டொலர் நெருக்கடியும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் | தினகரன் வாரமஞ்சரி

டொலர் நெருக்கடியும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும்

இலங்கையை வாட்டி வதைத்து வரும் டொலர் பற்றாக்குறைப் பிரச்சினையானது எதிர்பாராமல் திடீரென ஏற்பட்ட ஒரு பிரச்சினை அல்ல, மாறாக இலங்கை தானாகத் தேடிப்பெற்றுக்கொண்ட ஒரு பிரச்சினையாகும். விவேகபூர்வமற்ற கொள்கைத் தெரிவுகளும் அக்கொள்கைத் தெரிவுகள் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மைகளும் அந்த நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக அதிகரித்துச் சென்ற முதலீட்டு இடர்நேர்வுகளும் இலங்கையை முதலீட்டுக்கு அபாயாகரமான ஒரு நாடாக சர்வதேச முதலீட்டாளர்கள் கருதச் செய்துள்ளது. இதனால் இலங்கையின் பணச்சந்தையில் வெளிநாட்டவர்களுடைய பங்குபற்றல் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த கடன் கருவியான திறைசேரி பிணையங்கள் இப்போது கேட்போரற்றதாக மாறிவிட்டன.

வெளிநாட்டு குறுங்கால முதலீட்டாளர்கள் இலங்கையிலிருந்து தமது முதலீடுகளை மீளப்பெற்றுக்கொண்டமை டொலர் வெளிச்செல்கையை அதிகரித்தது. மறுபுறம் விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்றுமதிகளில் தொய்வு எற்பட்டது. ஏற்றுமதி வருவாய்கள் வீழ்ச்சியடைந்தன.

இலங்கை இன்னமும் கைகொடுக்கும் என நம்பிக்கொண்டிருக்கும் சுற்றுலாத்துறை சார் டொலர் சம்பாத்தியங்கள் கொரேனா பெருந்தொற்றினால் சடுதியான வீழ்ச்சியைச் சந்திக்க நேர்ந்தது. இலங்கைப் பணியாளர்களை வெளிநாட்டில் வேலைகளுக்கு அனுப்பி அவர்கள் உழைத்து அனுப்பும் டொலர் சம்பாத்தியங்களும் கணிசமான ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டன. காலங்காலமாக ஒரு ஏற்றுமதி இறக்குமதிப் பொருளாதாரமாக செயற்பட்டுவந்த இலங்கையைத் தற்சார்புப் பொருளாதாரமாக சுயதேவையைப் பூர்த்திசெய்யும் நிலைக்கு வலுப்படுத்தும் முயற்சிகள் பெரும்பாலும் தோற்றுப் போய்விட்டதாகவே கருதவேண்டும்.

உலகில் எந்த ஒரு நாடும் இறக்குதிகளைக் கட்டுப்படுத்தி ஏற்றுமதிகளை ஊக்குவித்து பொருளாதார வளர்ச்சியை அடைந்ததாக வரலாறு காட்டவில்லை. மாறாக வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்து ஏற்றுமதிச் சந்தைகளை நாடிய பல்வேறு நாடுகள் தாமாகவே சில வகைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சுயதேவைப் பூர்த்தியடைந்தது மாத்திரமன்றி உலகநாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்யும் பிரதான நாடுகளாகவும் மாறின. அதேவேளை இறக்குமதி பதிலீட்டு பொருளாதார வளர்ச்சி உபாயம் உலகின் பல்வேறு பிரதேசங்களில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டு தோல்வியடைந்த வரலாறுகளே தென்படுகின்றன.

இலங்கையிலும் கூட 1970−1976வரையிலான காலப்பகுதியில் தீவிரமான இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் கீழ் உள்நாட்டிலேயே எல்லாவற்றையும் உற்பத்தி செய்யும் உபாயம் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. மோசமான பொருட் தட்டுப்பாடும் நீண்ட வரிசைகளும் மக்களை வாட்டவே 1977நடைபெற்ற பொதுத்தேர்தலில் படுமோசமான தோல்வியைப் பரிசாக வழங்கி குறித்த அரசாங்கத்தை ஜனநாயக ரீதியில் மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். 1970களில் நிலவிய உலகபொருளாதாரச் சூழ்நிலைகளுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்ட ஓர் உலகிலேயே இப்போது நாம் வாழ்கிறோம்.

