ஜல்லிக்கட்டு என்றால் என்ன? | தினகரன் வாரமஞ்சரி

ஜல்லிக்கட்டு என்றால் என்ன?

ஜல்லிக்கட்டு என்ற சொல் மிக  சமீபத்திய வழக்கம்தான். சங்க இலக்கியங்களில் இதனை ஏறு தழுவுதல்  என்கின்றார்கள். மஞ்சுவிரட்டு என்ற சொல்லும் உண்டு. ஆனால் இவற்றுக்கிடையே  நுட்பமான வேறுபாடுகள் உள்ளன.   சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற  வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின்  கழுத்தில் அணிவது தற்போது வழக்கத்தில் உள்ளது . 

அத்தோடு 50ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த  'சல்லிக் காசு' எனும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின்  கொம்புகளில் கட்டி விடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு  அந்த பணமுடிப்பு சொந்தமாகும் . இந்த பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு'  என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது  என்றும் கூறப்படுகிறது. 

சிந்து சமவெளியில் ஜல்லிக்கட்டு  

உலகின் பழமையான நகரங்களில் ஒன்றான சிந்து சமவெளி நகரத்தில்  அகழாய்வுகளில் அங்கு ஜல்லிக்கட்டு நிகழ்ந்திருப்பதற்கான சான்றுகள்  கிடைத்திருக்கின்றன. அங்கு கிடைத்த முத்திரை ஒன்றில் ஒரு வீரன்  துள்ளிவரும் எருதின் எதிர் நின்று அதன் கொம்பை பிடித்து தடுத்து  நிறுத்துவது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 

சிந்துசமவெளி நாகரிகத்தில் கிடைத்த தொல்லியல் பொருட்களில்  உள்ள குறியீடுகளை நவீன முறையில் வாசித்தறிந்து சொன்ன ஐராவதம் மகாதேவன்  போன்ற ஆய்வாளர்கள் அந்த பழைய நாகரீகத்திலேயே ஜல்லிக்கட்டு  இருந்திருக்கிறது என்றும், அது தமிழர் நாகரீகமாக இருப்பதற்கான சாத்தியம்  உள்ளது என்றும் தெரிவிக்கின்றார்கள். 

பழந்தமிழ் இலக்கியங்களில் ஜல்லிக்கட்டு  

ஜல்லிக்கட்டு பற்றி பழந்ததமிழ் இலக்கியங்கள் பலவற்றில்  விரிவாக பதிவாகியுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எட்டுத்தொகை  நூலான கலித்தொகையில் இதனைப்பற்றி பாடல்கள் உள்ளன. மலைபடுகடாம்,  பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் ஆகியவற்றிலும் விரிவான சித்திரங்கள் உள்ளன . 

தொல்காப்பியம் தமிழர் வாழ்வை குறிஞ்சி, மருதம், முல்லை,  நெய்தல், பாலை என ஐந்து நில வாழ்வாக வகுத்துச் சொல்கிறது. இதில், முல்லை  எனப்படும் காடும் காடு சார்ந்த நிலப்பகுதியில் நிகழ்வது ஜல்லிக்கட்டு  என்று கலித்தொகை காட்டுகிறது. காட்டில் வாழும் மக்களுக்கு மேய்ச்சல்தான்  முக்கிய தொழில். இந்த மேய்ச்சல் சமூக மக்களை ஆயர், ஆய்ச்சியர், இடையர்,  இடைச்சியர் என்று தொல்காப்பியம் சொல்கிறது. 

கலித்தொகையில் முல்லைநில வாழ்வைச் சொல்லும் முல்லைக்கலி  என்ற பகுதியில் முதல் மூன்று பாடல்கள் ஜல்லிக்கட்டு பற்றி மிகத் தெளிவாக  காட்டுகிறது. இதற்கு அடுத்து பாடல்களில் குரவைக் கூத்து பற்றிக்  குறிப்பிடப்படுகிறது  

ஏறு தழுவலுக்கும் குரவைக் கூத்தும் தொடர்புள்ளது.  குரவைக்கூத்து ஏறுதழுவல் உரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலோ ஏறு தழுவும்  நாளின் மாலையிலோ ஊருக்குப் பொதுவான இடத்தில் நிகழும். முதல் நாள் என்றால்  தம் காதலரை ஏறுதழுவுவதற்கு தூண்டும் பாடல் பாட்டுகளையும், ஏறு தழுவிய  நாளாயின் தம் காதலர் வெற்றியை கொண்டாடும் பாட்டுகளையும் ஆயர் குல மகளிர்  பாடுவர். 

