரலாக விளங்கிய பேராயர் டெஸ்மன் டுட்டு | தினகரன் வாரமஞ்சரி

குரலற்றவர்களின் குரலாக விளங்கிய பேராயர் டெஸ்மன் டுட்டு

டெஸ்மன் டுட்டு என்றதும் எவருக்கும் சட்டென நினைவுக்கு வருவது அவரது வசீகரிக்கும் முகமும் புன்னகையும் தான். தென்னாப்பிரிக்கா உலகுக்கு அறிந்த இரண்டாவது கொடை என்றும் அவரை வர்ணிக்கலாம். நெல்சன் மண்டேலா போராளியாக இருந்து அஹிம்சை வழிக்குத் திரும்பியவர். இவர் ஆன்மிகத்தில் இருந்தபடியே அஹிம்சை வழியில் தன் போராட்டங்ளை வெற்றியை நோக்கி முன்னெடுத்தவர். சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்று அப் பரிசுக்கே கனம்சேர்த்தவர்.

இவர் காலத்தில் சாதிக்க முடியாதவை எனக் கருதப்பட்டவற்றை எதிர்த்து நின்று சாதித்துக் காட்டியவர். தன் வெற்றிகளை மக்களிடம் சமர்ப்பித்த பேராயர் டெஸ்மன் டுட்டு, அவற்றை விருதுகளாகக் கைகளில் ஏந்தி மனம் மகிழ்ந்தவர். உலகளாவிய சமூக சேவையாளர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். தனது 90வது வயதில் கடந்த 26ஆம் திகதி பொக்சிங் தினத்தன்று மூப்பின் காரணமாக அமைதியாக காலத்தில் கரைந்தார்.

இவர் தென்னாப்பிரிக்காவின் கிளெர்க்சுடோர்ப் என்ற இடத்தில், 1931ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் திகதி ஒரு ஏழைக் குடும்பத்தில் கலப்பு சோசா, மோட்சுவானா பாரம்பரியத்தில் பிறந்தார். 1955இல் நோமலிசோ என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். 1960இல்,அங்கிலிக்கன் குருவானவராக நியமிக்கப்பட்டு, 1962இல் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இறையியல் கற்று பட்டம் பெற்று 1966இல் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பினார்.

தென்னாபிரிக்காவின் இறையியல் மதப்பள்ளியிலும், பின்னர் போட்ஸ்வானா, லெசோத்தோ, சுவாசிலாந்து பல்கலைக்கழகங்களிலும் கற்பித்தார். 1972-இல், லண்டனைத் தளமாகக் கொண்ட ஆபிரிக்காவிற்கான இறையியல் கல்வி நிதியத்தின் இயக்குநரானார். 1975இல் மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பி, முதலில் ஜோஹன்னர்ஸ்பேர்க்கில் உள்ள புனித மரியாள் பேராலயத்தின் தலைவராகவும், பின்னர் லெசோத்தோ ஆயராகவும் பணியாற்றினார். 1978முதல் 1985வரை தென்னாப்பிரிக்க தேவாலயங்களின் பேரவையின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். இது இவரது பின்புலம்.அவரது இன்னொரு முகம் சமூக அரசியலுடன் பின்னிப் பிணைந்தது.

தென்னாபிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுத்த இவர், மனித உரிமை செயற்பாட்டாளாராகவும் விளங்கினார். இவர் 1985தொடக்கம் 1986வரை ஜோஹன்னர்ஸ்பேர்க் அங்கிலிக்க ஆயராகவும், 1986தொடக்கம் 1996வரை கேப் டவுன் பேராயராகவும் பணியாற்றினார். இப்பதவிகளில் பணியாற்றிய முதலாவது கறுப்பு ஆபிரிக்கர் இவராவார். இங்கே தென்னாபிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கை என்றால் என்ன என்பதையும் பார்க்க வேண்டும்.