இன்றைய நிலையில் இறக்குமதிகளை அனுமதிக்காத நாடுகளால் ஏற்றுமதி செய்யவும் முடியாது. இலங்கை போன்றதொரு நாட்டினால் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்து முன்னேற்றத்தைக் காண முடியாது. இலங்கை இன்று ஏற்றுமதி செய்யும் பொருட்களில் பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகளிலேயே தங்கியிருக்கின்றன. எனவே இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையின் ஏற்றுமதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

டொலர் உள்வருகை குறைந்த வேளை கடன் மீளச் செலுத்தல்கள் கழுத்தை இறுக்கியபோது கடுமையான டொலர் பற்றாக்குறை ஏற்பட்டு டொலரின் பெறுமதி சடுதியாக எகிறியது. மத்திய வங்கி 203ரூபாவுக்குமேல் போக விடமாட்டேன் என்று அதனைக் கட்டி வைத்திருக்கிறது. சந்தையில் அந்த விலைதான் நிலவவேண்டும் என்றால் டொலருக்கு நிலவும் கேள்வி நிரம்பல் நிலைமைகளே அதனைத் தீர்மானிக்க வேண்டும். மத்திய வங்கி கட்டிவைத்துள்ள 203ரூபா விலையில் சந்தையில் டொலர் கிடைக்கவில்லை என்றால் அந்த விலையில் டொலரின் நிரம்பலைவிட கேள்வி அதிகமாக உள்ளதென்றே அதாவது அவ்விலையில் டொலர் பற்றாக்குறை நிலை நிலவுவதாகவே கருதவேண்டும்.

இந்நிலையில் 203ரூபா விலையைப் பேணிச்செல்ல வேண்டுமாயின் சந்தையில் பற்றாக்குறையாக உள்ள டொலர்களை மத்திய வங்கி சந்தைக்கு விற்பனை செய்ய வேண்டும். அப்படி செய்வதற்கு மத்திய வங்கியிடம் போதியளவு டொலர் கையிருப்பு இருக்க வேண்டும். அவ்வாறு போதிளவு கையிருப்புகள் இருந்தாலும் கூட இந்த நடவடிக்கையை நீண்டகாலத்திற்கு தொடர்ந்து செய்ய முடியாது. காரணம் வெகு சீக்கிரமே மத்திய வங்கியின் டொலர் கையிருப்புகள் தீர்ந்து போய்விடும்.

எனவே மத்திய வங்கியிடமிருந்து டொலரைப் பெறமுடியாத நிலையில் மாற்று வழிகளை நாட வேண்டிய கட்டாயத்திற்கு இறக்குமதியாளர்கள் தள்ளப்படுவர். எங்கெல்லாம் சந்தைப்பிறழ்வுகள் ஏற்படுமோ அங்கெல்லாம் கள்ளச் சந்தைகளும் தொழிற்படும். இங்கும் நடந்திருப்பது இதுதான். கள்ளச்சந்தையில் மிக அண்மையில் ஒரு டொலர் 245ரூபாவுக்கு விற்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. மத்திய வங்கி என்னதான் சட்டம் போட்டு தடுக்கிற செயற்பாட்டில் ஈடுபட்டாலும் ஒரு டொலருக்கு மிகப்பெரிய இலாபம் கிடைக்கிற காரணத்தால் திட்டம் போட்டு செய்கிற கூட்டம் அதனைச் சிறப்பாகவே செய்து வருகிறது. இருக்கிற டொலரைக் கொண்டு வாங்கோ 10ரூபா கூடுதலாகத் தருகிறோம் என்று என்னதான் மத்திய வங்கி கூவினாலும் அந்த விலையிலும் தம்மிடமுள்ள டொலரை மத்திய வங்கிக்கு விற்க ஒரு விவேகபூர்வமான நபர் முன்வரமாட்டார். காரணம் சந்தையில் 213ரூபாவை விடக் கூடுதலான விலைக்கு அதனை விற்க முடியும் என்பதாகும். தன்னுடைய வாலைத் தானே விழுங்கிய பாம்பின் நிலைதான் இப்போது இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது. ஓன்றில் விழுங்கியதைக் கக்கிவிட வேண்டும். ஆனால் வாலுக்கு டெமேஜ் ஏற்படுவதைத்தடுக்க முடியாது. அதேவேளை தொடர்ந்து விழுங்கவும் முடியாது. இதேபோல நெடுங்காலம் நீடிக்கவும் முடியாது. கடன்வாங்கி கழுத்து வலிக்கு தைலம்தான் தடவலாம். இலங்கை மத்திய வங்கி கட்டிவைத்துள்ள டொலர் பெறுமதியை அவிழ்த்துவிடவேண்டிய சூழல் வெகுவிரைவிலேயே ஏற்படலாம். நாடுகளிடம் கடன் வாங்கி டொலர் கையிருப்புகளை சேகரித்துக்கொண்டு அப்படிச் செய்தால் சந்தையில் டொலர் பெறுமதி சரிவதை ஓரளவுக்கு மெதுவானதாக மாற்றலாம்.