சங்ககால மேய்ச்சல் சமூகத்தில் ஏறுதழுவுதல் என்பது வெறும்  வீரவிளையாட்டு மட்டுமன்று. அது திருமணத்தோடு தொடர்புடையது. பெண் குழந்தை  பிறந்ததுமே தாங்கள் வளர்த்துவரும் கால்நடை செல்வத்திலிருந்து நல்ல வலுவான  காலைக் கன்றைத் தேர்ந்தெடுத்து, அதை பொலிகாளையாய் வளர்ப்பர் பெற்றோர்.  பெண் திகைத்து மண வாழ்வுக்கு தயாரானதும் வரம் கேட்டு வரும் மாப்பிள்ளையைத்  தாங்கள் வளர்த்து வரும் காளையை அடக்க சொல்லி தேர்வு வைப்பர். அந்த  போட்டியில் வென்றால் தான் அவனால் மணவாளனாக முடியும். 

கொல்லேற்றுக் கோடஞ்சு  
வானை மறுமையும்  
புல்லாளே ஆய மகள்  

என்ற கலித்தொகையின் வரிக்குள் 'கூடி கொல்லுகின்ற ஏறு எனும்  கொம்புடைய காளைக்கு அஞ்சுபவனை மறு பிறப்பிலும் விரும்பமாட்டாள் பெண்'  என்பது பொருள். 

இந்த சங்ககால ஆதாரம் கொண்டு நோக்கும்போது ஜல்லிக்கட்டு  என்பது முல்லை எனும் காடும் காடு சார்ந்த பகுதியிலிருந்துதான் மருதம்  எனும் வயலும் வயல் சார்ந்த பகுதிக்கு நகர்ந்து வந்தது என்பது  உறுதியாகின்றது. விவசாயம் நன்கு தழைத்தோங்கி ஆதிப் பொதுவுடைமை சமூகம்  எனும் பழங்குடி வாழ்வு நீங்கிய, நிலப்பிரபுத்துவம் அல்லது சொத்துடைமை  சமூகத்தில் தான் இந்த சடங்கு முறையில் இருந்து மருதத்துக்கு இடம்பெயர்ந்து  இருக்க வேண்டும். முல்லை நிலத்துக் குடிகள் மருதம் வந்து அங்குள்ள  குடிகளோடு கலந்தபோது இந்தக் கலையும் இங்கு நிலை கொண்டிருக்க வேண்டும். 

ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டும்  

ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு இரண்டும் ஒன்றே என்பர் உளர்.  ஆனால் இரண்டுக்கும் சின்னசின்ன வித்தியாசங்கள் உள்ளன என்கிறார்கள்  ஆய்வாளர்கள். ஏறுதழுவுதல் பழங்கால சடங்கு என்றால் அதன் நவீன வடிவமே  ஜல்லிக்கட்டு. பழங்கால ஏறுதழுவுதல் ஆயர் குடிகளுக்கு இடையே முல்லை  திணையில் நடந்தது. ஜல்லிக்கட்டில் பல்வேறு சமூக மக்களும்  பங்கேற்கிறார்கள்.  குறிப்பாக போர் சமூகங்கள் ஊக்கமுடன் பங்கேற்கின்றனர்.  

இரண்டிலுமே மாட்டின் கொம்பில் கட்டப்பட்டுள்ள பண முடிப்பும்  தைத்திருநாள் முடிந்தபின் விழா நிகழ்வதும் ஒற்றுமைகள். ஆனால், ஏறுதழுவுதல்  எனும் பழைய விளையாட்டு தெய்வ நம்பிக்கையோடு தொடர்புடையதாக இருக்கவில்லை.  மேலும் , அது மணமகனை தேர்ந்தெடுக்கும் வீர விளையாட்டாகவும்  இருந்திருக்கின்றது. 

ஜல்லிக்கட்டு கிராமிய தெய்வங்களின் வழிபாட்டுடன்  தொடர்புடையதாக திகழ்கிறது.

அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய  காலத்திலும், மழையில்லா வறட்சி காலங்களிலும் பிள்ளை வரம் கேட்கும்  நிலையிலும் இந்த ஜல்லிக்கட்டு வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள்  நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதை வேண்டுகோளாக  இருக்கிறது. இந்த பண்பு பழங்கால ஏறுதழுவலுக்கு இல்லை. ஆனால் இவை எல்லாம்  ஒரு வீர விளையாட்டு, ஒரு திணையை விட்டு இன்னொரு திணைக்கு நகர்ந்து வரும்  போது நிகழும் இயல்பான மாற்றங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தொகுப்பு:
எஸ்.மங்களதர்ஷினி

Comments