சரிசமமாக வாழ வேண்டிய ஒரு குறிப்பிட்ட இனத்துக்கான உரிமைகளை மறுத்து அந்த இனத்தோரை ஒதுக்கி வைப்பதே இன ஒதுக்கல் கொள்கை. இதை ஆங்கிலத்தில் (எப்பதீட்) என்று அழைப்பார்கள். தென்னாபிரிக்காவின் பெரும்பான்மை இனம் கறுப்பினத்தாரே. அவர்களே மண்ணின் மைந்தர்கள். 1652ம் ஆண்டளவில் தென்னாபிரிக்காவின் கேப் டவுனுக்கு வந்த டச்சு, ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு குடியேற்றவாசிகள் பல்கிப் பெருகினர். அவர்களே பின்னர் பேராயர் என அழைக்கப்பட்டனர். இம் மூன்று மொழிகளிலும் கலந்து உருவான மொழியே அப்ரிகான்ஸ் மொழி. இச் சிறுபான்மை போயர்கள் கல்வி, வல்மை,போர்த்தந்திரம் போன்றவற்றில் சிறந்து விளங்கியதால் தென்னாபிரிக்காவை ஆளும் வர்க்கத்தினராக மாறினர். கறுப்பினத்தவரின் நாட்டை சிறுபான்மை வெள்ளை போயர்கள் ஆழத் தொடங்கியது இப்படித்தான். சொந்தநாட்டு மைந்தர்களை போயர்கள் அடிமை போல் நடத்தினர்.

1948ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற போயர்களின் தேசிய கட்சி, தமது வசதிகளை மென்மேலும் அதிகரித்துக் கொள்ளும் பொருட்டு இந்த இன ஒதுக்கல் கொள்கையை சட்டமாகக் கொண்டு வந்தது. வெள்ளையர் வசிக்கும் பகுதிகளில் கறுப்பர் வசிக்க முடியாது. ஒன்றாக அமர்ந்து சாப்பிடவோ, பயணிக்வோ முடியாது. கல்வி மறுக்கப்பட்டது. எனவே உயர் வேலை வாய்ப்புகளும் இல்லை.

பெயரளவில் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்ட கறுப்பினத்தவர்கள் பாண்டுஸ்தான் எனப்பட்ட பத்துப் பழங்குடித் தாயகங்களில் குடிகளாக்கப்பட்டனர். இவைகளுள் நான்கு பெயரளவில் தனி மாநிலங்கள் ஆயின. இந்த பழங்குடித் தாயகங்கள் பரப்பளவில் மிகச் சிறியனவாகவும், நாட்டின் வளமற்ற நிலப்பகுதிகளை உள்ளடக்கியனவுமாக இருந்தன.

பெரும்பாலான கறுப்பினத் தென்னாபிரிக்கர் தமக்கென ஒதுக்கப்பட்ட தாயகங்களில் வசிக்கவில்லை. வெள்ளை இனத்தவருக்கென எடுத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த கறுப்பினத்தவரின் வாக்குரிமை இல்லாமலாக்கப்பட்டது. அரசு, கல்வி, மருத்துவ வசதி, பொதுச் சேவைகள், என்பவற்றில் பாகுபாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்ததுடன், கறுப்பினத்தவருக்கு வெள்ளையரிலும் தரக் குறைவான வசதிகளையே வழங்கியது. கறுப்பினப் பாடசாலைகளின் கல்வி முறை அவர்களைக் கூலியாட்களாக உருவாக்குவதாகவே அமைந்தது.

இந்த இனவொதுக்கல் முறை உள்நாட்டில் குறிப்பிடத்தக்க எதிர்ப்புக்களை உருவாக்கியது. தொடராக இடம்பெற்ற மக்கள் எழுச்சிகளையும், எதிர்ப்புக்களையும், காவல்துறையின் கொடூரமான அடக்குமுறை மூலம் அரசு ஒடுக்கியது. இதனால், மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவு பெருகியது. மக்கள் நேரடியாகவும், அரசியல் வழிமுறைகள் மூலமும் காட்டிய எதிர்ப்புக்களை, நீதி விசாரணை இன்றித் தடுத்து வைத்தல், சித்திரவதை, செய்தித் தணிக்கைகள், கட்சிகளைத் தடை செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் அரசு அடக்க முயன்றது. விடுதலை இயக்கங்களான ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ், கறுப்பின உணர்வு இயக்கம், அசானிய மக்கள் அமைப்பு, பரந்த ஆபிரிக்க காங்கிரஸ், ஐக்கிய சனநாயக முன்னணி, போன்ற இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன.

தென்னாபிரிக்காவின் இந்த இன ஒதுக்கல் கொள்கைக்கு உலகளாவிய எதிர்ப்பு கிளம்பியது. சர்வதேச விளையாட்டுகளில் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது. ஐ.நா உறுப்புரிமை நீக்கப்பட்டது. பெரும்பாலான நாடுகள் தென்னாபிரிக்கவை பகிஷ்கரித்தன. இத்தகைய தொடர் அழுத்தங்களும் போயர் நிர்வாகத்துக்கு எதிரான உள்ளூர் மக்களின் எதிர்ப்பும் அதிகரிக்கவே போயர் அரசு இறங்கி வந்தது.

நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவித்தது. தேர்தல் நடந்து மண்டேலா தலைமையில் சுதேசிகளின் ஆட்சி மலர்ந்தது. 1994பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மண்டேலா தலைமையில் அமைந்த அரசில் டெஸ்மன் டுட்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். நிறவெறியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, இவர் சுயபால்சேர்க்கை உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்தார். இஸ்ரேலிய-, பாலத்தீனிய மோதல்கள், ஈராக் போருக்கு எதிரான அவரது எதிர்ப்பு மற்றும் தென்னாபிரிக்க அரசுத் தலைவர்களான தாபோ உம்பெக்கி, ஜேக்கப் சூமா ஆகியோர் மீதான அவரது விமர்சனப் பார்வை போன்ற பல்வேறு விடயங்களில் அவர் தனது கருத்துக்களை தயக்கமின்றி முன்வைத்தார்.

2010-இல் பொது வாழ்விலிருந்து ஓய்வு பெற்ற போது டெஸ்மன் டுட்டு தென்னாபிரிக்காவின் பெரும்பான்மையான கறுப்பின மக்களிடையே பரவலாக பிரபலமடைந்திருந்தார்.இவரது நிறவெறி எதிர்ப்பு செயல்பாட்டிற்காக சர்வதேச அளவில் பாராட்டப்பட்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக்ெகாண்டார். மேலும் 1986ஆம் ஆண்டு மனிதத்திற்கான அல்பேர்ட் சுவைட்சர் பரிசையும், 1987ஆம் ஆண்டு பாசெம் இன் டெர்ரிச பரிசையும், 1999ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசையும், 2005ஆம் ஆண்டு இந்தியாவின் உயர் கெளரவமான காந்தி அமைதிப் பரிசையும் பெற்றார். 2009ஆம் ஆண்டு இவருக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் சுதந்திரப் பதக்கம் வழங்கப்பட்டது. தனது மேடைப் பேச்சுக்களையும் மேற்கோள்களையும் பல நூல்களாகத் தொகுத்துள்ளார்.

இவர் தான் சார்ந்த கறுப்பினத்தவரின் உரிமைக்காக மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுத்து வந்தார் என்பது கவனிக்கதக்கது. எய்ட்ஸ், காசநோய், சுயபால்சேர்க்கையாளர் மீதான வெறுப்பு, திருநங்கை உரமைகள், வறுமை, இனப்பாகுபாடு என ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அவரது குரல் இறுதிவரை கேட்டுக்கொண்டே இருந்தது.

பேராயர் டுட்டு அவர்களின் மரணத்தை உறுதி செய்த தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோச விடுதலை பெற்ற ஒரு தென்னாப்பிரிக்காவை மக்களுக்கு வழங்கியவர் எனக் குறிப்பிட்டது முற்றிலும் பொருத்தமானதே. ஏனெனில் ஏ​ைனயோர் பயணிக்க பாதை போடுவதுதான் மிகப்பெரிய பணி.

போல்ராஜ் சந்திரமதி
ஊடகக் கற்கைகள் துறை,
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

Comments