இப்போதுள்ள நிலையில் ஏற்றுமதி மூலமான டொலர் உள்வருகையையும் இலங்கையர்கள் வெளிநாடுகளில் உழைத்தனுப்பும் பணவருகைகளையும் அதிகரிக்க வேண்டுமாயின் இப்போதைய நாணய மாற்று வீதம் சந்தை மாற்றுவீதத்திற்கு மாறவேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக டொலரின் விலை செயற்கையாக அதிகரித்துள்ளது. நாடு மீண்டும் சந்தையினால் தீர்மானிக்கப்படும் நாணயமாற்று வீதத்திற்கு மாறினால் அந்த விலை குறைவடையக்கூடும். இவ்வாறு செயற்கையாக 203ரூபா மட்டத்தில் டொலர் விலையை மத்திய வங்கி வைத்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ரூபாவின் பெறுமதியை சந்தையில் நிலவும் விலைக்கு சரிய அனுமதித்தால் முதலாவது இலங்கை ரூபாவிலான கடன் மீளச் செலுத்தல் பெறுமதிகள் கணிசமாக அதிகரிக்கும். இரண்டாவது இறக்குமதிகளின் விலைகள் அதிகரிக்கும் இதனால் உற்பத்திச் செலவுகள் கூடும். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருமானங்கள் கணிசமான வீழ்ச்சியைச் சந்திக்கும். இது தவிர வேறுபல தாக்கங்களும் ஏற்படும் இவற்றைச் சந்திக்க முறையான திட்டமிடலும் நடைமுறைப்படுத்தலும் அவசியம்.

நாட்டின் பொருளாதாரத்தை ஒரு நிச்சயமற்ற நிலையில் நீண்டகாலத்திற்கு இயக்கிச் செல்வதனால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளைவிட சந்தை முறைமைக்கு மாறுவதனால் ஏற்படும் வலி குறைவாகவே இருக்கக் கூடும். நாட்டின் வணிக சமூகத்தினர் தொழில் முயற்சியாளர்கள் உட்பட நாட்டின் பெரும்பான்மையினரான நுகர்வோர் இந்த டொலர் நெருக்கடியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டொலர் நெருக்கடியானால் பெருந்தொகையான கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அறியவருகிறது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட இடைநிலை மற்றும் மூலப்பொருள்களும் அவற்றில் இருக்கலாம். உரிய காலத்தில் அவை சந்தைக்குச் சென்றாலே நாட்டின் உற்பத்தி வினியோகம் மற்றும் நுகர்வு நடவடிக்கைகள் ஒழுங்காக இயங்க முடியும்.

நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை டொலர் நெருக்கடியைக் காரணம் காட்டி முடக்க நிலைக்கு இட்டுச்சென்றால் அப்பாதிப்புகளில் இருந்து மீள்வது அவ்வளவு இலகுவானதாக இருக்காது. அது ஒரு விவேகபூர்வமான செயலும் அல்ல. சீனாவிடமும் இந்தியாவிடமும் இலங்கை பெறுகின்ற கடன்கள் வலிக்கு களிம்பு தடவ மட்டுமே பயன்படலாம். விழுங்கிய வாலைக் கக்கித்தான் ஆகவேண்டும். அதற்கு தேவையான மருத்துவ உதவிகளை அதற்கான கென சிறக்குமியல்பு பெற்ற மருத்துவரான சர்வதேச நாணய நிதியத்தை நாடலாம்.

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments