தமிழரின் தனிப்பெரும் பண்டிகை தைப்பொங்கல் பெருவிழா | தினகரன் வாரமஞ்சரி

தமிழரின் தனிப்பெரும் பண்டிகை தைப்பொங்கல் பெருவிழா

முதலாம் திகதி அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாக தைப்பொங்கல்  விழா விளங்குகிறது. தமிழர் திருநாளாக இலங்கை, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியஸ், கனடா, ஐக்கிய ராஜ்யம், அவுஸ்திரேலியா என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகவே கருதப்படுகிறது. 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை. பொங்கற் பண்டிகை உழவர் திருநாள் என்றும் உழைப்பின் உயர்வை எடுத்துக் கூறும் திருநாள் என்றும் அறுவடைத் திருநாள் என்றும் போற்றப்படுகிறது. தைமாதம் முதலாந்திகதி பொங்கல் பண்டிகை நாளாகும். பொங்கலன்று சூரியன் தென் திசையிலிருந்து வடதிசைக்குத் திரும்புவதாக ஒரு ஐதீகம். வான சாஸ்திரத்தின் படியும், சோதிட சாத்திரத்தின் படியும் சூரியன் இம்மாதத்தில் கும்ப லக்கினத்தில் இருந்து மகர லக்கினத்திற்கு வருவதாக கூறப்படுகின்றது. இதை மகர சங்கிராந்தி என்பர். இதுவே பொங்கல் தினமாகும். உத்தராயணத்தின் ஆரம்பம் என்கின்ற இந்த வேளையில் சூரியனுக்கு அர்ப்பணம் செய்து வணங்கும் மரபும் இணைந்திருப்பதனால் இத்தமிழர் பண்டிகை சைவ சமய ரீதியிலும் முக்கியம் பெறுகின்றது. 

தை மாதம் உத்தராயண புண்ணிய காலம் என்பர். அதாவது சூரியன் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வடதிசையில் சஞ்சரிக்கும் காலம் உத்தராயண காலம் எனவும், ஆவணி முதல் மார்கழி வரை தென் திசையில் சஞ்சரிக்கும் காலம் தட்சிணாயணம் எனவும் சொல்லப்படும். 

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் இவ்விரதத்தினைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறி வந்தது. பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில் இந்திர திருவிழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இப்போது, பொங்கல், தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்த காலத்தில் இருபத்தி எட்டு நாட்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் உள்ளன. 

முதல் வருடத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப்பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் முதல் நாள் சூரியனுக்கும் இரண்டாம் நாள் மாலை மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். 

மனித குலத்தின் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமான உணவை உற்பத்தி செய்யும் தொழிலை மனதில் கொண்டு அதற்கு உதவிய சூரியனையும், உழுது உரம் கொடுத்த மாட்டையும், வணங்கி நன்றி செலுத்தி கொண்டாடப்படும் தினம் என்பதே இதற்கு முக்கிய காரணம். உழைப்பை அறுவடை செய்து செல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பலன் பெறக் காரணமாக இருந்த நிலம், நீர், காற்று, சூரியன், கால்நடைகளுக்கு நன்றிப் பெருக்கோடு எடுக்கும் விழாதான் பொங்கல் பெருவிழா! 

தைமாதம் கொண்டாடப்படுவதால் “தைத்திருநாள்“ என்றும் அழைக்கிறோம். உழுது, நாற்று நட்டு, களை எடுத்து, உரமிட்டு, நீர்பாய்ச்சி, கண்ணின் கருமணி போல பாதுகாக்கின்ற காலங்களில் பணம் இருக்காது. அறுவடை முடிந்தால்தான் அவன் கையில் பணம் நிறைந்திருக்கும். அதனால்தான் மகன், மகள்மாருக்கு தையில் திருமணம் செய்விக்கும் வழக்கம் விவசாயிகள் மத்தியில் நிலவியது. “தை பிறந்தால் வழி பிறக்கும் “ என்ற பழமொழியின் அர்த்தம் இதுதான்.  

நன்றி தெரிவிக்க கொண்டாடும் இந்நன்றி திருவிழா மூன்று வகைப்படும். அவற்றுள் ஒன்று, தைப்பொங்கல் விழாவுக்கு முதல்நாள் நடைபெறும் போகிப் பொங்கல். போகி என்பது இந்திரனைக் குறிக்கும். அவன் மேகங்களை இயக்கி மழையை வழங்கும் இறைவனாக கருதப்பட்டான். தமிழ் நாட்டார் காலத்திலிருந்தே இந்திரனை விளை நிலங்களின் தெய்வமாக வைத்து வழிபட்டு வரலாயினர். சோழ வள நாட்டில் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. இப்போகிப் பொங்கலுக்கு அடுத்து வருவது தைப்பொங்கல் பெருநாளாகும். இப்பெருநாள் மேற்குறிப்பிட்டபடி சூரியனை வழிபடும் நாளாகும். இப்பொங்கல் பெருநாளுக்கு அடுத்த நாள் நடைபெறுவது மாட்டுப்பொங்கல் திருநாளாகும். நாட்டுப் புறங்களில் இப்பொங்கல் மிகச்சிறப்பாக நடைபெறும். பண்டை காலத்தில் மாடே செல்வமாக கருதப்பட்டது. மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்ற பொருளுமுண்டு.  

ஒவ்வொரு சமயத்தினதும் அடிப்படைத் தத்துவமானது, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டது. அவ்வகையில் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக கத்தோலிக்கர்களும், கிறிஸ்தவர்களும் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடுவதை யாழ்ப்பாணத்திலும், தமிழ் நாட்டிலும், மலையகத்திலும் ஏனைய சில பிரதேசங்களிலும் கண்கூடாகக் காண முடிகிறது. ஏனெனில் இப்பண்டிகை தமிழரின் தனிப்பெரும் பண்டிகை, கலாசார சிறப்பு பெற்றது.  

இந்தியாவில் தமிழ்நாடு, தவிர்ந்த ஏனைய மாநிலங்களில் மகர சங்கராந்தி எனும் பெயரில் பொங்கல் பண்டிகையைத் தமது கலாசாரத்திற்கேற்ற வகையில் கொண்டாடுகின்றனர். மலையகத்திலும் கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர் மாட்டுப் பொங்கல் அல்லது பட்டிப் பொங்கல் கொண்டாடுகின்றனர். ஒரு காலத்தில் மலையக தோட்டங்களில் ஜல்லிக்கட்டு. சிலம்பாட்டம், கரகாட்டம் போன்ற போட்டிகளையும் பொங்கல் காலத்தில் நடாத்தினர். இது தற்போது மாறி கரப்பந்தாட்டம், கிரிக்கட், கபடி, கால்பந்தாட்டம், பட்டம் விடுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பெருந்தோட்டங்களில் சிறுதெய்வ வழிபாடுகளும் இக்காலத்தில் நடைபெறுவது வழக்கம்.  

இன்றைய தினம் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறும். யாவரும் வாழ்வில் விழுமியங்களை அவ்வாறே கடைப்பிடித்து சிறந்த முறையில் இத் தைத்திருநாளைக் கொண்டாடி மகிழ்வோம்.  

இராசையா மகேஸ்வரன்
கல்விசார் நூலகர், 
பேராதனை பல்கலைக்கழகம், 
இலங்கை

Comments